தமிழ் சார்ந்த வாழ்வியல் என்பது அகமும் புறமுமான திணைசார்ந்த மெய்யறிவு, ’பசிப்பிணி மருத்துவம் பேணிய பகிர்தல் அறம், எண்ணையும் எழுத்தையும் கண்ணெனப் போற்றிய அறிவுசார் முன்னுரிமை, ‘அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்; ‘கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே’என்ற சமூகநீதியின் அடித்தளம்; ‘அறநெறி முதற்றே அரசின் கொற்றம்’ என்ற அறம் சார்ந்த அரசியல் தெளிவு; தொல் நிலம், தொல் குடி, தொல் இசை, தொல் புகழ் என்று வேர்களைக் கொண்டாடும் விழுமியம், பாடறிந்து ஒழுகும் பண்பியல்,” யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற பரந்த கண்ணோட்டம், கலந்து இனிது உறையும் பன்மியம் புரிந்த பட்டறிவு. தமிழ், தமிழர், தமிழ்நாடு என்ற முப்பரிமாண கட்டமைப்பின் அடித்தளங்கள் இவை தான்.
பெருமிதம் என்பது தமிழ்நாட்டு மக்களின் உயிர்க்காற்று. பெயரும் பீடும் எழுதி வணங்கிய பண்பியல். அதனால்தான் நம் கைகளில் சங்க இலக்கியம். பெருமையை உணர்த்துவது பழம் பெருமை பேசும் வெற்றுமுழக்கம் அல்ல; தெரிந்து செயல் புரியும் என்ற வினைத்திட்பம்.
ஏப்ரல் 7 ஆம் நாள் (2023) எனது முகநூல் சுவரில், உள்பெட்டியில், “வாட்ஸ்ஆப்” புலனத்தில் “கீழடி செயலி” பற்றிய அடுக்கடுக்கான தொடர்பதிவுகள். அதற்கு முதல்நாள்தான் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அச்செயலியைத் தொடங்கிவைத்திருந்தார். அச்செயலியின் புனை மெய்யாக்கத் திறன் (Augmented Reality) அனைவரது கவனத்தையும் குறிப்பாக இளந்தலைமுறையின் கவனத்தைக் கவர்ந்துள்ளது என்பதை அந்தப்பதிவுகளில் தொனிக்கும் பெருமிதத்தில் வெளிப்படை. அடுத்த ஓரிருநாட்களில் இணையவெளியில் கீழடி பொருட்பண்பாடு, மனிதர்கள், விலங்குகள், அணிகலன்கள் மற்றும் வாழ்வியல் கூறுகள் பற்றி செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பம் வரைந்த தகவல் சார்ந்த அனுமான ஓவியங்கள் இணையவெளியில் தமிழ்த்தொல்லியல் ஆர்வலர்கள் பகிர்ந்து மகிழ்ந்தார்கள். தமிழ்ப்பண்பாடு துடிப்புடன் தொடர்ந்து இயங்குவது இதனால் தான்.
கீழடியில் ரூபாய் 18.43 கோடி செலவில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை நிறுவியுள்ள உலகத்தரம் வாய்ந்த மாபெரும் அருங்காட்சியகம் பற்றிய செய்திகள், காணொளிகளைப் பார்த்து வியப்படைகிறேன். தொல்பொருட்கள், மாதிரிகள், தொடுதிரைகள், சிறு திரையரங்கம், மெய்நிகர் காட்சிக் கூடம், முப்பரிமாணத் தொழில் நுட்பம்.
கீழடி அகழாய்வுகளில் கிடைத்துள்ள தடயங்களும் தரவுகளும் தமிழ்நாட்டில் அரசுருவாக்கம், எழுத்தறிவு, நகர நாகரிகம், சமயச்சார்பற்ற நிலை குறித்த பல்வேறு கருதுகோள்கள் பற்றிய புரிதல்களை அளிக்கிறது. சங்க இலக்கியத்தின் நம்பகத்தன்மையை கீழடி அதிகரித்திருப்பது என்பதில் ஐயமில்லை.
