மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் சைனிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 2024 – 2025 ஆம் கல்வி ஆண்டுக்கு 6 ஆம் வகுப்பு, 9 ஆம் வகுப்பு மாணவர் – மாணவியர் சேர்க்கை நுழைவுத்தேர்வுக்கு டிசம்பர் 16 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
சைனிக் பள்ளிகள் என்பது இந்தியாவில் உள்ள மத்திய CBSE கல்வி வாரியத்துடன் இணைந்த ஆங்கில வழி Residential schools கல்வித் திட்டமாகும். தேசிய பாதுகாப்பு அகாடமி – National Defence Academy, இந்திய கடற்படை அகாடமி – Indian Naval Academy போன்ற பாதுகாப்புத் துறை கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு மாணவர்களை தயார்படுத்துவதே இந்த சைனிக் பள்ளிக் கல்வியின் முதன்மை நோக்கமாகும்.
இந்த சைனிக் பள்ளி நுழைவுத்தேர்வு 2024 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதி நாடு முழுவதும் 186 நகரங்களில் நடைபெறுகிறது. இந்தத் தேர்வு கொள்குறி வகையில் இருக்கும். அதாவது ஒரு கேள்விக்கு நான்கு விடைகள் கொடுக்கப்படும். அதில் மிகச்சரியான ஒன்றைக் குறிக்க வேண்டும். 9 ஆம் வகுப்பு சேர்க்கை வினாத்தாள் ஆங்கில வழியில் மட்டுமே இருக்கும். 6 ஆம் வகுப்பு வினாத்தாள் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் இருக்கும். எனவே, தமிழ்நாட்டைச் சேர்ந்தோர் 6 ஆம் வகுப்பு நுழைவுத்தேர்வை தமிழ் வழியில் எழுதலாம்.
6 ஆம் வகுப்பு சேர்க்கைக்கு விண்ணபிக்கும் மாணவ – மாணவியர் வயது 31.03.2024 அன்று 10 வயது முதல் 12 வயதுக்குள் இருக்க வேண்டும். 9 ஆம் வகுப்பு சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் மாணவ – மாணவியர் வயது 31.03.2024 அன்று 13 வயது முதல் 15 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பொதுப்பிரிவினர், ராணுவ வீரர்களின் பிள்ளைகள், முன்னாள் ராணுவத்தினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் 650 ரூபாய். ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு 500 ரூபாய். நவம்பர் 7 ஆம் தேதி தொடங்கிய விண்ணப்பப் பதிவானது டிசம்பர் 16 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
நாடு முழுவதும் மொத்தம் 59 சைனிக் பள்ளிகள் உள்ளன. தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதியில் பாதுகாப்பு அமைச்சகம் நடத்தும் ஓர் அமராவதி சைனிக் பள்ளியும் தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தில் தனியார் டிரஸ்ட் நடத்தும் சைனிக் பள்ளி ஒன்றும் செய்லபடுகிறது.
இந்தத் தேர்வுக்கு https://exams.nta.ac.in/AISSEE/ என்ற இணையத்தளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 16. தகுதியும் ஆர்வமும் உடையயோர் உடனே விண்ணப்பிக்கலாம்.