இளம் ஓவியர்களின் ஓவியக் கண்காட்சி சென்னை ஆழ்வார்ப்பேட்டை ஆர்ட் கின் சென்டரில் நடைபெற்றது. தாம்பரம் நகர காவல் துணை கண்காணிப்பாளர் ந.குமார் ஓவியக் கண்காட்சியை தொடக்கி வைத்தார். மூத்த பத்திரிகையாளரும் “வளர்தொழில்” “தமிழ் கம்ப்யூட்டர்” ஆசிரியருமான க. ஜெய் கிருஷ்ணன், இளம் ஓவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.
சென்னை மயிலாப்பூரில், ‘ஓவிய உலகம்” என்கிற ஓவியப் பயிற்சி மையம் 2006 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. ஓவியர் பவானி இதை நிறுவி நிர்வகித்து வருகிறார். இவருடைய மகள்களும் ஓவியர்களுமான ஐஸ்வர்யா, அகல்யா ஆகியோரும் இந்த ஓவிய மையத்தின் ஆசிரியர்களாக உள்ளனர்.
எட்டு நிலைகள் கொண்ட பயிற்சி வகுப்புகள்
அடிப்படை ஓவியப் பயிற்சி, போஸ்டர் கலர், கரித்துண்டு ஓவியம், வண்ண பென்சில்களால் வரையும் ஓவியம், அக்ரிலிக் ஆன் கேன்வாஸ், வாட்டர் கலர் பெயிண்டிங், ஆயில் பெயிண்டிங் உள்ளிட்ட ஓவிய பயிற்சிகள் சொல்லித் தரப்படுகின்றன. எட்டு நிலைகள் கொண்ட பயிற்சி வகுப்புகள் இங்கு உள்ளன. எல்.கே.ஜி படிக்கும் குழந்தைகள் முதல் கல்லூரி வரை பயிலும் மாணவ மாணவியர் இங்கு பயிற்சி பெறுகிறார்கள்.
அனைத்து நிலைகளையும் கற்று முடித்த இளம் ஓவியர்களான வர்ஷினி, சக்தி, ரித்திகா, அதிதி, பிரதீப் ,கவிதா,காயத்ரி, சன்மதி, அனானிஸ், சோமசுந்தரம், கீர்த்திவர்ஷன் ஆகியோரின் படைப்புகள் அடங்கிய கண்காட்சி கடந்த 31.12.2023 அன்று சென்னை, ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ஆர்ட் கின் சென்டரில் நடைபெற்றது.
காவல் துணை கண்காணிப்பாளர் ந.குமார்
இந்த கண்காட்சிக்கு சிறப்பு விருந்தினராக தாம்பரம் நகர காவல் துணை கண்காணிப்பாளரான (போக்குவரத்து) ந.குமார், தம் துணைவியார் லட்சுமியுடன் வருகை தந்தார். கண்காட்சியை திறந்து வைத்து இளம் ஓவியர்களை பாராட்டினார்.
இளம் ஓவியர்களை வாழ்த்தி பேசுகையில், “ஓவியம் வரையும் திறமை ஒரு கொடை. குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அரிதாக இந்தக் கலை கிடைக்கும். நீங்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு கோணத்தில் மாறுபட்ட சிந்தனையுடன் ஓவியங்களை படைத்திருக்கிறீர்கள். உங்கள் அனைவரையும் மனமார பாராட்டுகிறேன்.
எந்தவிதமான வெற்றியும் உயர்நிலைப் பதவியும் கடின உழைப்புக்கும் படிப்படியான வளர்ச்சிக்கும் பிறகே கிடைக்கும். இன்றைக்கு காவல்துறை துணை ஆணையாளராக உள்ள நான் 1987 ஆம் ஆண்டு, காவல்துறையில் சேர்ந்தபோது கடைநிலை அதிகாரி பதவியான உதவி ஆய்வாளராகத் தான் சேர்ந்தேன். பிறகு படிப்படியாக உயர் பதவிகளுக்கு வந்தேன்.
நல்ல நண்பர்களை பெற்றிடுங்கள். நிறைய நற்பண்புகள் உங்களிடம் பெருகும். நல்ல பழக்கங்களை அதிகரித்துக் கொள்ளும்போது வேண்டாத பழக்கம் தானாக விலகும். விடாமுயற்சியும் கடின உழைப்பும் உங்களை வெற்றி சிகரத்தை எட்ட வைக்கும்! வாழ்த்துக்கள்.!!
இவ்வாறு காவல் துணை கண்காணிப்பாளர் ந.குமார் பேசினார்.
“வளர்தொழில்” “தமிழ் கம்ப்யூட்டர்” ஆசிரியர் ஜெய் கிருஷ்ணன்
கண்காட்சி நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக மூத்த பத்திரிகையாளரும் “வளர்தொழில்” “தமிழ் கம்ப்யூட்டர்” ஆசிரியருமான க. ஜெய் கிருஷ்ணன் தம் துணைவியார் சாந்தியுடன் கலந்து கொண்டார். ஓவியங்களை சிறப்பாக காட்சிப்படுத்திய இளம் ஓவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். ஓவியங்களுக்கு பிரேம் போட்டுக் கொடுத்த பழனி(சுலக்சனா பிரேம்ஸ்), ஆர்ட் கின் சென்டர் நிர்வாகி அனாகதா ஆகியவருக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார் .
