அமலாக்கத்துறையின் 17 மணிநேர சோதனையின் போது, உடல்நலக்குறைவுக்கு உள்ளான அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனையில் வியாழனன்று இதய அறுவைச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவருக்கு இதயத்திற்கு செல்லும் மூன்று ரத்தக் குழாய்களில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், இந்த இதய அறுவைச் சிகிச்சை அவசியம் என்பதால், செந்தில் பாலாஜியை காவலில் வைக்கக் கூடாது என்று அவரது வழக்கறிஞர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. எனினும், செந்தில் பாலாஜியை ஜூன் 28 வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு முதன்மை அமர்வு நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதனால், செந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கையை நிராகரிக்கக் கோரி, திமுக தரப்பில் 3 மனுக்கள் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
நேரில் சென்று நலம் விசாரித்த முதல்வர்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை, முதல்வர் மு.க ஸ்டாலினும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கே நேரில் சென்று நலம் விசாரித்தார். செந்தில் பாலாஜியின் தோளைத் தொட்டு ஆறுதலாக பேசினார். முதல்வர் நேரில் வந்ததைப் பார்த்த செந்தில் பாலாஜி படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்து பேசினார். இந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், “விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று சொன்ன பிறகும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்படும் வகையில் சித்ரவதை கொடுத்த அமலாக்கத்துறையின் நோக்கம் என்ன? வழக்கிற்குத் தேவையான சட்ட நடைமுறைகளை மீறி மனிதநேயமற்ற முறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடந்து கொண்டிருப்பது தேவையா?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், “பாஜக-வின் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் திமுக அஞ்சாது”; என்றும் “2024 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” என்றும் சாடினார்.
3 முக்கிய ரத்தக் குழாய்களில் அடைப்பு
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 3 முக்கிய ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டிருப்பதால், அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலைமை உள்ளதாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அறிவித்தனர். உயர் ரத்த அழுத்தம், நெஞ்சுவலி காரணமாக செந்தில் பாலாஜி ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில், செந்தில் பாலாஜிக்கு அவருடைய உயர் ரத்த அழுத்தம் 160/100 என்ற அளவிற்கு அதிகமாக இருந்தது. இதயத் துடிப்பில் மாற்றம் இருந்தது. இசிஜி (ECG)-யில் சில மாறுதல்கள் இருந்ததால் அவருக்கு மாரடைப்பு வராமல் இருக்க, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டார்.
அங்கு செந்தில் பாலாஜியின் இதயத் துடிப்பும் ஆக்சிஜன் அளவும் தொடர்ந்து கண்கா ணிக்கப்பட்டது. அவருக்கு மாரடைப்பு ஏற்படாமல் தடுப்பதற்கான சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன. இந்நிலையில் இதயத்தில் ரத்தக் குழாய்களில் ஏதேனும் அடைப்பு இருக்கிறதா, என்பதைக் கண்டறிய மருத்துவர்கள் அவரைப் பரிசோதனை அறைக்கு அழைத்துச் சென்றார்கள். அந்த சோதனையின் முடிவு கள் வெளியான நிலையில், அமைச்சர் செந்தில் பாலா ஜிக்கு 3 முக்கிய ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டி ருந்தது தெரியவந்தது. இதனடிப்படையில், செந்தில் பாலாஜிக்கு, பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். இதை செய்வதற்கு ஒரு வாரமாவது ஆகும் என்பதால், செந்தில் பாலாஜி இரண்டு வாரங்களுக்கு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையின் இதய சிகிச்சை நிபுணர்களின் கண்காணிப்பிலேயே இருக்க வேண்டும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இந்தப் பின்னணியில், திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப் பட்டது. அதில், “செந்தில் பாலாஜியை கைது செய்வ தற்கான ஆதாரத்தை அமலாக்கத்துறை வழங்க வில்லை. அவர் சட்டப்படி கைது செய்யப்பட்டி ருந்தால், அமலாக்கத்துறை ஏன் அதை அதிகாரப்பூர்வ மாக அறிவிக்கவில்லை” என்று கேள்வி எழுப்பி யிருந்தது. அவர் கைது செய்யப்பட்டு உள்ளார் என்றால் உடனடியாக உடல்நிலையை காரணம் காட்டி பெயில் வழங்க வேண்டும்” என்று கூறியிருந்தது. அதேபோல, “என் கணவரை காணவில்லை அல்லது அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. அதனால் அவரை கண்டுபிடிக்க வேண்டும்” என்று செந்தில் பாலாஜியின் மனைவி மேகலாவும் தனியாக ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்கள், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுந்தர், சக்திவேல் ஆகியோர் அமர்வு முன்பு அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
வழக்கின் பின்னணி