எனக்குத் தெரிந்தவரையில் சங்க இலக்கியம் போன்ற ஒரு செவ்வியல் இலக்கியமும்,
தொல்பொருட்களும் கீழடியில் ஒரு புள்ளியில் நின்று “கைகுலுக்கி” கொள்வது போன்ற ஓர் அதிசயத்தை இந்தியாவில் நான் வேறு எங்கும் பார்த்ததில்லை. இதைப்போலவே தொடர் அகழாய்வுகள் நடைபெறும் போதே உலகத்தரத்தில் அருங்காட்சியகத்தை ஒரு மாநில அரசு அமைத்திருப்பதற்கும், ஆயிரக்கணக்கான மக்கள் தினம்தோறும் திருவிழாக்கூட்டம் போல சென்று மகிழ்வதற்கும் இன்னொரு இணைச்சான்று இல்லை. கீழடி அகழாய்வுத்தலம் திறந்தவெளி தலமாக அமைக்கப்பட உள்ளது என்றும் அறிகிறேன். தமிழின் தொல்புகழை நிலைநிறுத்தும் தாங்கரும் மரபின் தமிழ்நாட்டு அரசை வாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன்.
நான் தொலைதூரத்தில் ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரத்தில் வாழ்பவன். ஆனாலும், தமிழ்நாட்டு நிகழ்வுகளை உன்னிப்பாக அன்றாடம் கவனிப்பவன். இந்தக் கட்டுரையில் நான் எழுதும் செய்திகளை தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை இயக்குநர் சிவானந்தம், தமிழ்நாடு பாடநூல் நிறுவன இணை இயக்குநர் சங்கர சரவணன் ஆகிய இருவரையும் தொடர்புகொண்டு உறுதிசெய்துகொண்டேன்.
தமிழ்நாடு மாநில அரசின் தொல்லியல் துறை ஒரே நேரத்தில் எட்டு இடங்களில் அகழாய்வு செய்கிறது என்பது தமிழ்நாட்டு வரலாற்றில் முதல்முறை.
அண்மையில் நடைபெற்ற அகழாய்வுகளின் விளைவாக பழமைவாய்ந்த பொருநை
ஆற்றங்கரை நாகரிகம் பற்றிய புத்தொளித் தரவுகள் பொதுவெளிக்கு வந்துள்ளன. “பேர் இசை கொற்கை” என்று சங்க இலக்கியத்தால் போற்றப்பட்ட பழங்காலப் பாண்டியர் துறைமுகமான கொற்கையை கண்டறிவதற்கு கடற்கரை பகுதிகளில் முன்கள புலஆய்வுகள் நடைபெற்றுள்ளன. மயிலாடும்பாறை அகழாய்வில் 4200 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு பற்றிய தரவுகள் வெளிப்பட்டுள்ளதாக அறிகிறேன்.
அகழாய்வில் கிடைத்த எலும்புகளை மரபணு சோதனைக்கு உட்படுத்துதல், அகழாய்வு மட்பாண்டங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட நுண்துகளைப் பகுப்பாய்வு செய்து அக்கால உணவு பொருட்களை கண்டறிதல், விலங்கு மற்றும் பறவைகளை தொல்லியல் தரவுகள் மூலம் அடையாளம் காணுதல், சங்க காலத்தில் இரும்புத் தொழில்நுட்ப முறையைப் பயன்படுத்தினர் என்பதை ஆய்வின் மூலம் உறுதிசெய்தல், கடல்வழி வணிகம் நடைபெற்றதை சான்றுகள் மூலம் நிறுவுதல் போன்ற பல முன்னெடுப்புகள் பாராட்டுக்குரியவை.
