சுற்றுலா விசாவில் சென்னை வந்த கென்யா நாட்டு பெண் சொன்ன தகவலால் மயிலை போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். சென்னை மயிலாப்பூர் போலீஸ் நிலையத்துக்கு நேற்று முன்தினம் கென்யா நாட்டு பெண் ஒருவர் வந்தார். அவர் வழி தவறி வந்துவிட்டதாக சொன்னார். பின்னர் அவர், அதிரடியாக பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்தார்.
அந்த பெண்ணின் புகார் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது. மேலும் அந்த பெண் கூறுகையில், ‘’கென்யா நாட்டில் இருந்து மேலும் 3 பெண்களுடன் சென்னை வந்தேன். ‘விக்’ முடி விற்பதாக சொல்லி சுற்றுலா விசா வாங்கி வந்தோம். இங்கு ஆழ்வார்ப்பேட்டை சி.வி.ராமன் சாலையில் உள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கினோம். அங்கு விபசாரம் செய்தோம்.
விடுதி அறையை ‘பேக்கேஜ்’ முறையில் ஒரு மணி நேரத்துக்கு ரூ.2 ஆயிரத்து 500-க்கு வாடகைக்கு கொடுத்தனர். அதில் ரூ.1,000 பணம் எங்களுக்கு கிடைக்கும். அதுபோக வாடிக்கையாளர்களிடம் நாங்கள் தனியாக பணம் வாங்கி கொள்ளலாம்.
ஒரு கட்டத்டில் எனக்கு அதிகளவில் வாடிக்கையாளர்களை அனுப்பி தொல்லை கொடுத்தனர். என்னால் தாங்க முடியவில்லை. நான் சண்டை போட்டேன். என்னை ஊருக்கு அனுப்பி விடுங்கள் என்று கெஞ்சிக் கேட்டேன். ஆனால் அவர்கள் என்னை அடித்து துரத்தி விட்டனர். நான் வழி தெரியாமல் சுற்றி இங்கே வந்தேன். என்னை கென்யாவுக்கு மீண்டும் அனுப்பி வையுங்கள்’’ என்று கூறினார்.
இந்த பரபரப்பு தகவலை கேட்டு மயிலாப்பூர் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனே, மயிலாப்பூர் இன்ஸ்பெக்டர் ரவி, விபசார வழக்குப்பதிவு செய்து ஆழ்வார்ப்பேட்டையில் அந்த பெண் குறிப்பிட்ட விடுதிக்கு சென்று அதிரடியாகச் சோதனை நடத்தினார். அங்கு விபசாரத்துக்காக அடைத்து வைக்கப்பட்டிருந்த கென்யா நாட்டை சேர்ந்த 3 பெண்கள் மீட்கப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில் விடுதி உரிமையாளர் சரவணராஜ் (வயது 43) என்பவரும், பராமரிப்பாளர் கண்ணன் (33) என்பவரும் கைது செய்யப்பட்டனர். மீட்கப்பட்ட கென்யா நாட்டு பெண்கள் 4 பேரும் அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களை கோர்ட்டு அனுமதி பெற்று மீண்டும் கென்யாவுக்கு அனுப்பி வைக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.