சச்சின் டெண்டுல்கர் தனது 50-வது பிறந்த நாளை, ஏப்ரல் 24 அன்று கொண்டாடுகிறார். சச்சின் பிறந்த நாளுக்கு ரசிகர்களும் கிரிக்கெட் வீரர்களும் சமூகவலைத்தளங்கள் வழியாக வாழ்த்துகளைக் கூறியுள்ளார்கள்.
சச்சினின் மகத்தான 50 சாதனைகளின் தொகுப்பு:
- டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் சச்சின். 2008-ல் லாராவின் 11,953 ரன்களைக் கடந்து இந்தச் சாதனையை எட்டினார். மொத்தமாக 15,921 ரன்கள்.
- ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக இரட்டைச் சதம் எடுத்த வீரர் சச்சின். 2010-ல் குவாலியரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் ஆட்டத்தில் 147 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 25 பவுண்டரிகளுடன் 200 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார்.
- ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் எடுத்தவர் சச்சின். 49 சதங்கள் (46 சதங்களுடன் கோலி 2-ம் இடத்தில் உள்ளார்).
- ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு வருடத்தில் அதிக ரன்கள் (1894) எடுத்த வீரர் சச்சின். 1998-ல் இந்தச் சாதனையைப் படைத்தார். 34 ஆட்டங்களில் 9 சதங்களும் 7 அரை சதங்களும் எடுத்தார். ஸ்டிரைக் ரேட் – 102.15.
- ஒரு வருடத்தில் அதிக ஒருநாள் சதங்கள் எடுத்த வீரர் – சச்சின். 1998-ல் 9 ஒருநாள் சதங்கள் எடுத்தார். வேறு எந்த வீரரும் ஒரு வருடத்தில் 8 ஒருநாள் சதங்களைக்கூட எடுத்ததில்லை.
- டெஸ்ட் கிரிக்கெட்டில் விரைவாக 10,000 ரன்கள் எடுத்த வீரர்கள் – சச்சின், லாரா, சங்கக்காரா. மூவரும் 195 இன்னிங்ஸில் இந்த இலக்கை எட்டினார்கள்.
- சச்சின் விளையாடிய காலத்தில் டெஸ்ட் தகுதி பெற்ற அனைத்து நாடுகளுக்கும் (9) எதிராகவும் சதமடித்துள்ளார். 2004 டிசம்பரில் இச்சாதனையைப் புரிந்தார். (2017 வரை 10 நாடுகளுக்கு மட்டுமே டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்டது.) ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிகபட்சமாக 11 சதங்களும் பாகிஸ்தானுக்கு எதிராகக் குறைந்தபட்சம் 2 சதங்களும் எடுத்துள்ளார்.
- தனது 169-வது டெஸ்டை இலங்கைக்கு எதிராக விளையாடினார் சச்சின். அப்போது ஸ்டீவ் வாஹ்–கின் சாதனையை முறியடித்து அதிக டெஸ்டுகளில் விளையாடிய வீரர் என்கிற பெருமையைப் பெற்றார். மொத்தமாக 200 டெஸ்டுகளில் விளையாடியுள்ளார்.
- டெஸ்டில் 15,921 ரன்களும் ஒருநாள் கிரிக்கெட்டில் 18,426 ரன்களும் எடுத்துள்ளார் சச்சின். இரண்டிலும் அதிக ரன்கள் எடுத்த வீரர், சச்சின் தான். (ஒரே ஒரு டி20 ஆட்டத்தில் விளையாடி 10 ரன்கள் எடுத்துள்ளார்.) மூன்று வகை கிரிக்கெட் ஆட்டங்களிலும் 30,000 ரன்களுக்கும் அதிகமாக சேர்த்த ஒரே வீரர் சச்சின் மட்டுமே. அடுத்த இடத்தில் உள்ள சங்கக்காரா, 28,016 ரன்கள் எடுத்துள்ளார்.
- சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் எடுத்த ஒரே வீரர் சச்சின். இந்தியாவின் விராட் கோலி 75 சதங்களுடன் 2-ம் இடத்தில் உள்ளார். அதேபோல டெஸ்டில் (51), ஒருநாள் கிரிக்கெட்டில் (49) அதிக சதங்கள் எடுத்த வீரரும் சச்சின் தான்.
- ஒரு வருடத்தில் அதிக சர்வதேச சதங்கள் எடுத்தவர் சச்சின். 12 சதங்கள். 1998-ல். அடுத்த இடத்தில் கோலி (இரு முறை), பாண்டிங் ஆகியோர் 11 சதங்களுடன் உள்ளார்கள்.
- ஓர் அணியுடன் அதிக சர்வதேச சதங்கள் எடுத்தவர், சச்சின். 20 சதங்கள், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 110 ஆட்டங்களில் இந்த இலக்கை எட்டியுள்ளார். அடுத்த இடத்தில் பிராட்மேன் உள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக 37 ஆட்டங்களில் 19 சதங்கள் எடுத்துள்ளார்.
- சச்சின் 100 சதங்கள் எடுத்தாலும் அதிகமுறை 90+ ரன்கள் எடுத்தவரும் அவர் தான். 664 ஆட்டங்களில் 28 முறை 90+ ரன்கள் எடுத்துள்ளார்.
- அதிகமுறை 50+ ரன்கள் எடுத்த பேட்டர்களின் பட்டியலிலும் சச்சின் முதலிடத்தில் உள்ளார். 264 முறை 50+ ரன்களைக் கடந்துள்ளார்.
- சர்வதேச கிரிக்கெட்டில் அதிக பவுண்டரிகள் அடித்தவர், சச்சின். 4076+ பவுண்டரிகளை அடித்துள்ளார். 3015 பவுண்டரிகளுடன் உள்ள சங்கக்காரா அடுத்த இடத்தில் உள்ளார்.
- அதிக சர்வதேச ஆட்டங்களில் விளையாடியவர் சச்சின். 664 ஆட்டங்கள். 652 ஆட்டங்களுடன் 2-ம் இடத்தில் இலங்கையின் ஜெயவர்தனே.
- ஓர் அணிக்காகத் தொடர்ச்சியாக அதிக சர்வதேச ஆட்டங்களில் விளையாடியவர் சச்சின். 239 ஆட்டங்கள். 1990 ஏப்ரல் 25 முதல் 1998 ஏப்ரல் 24 வரை தொடர்ச்சியாக 54 டெஸ்டுகள், 185 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். இன்று இப்படியொரு சாதனையை எந்த வீரராலும் செய்யமுடியுமா?
- சர்வதேச ஆட்டங்களில் அதிகமுறை ஆட்ட நாயகன் விருதுகளை வென்றவர் சச்சின். 76 முறை. டெஸ்டில் 14, ஒருநாள் கிரிக்கெட்டில் 62. அடுத்த இடத்தில் கோலி உள்ளார், 63 முறை.
- தொடர் நாயகன் விருதுகளை அதிகமுறை வென்ற வீரர்களின் பட்டியலில் சச்சினும் கோலியும் முதலிடத்தில் உள்ளார்கள். இருவரும் தலா 20 முறை வென்றுள்ளார்கள்.
- அதிக டெஸ்ட் சதங்கள் எடுத்தவர் சச்சின். 51 சதங்கள். 45 சதங்களுடன் காலிஸ் 2-வது இடத்தில் உள்ளார்.
- டெஸ்டுகளில் அதிகமுறை 50+ ரன்களை எடுத்தவர் சச்சின். 119 முறை.
- டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000, 13,000, 14,000, 15,000 ரன்களை விரைவாக எடுத்தவர் சச்சின். டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 14,000 ரன்களைத் தொட்ட ஒரே வீரர் சச்சின் மட்டுமே.
- ஒருநாள் கிரிக்கெட்டில் நீண்ட நாள் விளையாடியவர் சச்சின். 22 வருடங்கள், 91 நாள்கள். (1989, டிசம்பர் 18 முதல் 2012, மார்ச் 18 வரை.)
- ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக 50+ ரன்களை எடுத்தவர் சச்சின். 145 முறை.
- ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக பவுண்டரிகள் அடித்தவர் சச்சின். 2016 பவுண்டரிகள். அடுத்த இடத்தில் உள்ள ஜெயசூர்யா 1500 பவுண்டரிகள் அடித்துள்ளார்.
- ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்சமாக 18,426 ரன்கள் எடுத்துள்ளார் சச்சின். வேறு எந்த வீரரும் 15,000 ரன்களைக் கூட எடுத்ததில்லை.
- ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ஆட்டங்களில் விளையாடியவர் சச்சின். 463 ஆட்டங்கள். 2-வது இடத்தில் உள்ள ஜெயவர்தனே 448 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
- ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகமுறை ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகளை வென்றவர் சச்சின். ஆட்ட நாயகன் விருதுகளை 62 முறையும் தொடர் நாயகன் விருதுகளை 15 முறையும் வென்றுள்ளார்.
- ரஞ்சி கோப்பை, துலீப் கோப்பை, இரானி கோப்பை ஆகிய கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய முதல் ஆட்டத்திலேயே சதமடித்த ஒரே வீரர், சச்சின்.
- ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவர் – சச்சின் டெண்டுல்கர். 45 ஆட்டங்கள், 44 இன்னிங்ஸில் 2278 ரன்கள். ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் அதிக இன்னிங்ஸில் விளையாடியவர் – சச்சின். உலகக் கோப்பை ஆட்டங்களின் எண்ணிக்கையில் ரிக்கி பாண்டிங் சச்சினை விடவும் கூடுதலாக ஓர் ஆட்டம் விளையாடியுள்ளார். 46 ஆட்டங்கள். (2007 உலகக் கோப்பையில் முதல் சுற்றிலேயே இந்தியா வெளியேறியதால் ஆட்டங்களின் எண்ணிக்கை சச்சினுக்குக் குறைவாகிவிட்டது.)
- ஒருநாள் உலகக் கோப்பையில் சச்சினும் ரோஹித் சர்மாவும் அதிகபட்சமாகத் தலா 6 சதங்கள் எடுத்துள்ளார்கள்.
- ஓர் உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்தவர் சச்சின். 2003-ல் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியில் 11 இன்னிங்ஸில் 1 சதம், 6 அரை சதங்களுடன் 673 ரன்கள் எடுத்தார்.
- ஒருநாள் உலகக் கோப்பையில் 3-வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் எடுத்தவர்கள், சச்சினும் டிராவிடும். 1999-ல் கென்யாவுக்கு எதிராக சச்சினும் டிராவிடும் ஆட்டமிழக்காமல் 237 ரன்கள் எடுத்தார்கள்.
- சச்சினும் பாகிஸ்தானின் மியாண்டட்டும் அதிகபட்சமாக 6 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடியுள்ளார்கள்.
- டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமுறை 100+ ரன்களுக்குக் கூட்டணிகளை அமைத்தவர்கள் சச்சினும் டிராவிடும். 143 இன்னிங்ஸில் 20 முறை.
- ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகமுறை 100+ ரன்களுக்குக் கூட்டணிகளை அமைத்தவர்கள் சச்சினும் கங்குலியும். 176 இன்னிங்ஸில் 26 முறை. டெஸ்ட், ஒருநாள் என சர்வதேச கிரிக்கெட்டில் அதிகமுறை 100+ ரன்களுக்குக் கூட்டணிகளை அமைத்தவர்களும் இவர்களே. டெஸ்டில் 12, ஒருநாள் கிரிக்கெட்டில் 26 என 38 முறை.
- ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் – கங்குலி கூட்டணியே அதிக ரன்களை எடுத்துள்ளது. 176 இன்னிங்ஸில் 8227 ரன்கள்.
- டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓர் அணி ஆல் அவுட் ஆன சமயத்தில் அதிகமுறை அதிகபட்ச ரன்களை எடுத்தவர், சச்சின். இந்திய அணி ஆல் அவுட் ஆன 232 இன்னிங்ஸில் 55 முறை அதிகபட்ச ரன்களை அவர் எடுத்துள்ளார்.