மக்களின் வாழ்வியல் வரலாறே உண்மையில் வரலாறு. மக்களே வரலாற்றின்
உடமையாளர்கள். எனவே தொல்லியல் மற்றும் வரலாறு சார்ந்த விழிப்புணர்வை
பரவலாக்குவது அரசின் கடமையாகும். சென்னை, சிவகங்கை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், விருதுநகர் ஆகிய இடங்களில் கீழடி மற்றும் பொருநை நாகரிக அகழாய்வுத் தொல்பொருட்கள் பற்றிய கண்காட்சிகள் நடைபெற்றுள்ளன. பள்ளி மற்றும் கல்லூரிகளில் தொல்லியல் மன்றங்கள் அமைத்தல், பொதுமக்கள் இடையே தொல்லியல் குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்த மரபு நடைகள், மாணவர்கள் இடையே தொல்லியல் மற்றும் மரபு சார் புரிதலுக்கு பல்வேறு போட்டிகள், உலக மரபு வார விழா கொண்டாடுதல் போன்றவை திட்டமிடப்பட்டுள்ளன என்றும் அறிகிறேன். காத்திருக்கிறோம்.
அதுமட்டுமின்றி, தொல்லியல் மற்றும் கல்வெட்டு குறித்தான கல்வியை மாணவர்களுக்கு கள ஆய்வு, பல்துறை நோக்கோடு அறிவியல் அணுகுமுறையோடு பகுப்பாய்வு செய்து தமிழ் நாட்டின் தொன்மையையும் பண்பாட்டினையும் பண்டைய தொழில் நுட்பங்கள் பற்றிய தரவுகளையும் வரும் தலைமுறையினருக்கு எடுத்துச் செல்ல தொல்லியல், கல்வெட்டியல், மரபு மேலாண்மை ஆகியவற்றில் ஈராண்டு முதுநிலை பட்டய படிப்புகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொல்லியல் துறை மூலம் நடத்தப்பெற்று வருகின்றன. இது ஒரு முன்மாதிரியான நடவடிக்கை.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் , ஆசிரியர்கள், ஆர்வலர்கள் ஆகியோரிடையே
விழிப்புணர்வையும் ஊக்கத்தையும் ஏற்படுத்த ”தொல்லியல் ஓர் அறிமுகம்” என்ற தலைப்பில் பணிப்பட்டறைகள் நடைபெற்றுவருகின்றன. பாறை ஓவியங்கள் ஆவணப்படுத்துதல் ஆகியவையும் நடைபெறுகிறது. தமிழ் நாட்டு வரலாற்றினை மீட்டுருவாக்கம் செய்யத் தேவையான முதன்மைத் தரவுகளான கல்வெட்டுகள் நூலாக ஆறு தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஆறு தொகுதிகள் வெளிவரவுள்ளன.
வரலாறு என்பது பயனுள்ளது; முக்கியமானது என்பதையெல்லாம் தாண்டி, வரலாறு என்பது தவிர்க்கமுடியாததும் தப்பிக்கமுடியாததும் ஆகும். தரவுகளால் நமது கடந்தகாலத்தை நாம் கட்டமைக்கவேண்டும்; இல்லையெனில் கட்டுக்கதைகள் நம்மீது கட்டவிழ்த்து விடப்படும். இதற்கான ஒரே வழி அறிவியல் அணுகுமுறையோடு தரவு சார்ந்த வர்லாற்றை மீள்கட்டமைப்பதே ஆகும்.
