தமிழ்நாடு முதலமைச்சர் அழைப்பினை ஏற்று சென்னை, கிண்டியில் 230 கோடி ரூபாய் மதிப் பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை 5.6.2023 அன்று இந்திய குடியரசுத் தலைவர் திறந்து வைக்கிறார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (28.4.2023) டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு-வை குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்து, சென்னை, கிண்டியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறந்து வைத்திட அழைப்பு விடுத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் “சென்னை பெருநகரத்தில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும்” என 3.6.2021 அன்று அறிவித்தார்.
சென்னை, கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 1000 படுக்கைகளுடன் கூடிய, சுமார் 51,429 சதுரமீட்டர் பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் 230 கோடி ரூபாய் செலவில் இப்பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இம்மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துவிட்டது.
இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (28.4.2023) டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு-வை குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்து, சென்னை, கிண்டியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறந்து வைத்திட அழைப்பு விடுத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அழைப்பினை ஏற்று இந்திய குடியரசுத் தலைவர் 5.6.2023 அன்று சென்னை, கிண்டியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப் பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவ மனை திறப்பு விழா மற்றும் நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ள கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழா ஆகியவற்றில் கலந்து கொள்ள இசைவளித்து உள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவில், ‘’ 2023, ஜூன் 5 ஆம் தேதி சென்னை, கிண்டியில் கலைஞர் நினைவு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையைத் திறந்து வைப்பதற்கும், அதே நாளில் சென்னை நந்தனத்தில் நடைபெறும் திராவிடப் பெருந்தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு தொடக்கவிழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கும் எனது அழைப்பை ஏற்றுக்கொண்டமைக்காக மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி. திரவுபதி முர்மு அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