- ஓர் அணிக்காக அதிகமுறை இணைந்து டெஸ்டுகளில் விளையாடியவர்கள், சச்சினும் டிராவிடும். 146 டெஸ்டுகள்.
- சொந்த அணி, எதிரணி என டெஸ்ட் வாழ்க்கையில் ஒட்டுமொத்தமாக 602 வீரர்களுடன் இணைந்து விளையாடியுள்ளார் சச்சின். வேறு யாரும் இத்தனை பேருடன் இணைந்து விளையாடியதில்லை. இந்திய அணிக்காக 110 வீரர்களுடனும் எதிரணியில் 492 வீரர்களுடனும் இணைந்து விளையாடியுள்ளார். டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்றிலும் சேர்த்து அதிகபட்சமாக 989 வீரர்களுடன் (இந்திய அணிக்காக 141 வீரர்களுடனும் எதிரணியில் 848 வீரர்களுடனும்) இணைந்து விளையாடியுள்ளார் சச்சின். இதுவும் ஒரு சாதனையே.
- ஒரு மைதானத்தில் 8 அல்லது அதிக இன்னிங்ஸில் விளையாடி அதிக சராசரிகளைக் கொண்டுள்ள வீரர்களில் முதலிடம் சச்சினுக்கு. சிட்னி மைதானத்தில் 9 இன்னிங்ஸில் விளையாடி 3 சதங்கள், 2 அரை சதங்களுடன் 785 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி – 157.00.
- ஒருநாள் கிரிக்கெட்டில் வேறு எந்த வீரரை விடவும் 99 முறை 100 ரன்களுக்குக் கூட்டணி அமைத்துள்ளார் சச்சின்.
- ஒருநாள் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக 340 இன்னிங்ஸில் 15,310 ரன்கள் எடுத்துள்ளார். வேறு எந்த வீரரும் தொடக்க வீரராக 13,000 ரன்களைக் கூட எடுத்ததில்லை.
- 18 வயது முடிவதற்குள் வேறு யாரை விடவும் 25 டெஸ்டுகளில் 5 சதங்கள், 8 அரை சதங்களுடன் 1522 ரன்கள் எடுத்தார். அதேபோல 18 வயது முடிவதற்குள் அதிக டெஸ்ட் சதங்களை எடுத்தவரும் சச்சின் தான்.
- டெஸ்ட் கிரிக்கெட்டில் வேறு எந்த பேட்டரை விடவும் 6 முறை சிக்ஸர் அடித்து சதத்தைப் பூர்த்தி செய்துள்ளார்.
- ஐபிஎல் போட்டியில் விளையாடிய முதல் தந்தை – மகன் என்கிற பெருமையை சச்சின் டெண்டுல்கரும் அவருடைய மகன் அர்ஜுனும் சமீபத்தில் பெற்றார்கள். இந்த வருட ஐபிஎல் போட்டியில் அறிமுகமானார் அர்ஜுன் டெண்டுல்கர்.
- இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் டெஸ்ட் சதமடித்த இளைய வீரர், சச்சின். 20-வது பிறந்த நாளுக்கு முன்பே இந்த மூன்று நாடுகளிலும் சதமடித்துள்ளார்.
- 1990களில் 8571 ஒருநாள் ரன்கள் எடுத்தார் சச்சின். அதாவது 1990 முதல் 1999 வரை. 24 சதங்கள், சராசரி – 43.07, ஸ்டிரைக் ரேட் – 86.81. 1990களில் வேறு எந்த வீரரும் ஒருநாள் கிரிக்கெட்டில் இத்தனை ரன்களை எடுத்ததில்லை.
- 35 வயதுக்குப் பிறகு ஒரு வருடத்தில் அதிக டெஸ்ட் ரன்கள் எடுத்தவர் சச்சின். 2010-ல், 37-வது வயதில் 14 டெஸ்டுகளில் 7 சதங்களுடன் 1562 ரன்கள் எடுத்தார்.
- 2014-ல் சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெற்ற முதல் விளையாட்டு வீரரும் இளையவரும் சச்சின் தான்.