எடுத்துக்காட்டாக, பானை செய்தலும், சுட்ட செங்கல் தயாரிப்பும் பண்டைய தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கியமான மைல்கல்கள் ஆகும். குயவர்களை “கலம் செய் கோ”, “முதுவாய் குயவ”, “வேட்கோ” என்று பலவாறு போற்றுகிறது சங்க இலக்கியம். ஆனால் இடைக்காலத்தில் வந்த சாதியப் படிநிலை அணுகுமுறைகளில் கைவினைக்கலைஞர்களின் சமூகமதிப்பு தாழ்த்தப்பட்டது. இப்போது கீழடி அருங்காட்சியகத்தில் பழங்காலத்து கருப்பு சிவப்பு பாண்டங்களும், செங்கற்சுவர்களும், எழுத்துப்பொறிப்பு மற்றும் கீறல்களோடு கூடிய
மட்பாண்டச் சில்லுகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி கீழடி
அருங்காட்சியகத்தில் “கலம் செய் கோ” என்ற தலைப்பில் ஒரு கட்டடம், காட்சிப்பிரிவு
அமைந்திருப்பதைக் காணொளியில் பார்த்ததுமே எனக்கு சங்க இலக்கியம் தான் நினைவுக்கு வந்தது. சங்க இலக்கியத்தை எப்படி மீள்வாசிக்கவேண்டும்; நமது பண்பாட்டு வரலாற்றை எப்படி மீள்கட்டவேண்டும் என்று பாடம் நடத்துகிறது கீழடி. தமிழ்ச் சமூகவரலாற்றின் மறைக்கப்பட்ட அடியாழங்களை அகழ்ந்தெடுத்துக் கொண்டாடும் நெகிழ்வான தருணம் இது. இந்த நாளை வரலாறு குறிப்பெடுத்துக்கொள்ளும்.
சிந்துவெளிக் குறியீடுகளுக்கும் தமிழ்நாட்டு மட்பாண்ட கீறல்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமையை ஆய்ந்தறிந்து ஆவணப்படுத்தும் திட்டம் ஒன்றை தமிழ்நாடு அரசு அறிவித்து செயல்படுத்திவருகிறது. சிந்துவெளி எழுத்துகள் மற்றும் வரலாற்றுக் காலகட்டத்தில் இந்தியத் துணைக்கண்டத்தில் தோன்றிய எழுத்து வகைகளுக்கு இடையிலான தொடர்பு மற்றும் இடைவெளியை புரிந்துகொள்வதற்கு இந்த ஒப்பாய்வு மிகவும் உதவக்கூடும்.
தமிழைச் செம்மொழியாக அறிவிக்கச் சான்றுகளாக அமைந்த தமிழிக் கல்வெட்டுகள்
பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழரின் அடையாளங்களைத் தேடி வெளிநாடுகளிலும் அகழாய்வு நடத்தப்படவுள்ளன. பொருநை அருங்காட்சியகம் ரூ33 கோடியில் திருநெல்வேலிக்கு அருகே அமைக்கப்படவுள்ளது. பூண்டி, தர்மபுரி, குற்றாலம் அகழ்வைப்பகங்கள் ரூ10கோடியில் புதிய கட்டடங்களுடன் மேம்படுத்தப்படவுள்ளது. கள
ஆய்வு மற்றும் அகழாய்வுகளுக்கு ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அடுக்கடுக்காக அடுத்தடுத்து செய்திகள்
கங்கை வெற்றியின் நினைவாக கட்டியெழுப்பிய கங்கை கொண்ட சோழபுரம் நகரில்
அகழாய்வின் மூலம் அரண்மனையின் அடித்தளம் வெளிக்கொணரப்பட்டன. கங்கை கொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த ஆய்வறிஞர் ஐராவதம் மகாதேவன் நினைவாக ஆண்டு தோறும் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.
ஒரு மொழியின் பண்பாட்டின் எதிர்காலம் அதன் இளந்தலைமுறைகளின் கையில் இருக்கிறது.