தற்போதைய திமுக அரசில், மின்சாரம், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக இருக்கும் வி. செந்தில் பாலாஜி முன்பு அதிமுக-வில் இருந்தவர். அந்த வகையில், ஜெயலலிதா தலைமையி லான அதிமுக ஆட்சியில் 2011 முதல் 2015 வரை போக்கு வரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தார். இந்நிலையில், 2014-ஆம் ஆண்டில் போக்குவரத்து துறையில் ஓட்டுநர், நடத்துநர், இளநிலை உதவியாளர், இளநிலை பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்புக்கான பணி நடைபெற்றது. இந்தப் பணி நியமனங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட துறை அதிகாரிகள் பலர் முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், குறிப்பாக, 81 பேருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 1.62 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. 2015-ஆம் ஆண்டு தேவசகாயம் என்பவர் அளித்த புகாரின் பேரில் ஏமாற்றுதல், சதி மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
எனினும், முதல் தகவல் அறிக்கையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயர் இடம்பெறவில்லை. போக்குவரத்துக் கழகத்தில் வேலைகளைப் பெற்றுத் தர பலரிடம் லஞ்சம் பெறப்பட்டதாக, 2018-ஆம் ஆண்டு மெட்ரோ போக்குவரத்துக் கழக தொழில்நுட்ப ஊழியரான அருள்மணி என்பவர் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட பலர் மீது புகார் அளித்தார். உயர்நீதிமன்ற உத்தரவை யடுத்து, செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார், மைத்துநர் கார்த்திக், போக்குவரத்துக் கழக அதி காரிகள் என 40-க்கும் மேற்பட்டோர் மீது மத்திய குற்றப் பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.
சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தன் மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம், குற்றம்சாட்டப்பட்டவர் மற்றும் சாட்சியங்கள் 13 பேரும் சமரசத்தை எட்டியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப் பட்டதால், செந்தில் பாலாஜி மீதான குற்றவியல் வழக்கு களை நிறுத்திவைப்பதாக உத்தரவிட்டது. இதனிடையே, செந்தில் பாலாஜி மீது பணமோசடி வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. இதற்கு எதிராகவும் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி னார். இதையடுத்து, அமலாக்கத்துறையின் சம்மனை நிறுத்திவைத்து உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், செந்தில் பாலாஜி மீதான முந்தைய வழக்குகளில் புதிதாக விசாரணை நடத்த வேண்டும் என ஆணையிட்டது.
இந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜி மற்றும் பாதிக்கப்பட்டோர் என மூன்று தரப்பிலும் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. விசாரணைக்கு அழைத்த சம்மனை ரத்து செய்ததற்கு எதிராக அமலாக்கத்துறையும், பழைய வழக்குகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி செந்தில் பாலாஜி தரப்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது. காவல்துறை விசாரணையில் நம்பிக்கை இல்லை என்பதால் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என பாதிக்கப்பட்டோர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்குகளில் கடந்த 2023 மே 16 அன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணா முராரி, ராம சுப்பிரமணியன் அமர்வு, 2 மாதங்களுக்குள் வழக்கை விசா ரித்து முடித்து அறிக்கை அளிக்குமாறு தமிழ்நாட்டின் மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு உத்தரவிட்டனர். பணமோசடி வழக்கு தொடர்பாக விசாரிக்க அம லாக்கத்துறை அனுப்பிய சம்மனை சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய்தது செல்லாது எனவும் தீர்ப்பளித்த னர். மேலும், வழக்கு விசாரணையைப் பொறுத்து, சிறப்பு புலனாய்வு குழு அமைப்பது தொடர்பாக எதிர்காலத்தில் பரிசீலிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்களிலும் செந்தில் பாலாஜிக்கு எதிராக உத்தரவு வெளியான நிலை யில், அதனையே தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட ஒன்றிய பாஜக கைப்பாவையான அமலாக்கத்துறை, தற்போது நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
வருமான வரித்துறை சோதனை
தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரான வி. செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகங்க ளில், கடந்த மே 26 அன்று வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். முதலில் 40 இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனை மறுநாளே 200 இடங்களாக அதி கரிக்கப்பட்டது.
செந்தில் பாலாஜியின் இளைய சகோதரர் அசோக் குமார் மற்றும் நெருங்கிய நண்பர்கள், அவருக்கு நெருக்கமான ஒப்பந்ததாரரான சங்கரானந்தா உள்ளிட்டோரின் வீடு, அலுவலகங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. பாஜக மாநில மக ளிர் அணி செயலாளராக இருந்த மைதிலி வினோ, செந்தில் பாலாஜி மூலமாக அண்மையில் திமுக-வில் இணைந்தார். இந்நிலையில், அவரிடமும் வருமான வரித்துறை அதிகாரி கள் விசாரணை நடத்தினர். மொத்தம் 8 நாட்களுக்கு மிக நீண்ட வருமான வரித்துறை சோதனையாக இது இருந்தது. இது தமிழ்நாட்டில் விவாதங்களை எழுப்பியது.
