சென்னை ஐஐடி, பி.எஸ் (எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ்) பாடத்திட்டத்தை நடத்துகிறது. மின்னணுவியல் உற்பத்தித் துறையில் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் இந்தப் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு மின்னணுத் துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்த 4 ஆண்டு பாடத்திட்டத்தை சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 27 ஆகஸ்ட் 2023 அன்று கடைசி நாளாகும். ஆர்வமுள்ளவர்கள் இந்த இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம் https://study.iitm.ac.in/es/
இந்தப் பாடத்திட்டத்தில் சேர ஜேஇஇ அவசியம் இல்லை. பாடத்திட்டம் இணையதள முறையில் வழங்கப்படும். எனவே, இது அனைத்து மாணவர்களுக்குமானது. இயற்பியல் மற்றும் கணிதத்துடன் 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பிஎஸ் பாடத் திட்டத்துக்கு 25 ஜூன் 2023 அன்று முதல் சுற்று விண்ணப்பப் பதிவு நிறைவடைந்தது. அது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதில் நாடு முழுவதிலும் இருந்து 1800-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இந்தத் திட்டம் குறித்து சென்னை ஐஐடியின் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் துறை பேராசிரியரும், சென்னை ஐஐடியின் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் எஸ்.அனிருத்தன் கூறுகையில், இந்தப் பாடத் திட்டம் கடினமானது என்றாலும் நெகிழ்வுத் தன்மையுடன் கூடியது என்றார்.
இந்த திட்டத்தில் பட்டம் பெறும் மாணவர்கள் ஆட்டோமோட்டிவ், செமிகண்டக்டர் மற்றும் பாதுகாப்பு போன்ற தொழில் துறைகளில் \ வேலைவாய்ப்புகளைப் பெறலாம்.