இப்படி ஒரு தலைமுறை மற்றொரு தலைமுறையிடம் ஒப்படைத்த பெருமிதம்தான் இப்போது நமது கரங்களில் சங்க இலக்கியங்களாகவும் திருக்குறளாகவும் ஏனைய இலக்கியங்களாகவும் மிளிர்கின்றன. அந்த வகையில் தமிழ்மொழியை மாணவர்களிடம் ஒப்படைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு நல்ல பல முன்னெடுப்புகளை எடுத்துள்ளது. மாவட்டம் தோறும் புத்தகத் திருவிழா நடத்துவதோடு சென்னை மற்றும் நதிக்கரை நகரங்களான நெல்லை (பொருநை),
மதுரை (வைகை), தஞ்சை (காவேரி), கோவை (சிறுவாணி) ஆகிய இடங்களில் இலக்கியத் திருவிழாக்களை நடத்தி மண்ணின் மைந்தர்களான எழுத்தாளர்களை ஊக்குவித்து வருகிறது.
தமிழ்நாடு அரசு முன்னெடுத்திருக்கும் சொற்குவைத் திட்டத்தில் துறைசார் அகராதிகள் வெளியிடும் திட்டம், தமிழ் மற்றும் இந்தோ – ஐரோப்பிய மொழிகள் ஒப்பீட்டு அகராதித் திட்டம், எளிய உரையுடன் சங்க இலக்கியங்களை பதிப்பித்தல், உள்ளிட்ட பல்வேறு தமிழ்ப் பணிகள் வாழ்த்தி வரவேற்கத்தக்கவை.
‘சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா’. இது ஒரு மாநில அரசின் மாபெரும் முதல்
முன்னெடுப்பு. மூன்றே மாதங்களில் திட்டமிட்டு நடத்தப்பட்ட முத்தாய்ப்பான விழா. இதில் முப்பதிற்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றதும், 350-க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதும் குறிப்பிட்டுப் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இது உலக இலக்கியங்களைத் தமிழுக்கும், தமிழ் இலக்கியங்களை உலகுக்கும் கொண்டு சேர்க்கும் ஓர் உன்னத விழா.
கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ என்ற பெயரில் தமிழ், மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரைகளை சொல்லேர் உழவர்களையும், துறை வல்லுநர்களையும் கொண்டு தமிழ்நாடு அரசு நூறு கல்லூரிகளில் நடத்துவது, எதிர்காலத் தமிழ்ச் சமூகத்திற்கு வளமான வழியைக் காட்டும் நிகழ்வாக அமைந்துள்ளது தமிழ்நாட்டு மக்கள் தங்களது தனித்துவமான விழுமியங்களை அவை சார்ந்த பெருமிதங்களை ஆவணப்படுத்தவும் கொண்டாடவும் தொடர்ந்து போராடவேண்டிய தேவை இருந்துவந்துள்ளது. ஆகச்சிறந்த செவ்விலக்கியம், தொனமையான எழுத்துமுறை, பெயரும் பீடும் எழுதிய நடுகற்கள், ஓலைச்சுவடிகளின் எண்ணிக்கைப் பெருக்கம், முதலில் அச்சேறிய இந்தியத் துணைக்கண்ட மொழி என்ற பெருமிதம், இன்று இணையத்திலும் தொடரும் புத்தெழுச்சி என்று தமிழ் தொடர்ந்து இயங்கிவருகிறது. ஆனாலும், தமிழ்த்தாய் வாழ்த்தின்போது கட்டாயம் எழுந்து நிற்கவேண்டும் என்று 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் தெளிவான அரசாணை பிறப்பிக்கவேண்டிய சூழலும் நிலவுகிறது என்பதுதான் களநிலவரம்.
அதுவே நம்மை மேலும் விழிப்புடன் செயல்படுத்தத் தூண்டுகிறது.
தமிழ்நாடு என்பது வெறும் பெயர்ப்பலகை அல்ல. தோற்றத்தொன்மையுடன் தொடரும் இளமையுடன் இயங்கும் செம்மொழித் தமிழின் இருப்பின் பெருமிதம். தமிழ்நாட்டு மக்களைப் பொறுத்தவரையில் தமிழ் என்பது கூட்டு உளவியலில் நீக்கமற நிறைந்திருக்கும் உணர்வும் பட்டறிவால் பட்டை தீட்டப்பட்ட கருத்தியலும் ஆகும்.

