மதுரையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், கலைஞர் நூற்றாண்டு நூலகம் குறித்து நெகிழ்வுடன் உரையாற்றினார்.
“காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்த ஒரே முதலமைச்சர் அன்றைய முதல்வர் கருணாநிதி அவர்கள் . நூலகம் கட்டிடம் என்கின்ற உடலை தந்தது பொதுப்பணித்துறை. அந்த உடலுக்கு உயிராக நூல்களையும் தொழில்நுட்ப சாதனங்களையும் வழங்கிய பள்ளிக்கல்வித்துறை இணைந்து உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்” என்று கூறி தனது உரையை தொடங்கினார் அமைச்சர் அன்பில் மகேஸ்.
அறிவுசார் மையம்
தமிழக முதல்வரின் இரு கண்கள்:
கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு விழாவில் அமைச்சர் அன்பில் மகேஸ் உரையாடுகையில்,
“மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்கள் கல்வியும் சுகாதாரமும் எனது இரு கண்கள் என்று அடிக்கடி சொல்லுவார். முத்தமிழ் அறிஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு சென்ற மாதம் தொடங்கியது. தனது ஒரு கண்களான சுகாதாரத்துறையின் சார்பாக உயர்தர சிகிச்சை தருகின்ற மருத்துவமனையை திறந்து வைத்தார். இரண்டாவது மாதம் தனது இரண்டாவது கண்ணான கல்வித்துறையின் சார்பாக ஒரு மிகப்பெரிய அறிவுசார் மையத்தை இந்த மதுரை மாநகரில் திறந்து வைத்திருக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்” என்று கூறினார்.
சமுதாயத்துக்கான மருத்துவமனை கலைஞர் நூற்றாண்டு நூலகம்:
மேலும் அமைச்சர் அன்பில் மகேஸ், “உடலில் எந்த வியாதியும் வராமல் பார்த்துக் கொள்வதற்காக சென்னையில் மருத்துவமனையும், சமுதாயத்துக்கு எந்த வியாதியும் வராமல் பார்த்துக் கொள்வதற்கான மருத்துவமனையான நூலகத்தையும் டாக்டர் கலைஞர் பெயரில் திறந்திருப்பது தனி சிறப்பு என்பதை இந்த நேரத்தில் பதிய வைக்க கடமை பட்டிருக்கிறேன்” என்றுறைத்தார்.
கலைஞர் நூற்றாண்டு நூலகம் பெயர்க்காரணம்:
“முத்தான மூன்று தமிழை ஆண்ட முத்தமிழ் அறிஞர் கலைஞர் பெயரில் சத்தான அறிவுசார்ந்த சமுதாயத்தை படைக்க பெற்ற பிள்ளை தனது நவீன தமிழகத்தின் தந்தை பெயரில் அறிவாலயம் அமைத்துவிட்டது. மாண்பு மிகுவாக அமைத்ததனால் நூலகம் கலைஞர் நூற்றாண்டு நூலகம் எனப் பெயர் பெற்றது” என்று பெருமையுடன் தெரிவித்தார்.
மதுரையும் முத்தமிழ் அறிஞர் கலைஞரும்:
அமைச்சர் அன்பில் மகேஷ் மதுரைக்கும் முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கும் உள்ள தொடர்பை கலைஞர் அவர்களின் கவிதை மூலம் எடுத்துரைத்தார்.
“தந்தையோ மதுரைக்கு மாநகர் என்ற தங்க கிரீடத்தை சூட்டினார். இன்றைய நிகழ்வின் மூலம் அதில் வைரக் கற்களை பதித்திருக்கிறார் தனயன் தமிழ்நாட்டின் மாண்புமிகு முதல்வர் எனது அரசியல் ஆசானுக்கு மான்புமிகுவாக நன்றிகளையும் வரவேற்பையும் கூற கடமைப்பட்டிருக்கிறேன்” என்றுறைத்தார். அத்துடன் திறப்பு விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
மண்ணுக்கு அடியில் மட்டும் தான் பெருமை இருக்கின்றதா, மண்ணுக்கு மேலையும் பெருமை இருக்கின்றது என்று தமிழன் பெருமையை காட்டுவதற்காக எழுப்பிய கட்டிடம் தான் கலைஞர் நூற்றாண்டு நூலகம் என்று நூலகத்தின் பெருமையை எடுத்துரைக்கும் வண்ணம் கூறி நிறைவாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
– கோ. தீபா புவனேஸ்வரி