இளம் ஓவியர்களை பாராட்டி ஆசிரியர் க. ஜெய் கிருஷ்ணன் பேசியதாவது:
“மாலை முரசு குழுமத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த தேவி இதழில் துணை ஆசிரியராக 45 ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றத் தொடங்கியதில் இருந்து இன்று வரை இதழியல் துறையில் பயணப்பட்டு வருபவன் என்ற முறையில் , ஓவியக்கலை பற்றியும் ஓவியர்கள் பற்றியும் புரிதல் எனக்கு உண்டு.
இன்றைக்கு குழந்தைகளை வெகுவாக கவரும் தொலைக்காட்சி சித்திரக் கதைகள், பெண்களை ஈர்க்கும் நாடகங்கள் தொடங்கி சமூக ஊடக நிகழ்ச்சிகள், சினிமா கலை உலகம் என்று உங்களுக்கான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது.
ஓவியத்தை பிரதான உயர்கல்வியாக கொண்ட அரசு கவின் கல்லூரிகள், தனியார் கவின் கல்லூரிகள் உள்ளன. கலைநுட்பத் திறன் இயல்பாகவே உள்ள உங்களைப் போன்றோர் அங்கு சென்று படிக்கும்போது இத்துறையில் உச்சம் தொட முடியும். பேஷன் டிசைனிங், ஆர்க்கிடெக் போன்ற படிப்புகளில் நீங்கள் இறங்கினால் அங்கு தனி முத்திரை பதிப்பீர்கள். பொதுவாக, எந்தப் பாடம் எடுத்து படித்தாலும் உங்களுக்கு இருக்கும் கலைத்திறமை அந்தப் பாடப்பிரிவில் உங்களை பளிச்சிட்டுக் காட்ட வைக்கும்.
உங்களிடம் திறமை நிரம்ப உள்ளது . உங்களுக்கான வாய்ப்புகள் காத்திருக்கின்றன.
மாபெரும் வெற்றிகளை குவித்திடுங்கள்.!
இவ்வாறு க.ஜெய் கிருஷ்ணன் பேசினார்.
ஓவிய உலகில் படித்து முடித்த மாணவ மாணவியர் தவிர தற்போது ஓவியக்கலையை பயின்று கொண்டிருக்கும் மாணவர்களான ஜனனி, தீபிகா, சங்கீதா, ஸ்ரீநிதி, யுகபாரதி ,ஜெய்வந்தி ஆகியோரும் தங்கள் ஓவியங்களை கண்காட்சியில் காட்சிக்கு வைத்திருந்தனர். ஏராளமானோர், ஓவிய உலகம் கண்காட்சியை பார்த்தனர். அவர்களிடம் மெட்ராஸ் முரசு சார்பில் பேசினோம்.
ஆழ்வார்பேட்டையை சேர்ந்த குடும்பத்தலைவி திருமதி சரளாதேவி, ‘’இந்த ஓவிய உலகம் கண்காட்சி கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் கலர்புல் ஆக இருந்தது. தொழில் சார் கல்வி படிக்காமல், ஆர்வத்தால் மேற்கொண்ட பயிற்சி மூலம் இந்த இளம் மாணவ, மாணவியர்கள் அருமையாக ஓவியம் வரைந்துள்ளார்கள். அவர்களை பாராட்டுகிறேன்’’ என்று சொன்னார்.
சென்னை சிறுசேரியில் தனியார் சர்வதேச மென்பொருள் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் செல்வி வித்யா, ‘’இன்று 2023 ஆம் ஆண்டின் கடைசி நாள் என்பதால் குடும்பத்தினருடன் மதியம் லஞ்ச் சாப்பிட வெளியே வந்தோம். அப்போதுதான், இந்த கண்காட்சி நடப்பதை தெரிந்து கொண்டோம். குடும்பத்தோடு ஓவிய உலகம் கண்காட்சியை பார்த்தோம்.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான லலித் கலா அகாடமியில்தான் தரமான ஓவியக் கண்காட்சி அவ்வப்போது நடக்கும். அதை பார்த்திருக்கிறேன். அங்கெல்லாம் பெரிய பெரிய ஆட்கள் என்று புகழ்பெற்ற ஓவியர்கள், விஐபி ஓவியர்கள் கண்காட்சிகளை பார்த்திருக்கிறேன். ஆனால், இன்றுதான் இளம் வயது ஓவியர்களின் ஓவியங்களை பார்த்தேன். தரமானதான இருந்தது. கண்கொள்ளா காட்சி’’ என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த பார்த்தசாரதி கூறுகையில், ‘’ஓவியக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களையே மிஞ்சும் வகையில் இளம் பிஞ்சுகளின் ஓவியம் இருந்தது. இந்த சின்ன வயதிலேயே மிகவும் அழகாக ஓவியம் வரைந்துள்ளார்கள். பல்வேறு வகைகளில் விதவிதமான ஓவியங்களைக் காட்சிப்படுத்தி இருந்தது கண்களுக்கு விருந்தளித்தது’’ என்று தெரிவித்தார்.
நாமும், ‘மெட்ராஸ் முரசு’ சார்பில் ஓவியக் கண்காட்சியை கண்குளிர பார்த்துவிட்டு இளம் ஓவியர்களுக்கு வாழ்த்து சொல்லி விட்டு புறப்பட்டோம்.
ஓவிய உலகில் சாதனை படைக்க வாழ்த்துகள்..!