இந்நிலையில்தான், வருமான வரித்துறையைத் தொடர்ந்து, செவ்வாயன்று அமலாக்கத்துறையும் செந்தில் பாலாஜியைக் குறிவைத்து திடீர் சோதனையில் இறங்கியது. முன்பு வருமானவரித்துறை சோதனையின் போது செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை செய்யப்படவில்லை. அவரின் இளைய சகோதரர், உறவினர்கள் மற்றும் நெருக்க மானவர்களின் வீட்டில்தான் சோதனை நடைபெற்றது.
ஆனால், அமலாக்கத்துறை நேரடியாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லத்திலேயே சோதனையில் ஈடுபட்டது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லம், மந்தைவெளி பிஷப் கார்டன் பகுதியில் உள்ள அவரது சகோதரர் அசோக்குமார் இல்லம் ஆகியவற்றில் காலை 8.30 மணிக்கு சோதனையைத் துவங்கிய அமலாக்கத்துறை அதிகாரிகள், நள்ளிரவு 1:30 மணி வரை 18 மணி நேரமாக சோதனையைத் தொடர்ந்த னர். இரவு 12 மணி வரை, செந்தில் பாலாஜியின் கரூர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
மத்திய துணை ராணுவ படை வீரர்களை வைத்துக் கொண்டு அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையை நடத்தினர். முன்னதாக, பிற்பகல் 2 மணிக்கு சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டின் முன்பு, திடீரென மத்திய அதிவிரைவுப்படை குவிக்கப்பட்டது. அப்போது, செந்தில் பாலாஜியின் வீட்டுக்கு விரைந்த தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, ’’காலை முதலே சோதனை நடக்கிறது. நாங்கள் செந்தில் பாலாஜியைப் பார்க்க வேண்டும். எப்படி இருக்கிறார் எனத் தெரிந்து கொள்ள வேண்டும். என்னை மட்டும் உள்ளே அனுப்புங்கள் இல்லை, செந்தில் பாலாஜியை வெளியே அழைத்து வாருங்கள், பார்க்க வேண்டும்” என அமலாக்கத்துறை அதிகாரிகளி டம் முறையிட்டார். ஆனால், அவர்கள் அனுமதி மறுத்து விட்டனர்.
இதனிடையே, செந்தில் பாலாஜி வீடுகளில் மட்டு மல்லாது, பிற்பகல் 12 மணியளவில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையிலும் அமலாக்கத்துறையினர் சோதனை செய்தனர். 10 மணிநேரமாக இங்கு சோதனை நடைபெற்றது. இரவு 12.30 மணிக்கு அங்கிருந்து கிளம்பிய அதிகாரிகள் சில நிமிடங்களில் மீண்டும் தலைமைச் செயலகத்திற்கு வந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி அறையில் உள்ள மூன்று கணினிகளை ஆய்வுக்கு உட்படுத்தினர். பின்னர், அனைத்து இடங்களிலும் சோதனையை முடித்துக் கொண்ட அதிகாரிகள், நள்ளிரவு 1.30 மணிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜியை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
திடீர் உடல்நலக்குறைவு
இந்நிலையில்தான், அமைச்சர் செந்தில் பாலாஜியை, அமலாக்கத்துறையினரே சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அமலாக்கத்துறையினர் அழைத்து வரும்போது, செந்தில் பாலாஜி முகத்தை கையால் மூடிக்கொண்டு, மற்றொரு கையால் நெஞ்சை பிடித்துக்கொண்டு வலி தாளாமல் கதறியபடியும், அழுது துடித்தபடியும் இருந்தார். செந்தில் பாலாஜிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது குறித்து, அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரது சகோ தரரிடம் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
எனினும், செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு உள்ளதாகவோ, எதற்காக விசாரணைக்கு அழைத்துச் சென்றோம் என்பது பற்றியோ அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வ மாக எதுவும் தெரிவிக்கவில்லை. விசாரணைக்கு அழைத்து செல்லும் போது ஏதா வது உடல்நலக்குறைவு பிரச்சனை இருப்பதாக கூறினால், அவர் விரும்பும் மருத்துவமனைக்கு செல்வதற்கு அம லாக்கத்துறை அதிகாரிகள் அனுமதி அளிப்பார்கள். ஆனால், செந்தில் பாலாஜி விஷயத்தில் அமலாக்கத் துறையே அவரை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளதால், இது செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டிருப்பதையே காட்டுவதாக கூறப்படுகிறது. மேலும், சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா?
