சாலையோர வியாபாரிகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கைபேசி செயலி வெளியாகி விட்டது.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் 2023 ஜூன் 1 ஆம் தேதி சாலையோர வியாபாரிகளுக்காக பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தில் பிஎம் ஸ்வநிதி (PM SVANidhi) என்ற கைபேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தச் செயலியின் உதவியுடன், சாலையோர வியாபாரிகள், பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் கடன்கள் மற்றும் பரிந்துரை கடிதம் (எல்.ஓ.ஆர்) பெற விண்ணப்பிக்கலாம். சாலையோர வியாபாரிகள் தங்களது ஸ்வநிதி கடன் விண்ணப்ப நிலையையும் இதில் சரிபார்க்கலாம்.
பிரதமரின் ஸ்வநிதி திட்டம் சாலையோர வியாபாரிகள் தங்கள் வணிகங்களுக்காக பிணையற்ற செயல்பாட்டு மூலதனக் கடனை எளிதாக வழங்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. ஜூலை 20, 2023 நிலவரப்படி, 38.53 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.6,492.02 கோடி மதிப்பிலான 50.63 லட்சம் கடன்கள் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.
பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் பயன்கள் நகர்ப்புறங்களில் வணிகம் செய்யும் அனைத்து சாலையோர வியாபாரிகளுக்கும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தின் கீழ் கடன் வழங்குவது டிசம்பர் 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு கவுஷல் கிஷோர் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.