சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நேற்று (1.6.2023), தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில், ‘விடுதலை’ களஞ்சியம் முதல் தொகுதியினை கவிஞர் ஈரோடு தமிழன்பன் வெளியிட, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., பெற்றுக் கொண்டார்.
தி.மு.க. செய்தித் தொடர்புக் குழுத் தலைவர், மாநிலங்களவை மேனாள் உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், எழுத்தாளர் ப.திருமாவேலன், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோர் பேசினர்.
எழுத்தாளர் ப.திருமாவேலன் ஆய்வுரை நிகழ்த்தி பேசியதாவது:
திராவிட பல்கலைக்கழகத்தின் நிரந்தரமான வேந்தர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். ஒரே ஒரு சாதனையை மட்டும் தான் ஆசிரியர் பாக்கி வைத்திருந்தார் அதுவும் இன்றைக்கு நிறைவேறி இருக்கிறது. அதுதான் விடுதலை களஞ்சியம்.
தமிழர் தலைவர் ஆசிரியருடைய சாதனை என்பது பெரியாருக்கு பின் விடுதலையை விடாமல் நடத்தியது. மேலும், எனக்கு பின்னால் என் வாரிசு என் புத்தகங்கள் தான் என்றார் பெரியார். இன்று, பெரியாருக்கு பிறகு அதிக அளவில் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது. அதிலும் பெரியாரின் புத்தகங்களை பதிப்பிக்காமல் பதிப்பகம் நடத்த முடியாது என்று நினைக்கக் கூடிய அளவில்மாற்றியது ஆசிரியருடைய அடுத்த சாதனை.
பெரியாருக்கு பிறகு திராவிடம் இருக்காது, இந்த இயக்கம் இருக்காது என்று நினைத்தபோது பெரியாரே பரவாயில்லை என்று எதிரிகளை சொல்ல வைத்தது ஆசிரியரின் சாதனை. அதிலும் குறிப்பாக குடிஅரசு, பகுத்தறிவு போன்ற வார இதழ்களை தொகுப்பது என்பது கொஞ்சம் எளிமையான காரியம். ஆனால், விடுதலை போன்ற நாளிதழை தொகுத்திருக்கிறார் என்றால் இது யாரும் செய்ய முடியாத மகத்தான சாதனை.
தமிழர், தமிழினம் பற்றிய செய்திகளை மட்டும் விடுதலையில் திருப்பிப் பார்ப்பதற்கே தனக்கு அய்ந்து ஆண்டுகள் ஆனது. ஆனால் இன்றைக்கு விடுதலை தொகுதியாக வருகிறது என்றால் அது மிகப் பெரிய சாதனையின் தொடக்கம். நீதிக்கட்சியால் திராவிடன் நாளிதழ் தொடங்கப்பட்ட நாள் 01.06.1917. ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்பே திராவிடன் என்று சொல்லை பயன்படுத்துவது இன எதிரிகளை அச்சுறுத்தும் என்று நம் மூதாதையர்கள் சிந்தித்தார்கள்.
தமிழினத்தின் மானத்தைக் காக்க உருவாக்கப்பட்ட இந்த விடுதலை 89 ஆண்டுகள் நடந்திருக்கிறது. அதில் 61 ஆண்டுகாலம் ஆசிரியராக நம் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி இருந்திருக்கிறார். இது இந்த இயக்கத்தின் வரலாற்றில் மட்டுமல்ல, இதழியல் வரலாற்றில், உலகளாவிய அளவில் அனைவரும் பாராட்டிப் போற்ற வேண்டிய காரியமாக அமையும் என்றார்.
இந்த தொகுதியில் முதல் செய்தியாக எனது கண்ணில் பட்டது குழந்தை திருமணங்களை பற்றியது. அது 1936 -ல் சாரதா சட்டத்தின்படி குழந்தை திருமணங்களை பற்றி விடுதலையில் செய்தி வந்திருக்கிறது. அன்று இருந்த சனாதனத்தின் புத்தி 2023 ஆம் ஆண்டிலும் அப்படியே இருக்கிறது. எனவே, இந்த நூலின் தேவை என்பது இன்னும் நூறு ஆண்டுகளுக்கு தேவை.
தந்தை பெரியாரின் தொலைநோக்கு, அவர் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி என்பதை நமக்கு காட்டும். குறிப்பாக 1927-ல் பார்ப்பனர்களுக்கு விரோதமாக நீங்கள் பேசத் தொடங்கினால் உங்களை உயிரோடு விட்டு வைக்க மாட்டார்கள் என்று காந்தியிடம் பெரியார் சொன்னார். 1947 இல் அதுவே நடந்தது.
1945-இல் ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார். ஆனால், அதற்கு முன்பாகவே விடுதலையில் ஹிட்லர் தற்கொலை தான் செய்து கொள்வார் என்று தலைப்பு செய்தி வந்தது. இப்படியாக தொடர்ந்து தந்தை பெரியார் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசியாக இருந்தார் என்ற தரிசனத்தை பெற விடுதலையின் ஒவ்வொரு தொகுதியும் வெளிவர வேண்டும். மிகப்பெரிய போர்வாளாய் மட்டுமல்லாமல், கேடயத்தையும் சேர்த்து நமக்காக வழங்கி இருக்கக்கூடிய ஆசிரியருக்கு நன்றி.
இவ்வாறு, எழுத்தாளர் ப.திருமாவேலன் பேசினார்.