கர்நாடக தேர்தலில் 135 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் அமோக வெற்றிபெற்றது. முதலமைச்சர் பதவிக்கு முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் இடையே கடும் போட்டி ஏற்பட்டது.
இந்நிலையில் காங்கிரஸ் மேலிடம் இருவரையும் டெல்லிக்கு அழைத்தது. கே.சி.வேணுகோபால் தலைமையில் மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, இருவரிடையேயும் நீண்ட நேரம் தனித்தனியே பேசினார். இதையடுத்து, சோனியாகாந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் முன்னிலையில் தீர்வு காணப்பட்டது.
பேச்சுவார்த்தை முடிவில் கர்நாடக முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டிகே சிவக்குமாரும் அறிவிக்கப்பட்டனர். அதன்படி, சித்தராமையாவும், டிகே சிவக்குமாரும் இன்று பதவியேற்க உள்ளனர்.
அவர்களோடு, புதிதாக பதவியேற்க உள்ள 8 மந்திரிகளின் பட்டியல் இன்று வெளியாகி இருக்கிறது. ஜி.பரமேஸ்வர், கே.ஜி. ஜார்ஜ், சமீர் அகமத் கான், பிரியங் கார்கே, எம்.பி.பாட்டீல், ராமலிங்க ரெட்டி, கே.ஹெச்.முனியப்பா, சதீஷ் ஜர்கிகோலி அமைச்சர்களாக பதவியேற்கின்றனர்.
இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங் கார்கேவுக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது. சித்தராமையா தலைமையில் அமைச்சரவை பதவியேற்பு விழா இன்று மதியம் 12.30 மணியளவில் நடைபெற உள்ளது.