அமைச்சராக இருக்கும் ஒருவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தால், சில நடைமுறைகளை பின்பற்றியாக வேண்டும். அதாவது, முதலில் அமலாக்கத்துறை அதிகாரிகள், ஆளும் கட்சியில் உள்ள ஒரு அமைச்சரை கைது செய்தார் கள் என்றால், அதுகுறித்து உடனடியாக சட்டப்பேரவை செயலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இரண்டா வது, அந்த தகவல் சட்டப்பேரவைச் செயலகம் மூலம், சபா நாயகருக்கு தெரியப்படுத்தப்படும். மூன்றாவது, ஒரு வேளை கைது சம்பவம் நடக்கும்போது, சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தால், அதுபற்றி உட னடியாக சட்டப்பேரவையில் அறிவிக்கப்படும்.
நான்காவது, சட்டப்பேரவை நடைபெறாத பட்சத்தில், 5 நாட்களுக்குள் சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். ஆனால், இந்த நடைமுறை எதையுமே அமலாக்கத்துறை அதிகாரிகள் பின்பற்றவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து செந்தில் பாலாஜியின் வழக்கறிஞரும், திமுக மாநிலங்களவை உறுப்பினருமான என்.ஆர். இளங்கோ அளித்துள்ள பேட்டியில், “சரியான எந்த தகவலை யும் அமலாக்கத்துறை தெரிவிக்கவில்லை.. மனித உரிமை களை மீறும் வகையில், செந்தில் பாலாஜி சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.. அவர் கைது செய்யப்பட்டாரா இல்லையா என்பதைக் கூட அமலாக்கத்துறை தெரிவிக்க வில்லை” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
16 அமைச்சர்கள்
இதனிடையே, செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்ட ஓமந்தூரார் மருத்துவமனைக்கு திமுக தலைவர்கள், அமைச்சர்கள் பலரும் விரைந்தனர். அமைச்சர் செந்தில் பாலாஜியை, கே.என். நேரு, உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், எ.வ. வேலு, பி.கே. சேகர்பாபு, தங்கம் தென்ன ரசு, எஸ். ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன், சாமிநாதன், கணே சன், சிவசங்கர், அனிதா ராதாகிருஷ்ணன், கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட 16 அமைச்சர்கள் பார்த்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள், செந்தில் பாலாஜி கண்களை கூட திறக்க முடியாத நிலையில் சுயநினைவு அற்றுப்படுத்திருப்பதாக தெரிவித்தனர்.
செந்தில் பாலாஜியை சந்தித்து விட்டு வெளியே வந்த அமைச்சர் சேகர் பாபு, ’’அமைச்சர் செந்தில் பாலாஜி சுய நினைவின்றி காணப்படுகிறார். காது பக்கத்தில் வீக்கம் தெரிகிறது. தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் செந்தில் பாலாஜி வைக்கப்பட்டிருக்கிறார். செந்தில் பாலாஜிக்கு எடுக்கப்பட்ட ஈ.சி.ஜி-யில் வேரியேஷன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். அவர் துன்புறுத்தப்பட்டதற்கு இவையெல்லாம் அடையாளமாக காணப்படுகிறது” என குற்றம் சாட்டினார்.
மருத்துவமனையில் நீதிபதி
திமுக மற்றும் செந்தில் பாலாஜியின் மனைவி ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களால் நெருக்கடிக்கு உள்ளான அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜி-யின் கைதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டது. ஒருவரை கைது செய்த 24 மணிநேரத்திற்குள் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்ற நிலையில், செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் ஆஜர்படுத்த முடியாத நிலைமை இருப்பதைக் குறிப்பிட்டு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லியை, ஓமந்தூ ரார் அரசு மருத்துவமனைக்கே அழைத்து வந்து, செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்தியது. அப்போது, செந்தில் பாலாஜியை காவலில் வைப்பதற்கு திமுக வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அமலாக்கத்துறையானது, முன்கூட்டியே தகவல் எதுவும் தெரிவிக்காமல், சட்டவிரோதமாக செந்தில் பாலாஜியைக் கைது செய்துள்ளதாகவும், செந்தில் பாலாஜிக்கு வியாழக்கிழமையன்று பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்யப்பட உள்ளதால் அவரை காவலில் அனுப்பக்கூடாது என்றும், மேலும், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி, நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய உள்ளதாகவும் வாதங்களை எடுத்து வைத்தனர். இதையடுத்து, நீதிமன்றக் காவல் வழங்கும் விவகாரம் தொடர்பாக, அமலாக்கத்துறை மற்றும் செந்தில் பாலாஜி ஆகிய இருதரப்புமே நீதிமன்றத்தில் வாதங்களைத் தொடரலாம் என்று அறிவித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜி யை ஜூன் 28 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.