மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக எஸ். சி. எல். குழும நிறுவனர் ஷிவ் நாடார் மற்றும் எஸ்.சி.எல் தலைவர் ரோஷினி நாடார் கலந்து கொண்டனர். இந்நூலகமானது 120 கோடியே 75 லட்சம் மதிப்பில் 2 லட்சத்து 13 ஆயிரத்து 338 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று லட்சத்து 30 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன.
கலைஞர் நூற்றாண்டு நூலகம் தொடக்க விழாவில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், “” திராவிட மாடல் ஆட்சி என்பது சொல்வதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்யும். சென்னையில் மருத்துவமனை என்றால் மதுரையில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
திராவிட இயக்கம் என்பது அறிவு இயக்கம். கல்வியும் சுகாதாரமும் தான் திராவிட மாடலின் இரு கண்கள்” என்றும் அவர் அதில் தெரிவித்தார்.
மறைந்த முதல்வர் கருணாநிதி அவர்களைப் பற்றியும் அவர் பகிர்ந்து கொண்டார். “கலைஞரே மிகப்பெரிய நூலகம். அவர் அரசியல், சினிமா, நாடக மேடை, பத்திரிக்கை, இலக்கியம் என பன்முக ஆற்றலை கொண்டவர்.
1945 ல் அவர் ஆற்றிய உரைகள், சிறுகதைகள், கருத்துச் சித்திரம் என அவருக்கு என தனி எழுதுகோல் படையையே வைத்திருந்தார்.
தனது பதின்மூன்று வயதில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தினை மாணவப் பேரணி கொண்டு நடத்தி தமிழ் மொழிக்காக போராடினார்.
தனது பதினாறாவது வயதில் மாணவ நேசம் எனும் மாத இதழைத் தொடங்கி கையெழுத்துப் பிரதி ஆசிரியராக பணிபுரிந்தார்.
கலைஞரின் 17 ஆவது வயதில் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் ஆண்டு விழாவில் புரட்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் வாழ்த்துப்பா அனுப்பினார்.
1942 ல் பேரறிஞர் அண்ணா நடத்தின திராவிட நாடு மூன்றாவது இதழில் இளமைப் பணி என்ற கலைஞரின் கட்டுரை வெளிவந்தது.
பிறகு முரசொலி வெளியீட்டு கழக நிறுவனத்தை தொடங்கினார். அதில் மாத இதழில் முரசொலியை வெளியிட்டார் சேரன் என்ற புனைப்பெயரில்.
இவை அனைத்தும் கலைஞரின் இருபது வயதிற்குள் நடந்தவை”.
மேலும் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் “தரமான கல்வியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு இரண்டாவது இடம் உள்ளது. படிக்கும் மாணவர்களுக்காக நான் முதல்வன், இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும், முதலமைச்சர் காலை உணவுத் திட்டம், அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, இலவச மகளிர் பேருந்து பயணம் போன்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளது திராவிட முன்னேற்ற கழகம்.
அதுமட்டுமல்லாமல் வருகின்ற செப்டம்பர் மாதம் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை ஒட்டி தகுதி வாய்ந்த பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் ரூ.1000 வழங்கப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.
“”அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதே திராவிட மாடலின் நோக்கம். மாணவ, மாணவிகளே, அரசு ஏற்படுத்தும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். படிப்பே நோக்கமாக இருக்க வேண்டும். மாணவ மாணவிகளை நம்பி நாளைய எதிர்காலம் உள்ளது” என்றும் அவர் கூறினார்.
– தே. சுகன்யா

