‘’படிப்பதை, கடமையாக செய்யாமல், கற்றுக்கொள்ள வேண்டும் என்று படித்தால், அது, நம் வாழ்க்கைக்கு பயனளிப்பதோடு நம்மை பிறருக்கு அடையாளம் காட்டும்’’ என்று அசோகர் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் முப்பெரும் விழாவில் வருமான வரித்துறை ஆணையர் நந்தகுமார் பேசினார்.
சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற நிறைவு விழா, ஆண்டு விழா, விளையாட்டு விழா ஆகிய முப்பெரும் விழா 24-01-2024 அன்று அசோக்நகர் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

வருமான வரித்துறை கமிஷனர் நந்தகுமார், வருமான வரித்துறை துணைக் கமிஷனர் கண்ணன், சுங்கவரித் துறை துணைக் கமிஷனர் அழகேசன் அகியோர் தலைமை தாங்கினர். டாக்டர் ஷர்மிளா, சமூக சேவகர்கள் வினோத்குமார் சரோகி, சந்திரசேகர், கே.அனுராதா, நாராயணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

பள்ளி மாணவிகள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைப் பாட, சிறப்பு விருந்தினர்கள் குத்து விளக்கேற்றி பள்ளியி முப்பெரும் விழாவினைத் தொடக்கி வைத்தனர். பட்டதாரி ஆசிரியை D.உமா மகேஸ்வரி வரவேற்புரை வழங்க, பள்ளி தலைமை ஆசிரியர் இரா. தமிழரசி சிறப்பு விருந்தினர்களை பொன்னாடை போர்த்தியும் நினைவு பரிசு வழங்கியும் கெளரவித்தார். பள்ளி உதவி தலைமை ஆசிரியை ப.கிரிஜா, பள்ளியின் ஆண்டு அறிக்கையை வாசித்தார்.

வருமான வரித்துறை துணைக் கமிஷனர் கண்ணன் பேசுகையில், “நானும் உங்களைப் போல அரசு பள்ளியில் தான் படித்தேன். தமிழ் வழியில் கல்வி பயின்றேன். இந்த அரசுப் பள்ளியில் உங்களிடம் பேசுவதை நினைத்து பெருமைப்படுகிறேன். கல்வி ஒன்றுதான் உங்களுக்கு மரியாதையையும் அதிகாரத்தையும் பெற்றுத்தரும். வருங்காலத்தில் இங்குள்ள மாணவிகளும் உயர்ந்த இடத்துக்கு வர வேண்டும்” என்று வாழ்த்தினார்.

டாக்டர் ஷர்மிளா பேசுகையில், ‘’1962 ஆம் ஆண்டு 4 ஆசிரியர்களுடன் 67 மாணவிகளுடன் தொடங்கப்பட்ட இந்தப்பள்ளியில் 4500 மாணவிகள் இப்போது படிக்கிறார்கள். ஏழை எளிய மக்களின் அறிவுக்கண்களை திறக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இந்த பள்ளியின் ஆசிரியர் பெருமக்களின் சேவையை மனதார பாராட்டுகிறேன். கல்வி, விளையாட்டு போட்டி, கலை நிகழ்ச்சிகளில் அபாரத்திறமை உள்ள இந்த பள்ளியிடம் தனியார் பள்ளிகள் பிச்சை வாங்க வேண்டும். அசோக்நகர் அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியின் ஆண்டறிக்கை, இப்பள்ளியின் பெருமையை பறைசாற்றுகிறது. மாணவிகளே..! நீங்கள், இந்த பள்ளிக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்க்க வேண்டும். வாழ்க்கையில் உயர்ந்த லட்சியங்களுடன் உயர்ந்த இடத்தை அடைய வேண்டும்’’ என்று வாழ்த்தினார்.

சுங்கவரி்த் துறை துணை ஆணையர் அழகேசன் பேசுகையில், ‘’மனதும் உடம்பும் ஆரோக்கிய மாக இருந்தால் அனைத்தும் நன்றாகவே நடக்கும். கல்வியில் இந்த பள்ளி சேர்த்து வைத்திருக்கும் வரலாற்று சாதனைகள், இங்கு படிக்கும் மாணவிகளை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சேர்த்துவிடும். இப்போது உள்ள தொழில் நுட்பங்களால் கவனச்சிதறல் பிரச்னைகள் அதிக அளவில் ஏற்படுகிறது. அது உங்கள் எதிர்காலத்தை சிதைத்து விடும். எனவே, மாணவிகளே நீங்கள் உஷாராக இருக்க வேண்டும். கல்வி ஒன்றே அழிக்க முடியாத செல்வம்; கல்வி மட்டுமே உன்னோடு எப்போதும் இருக்கும் என்பதால் இந்த வயதில் கல்வியில் மட்டுமே முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும். பெற்றோருக்கு இந்த பள்ளிக்கும் பெருமை சேர்க்க வேண்டும்’’ என்று மாணவிகளைக் கேட்டுக் கொண்டார்.

வருமான வரித்துறை ஆணையர் நந்தகுமார் பேசுகையில், ‘’வெற்றிக் கனியை பறிக்க வேண்டும் என்றால் அதை நோக்கி நீங்கள் தொடர்ந்து தன்முனைப்புடன் உழைக்க வேண்டும். நீங்கள் வெற்றி பெறும் போது, உங்களை இந்த உலகம் அடையாளம் காணும். மற்றவர்கள், உங்களை முன்மாதிரியாக பின்பற்றுவார்கள். படிப்பதை, கடமையாக செய்யாமல், ஆர்வமுடன் கற்றுக்கொள்ள வேண்டும் என்று படித்தால், அது, நம் வாழ்க்கைக்கு பயனளிப்பதோடு நம்மை பிறருக்கு அடையாளம் காட்டும்’’ என்று மாணவிகளுக்கு வாழ்க்கைக்கு வழிகாட்டி பேசினார்.

இலக்கிய மன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் 2022 – 2023 ஆம் ஆண்டில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை முழு ஆண்டு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கும் 2023 ஜூன் முதல் டிசம்பர் வரை 100% வருகை புரிந்த மாணவிகளுக்கும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் கலை திருவிழாவில் போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் விருதுகளும் சான்றிதழ்களும் சிறப்பு விருந்தினர்கள் மூலம் வழங்கப்பட்டன.

மேலும், பள்ளியில் சிறப்பாக செயலாற்றிய NCC, NSS, Guides, JRC மாணவிகளுக்கும் சான்றிதழ்களும் கேடயங்களும் வழங்கப்பட்டன. இதனை தொடர்ந்து பள்ளி மாணவிகளின் தமிழ் உரை, ஆங்கில உரை, பாடல், பரதநாட்டியம், குழு நடனம், நாடகம், சிலம்பாட்டம், கராத்தே போன்ற கலை நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடைபெற்றன.

பள்ளியின் தலைமை ஆசிரியை இரா.தமிழரசி வாழ்த்துரை வழங்கினார். முதுகலை ஆசிரியர் ஆர். மகாதேவி, நன்றி நவில நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது. முப்பெரும் விழா முழுவதையும் முதுகலை ஆசிரியர் எழிலரசி, பட்டதாரி ஆசிரியர் ஹேமலதா சிவன் ஆகியோர் சிறப்பாக தொகுத்து வழங்கினார்கள்.
இவ்வாறு, சென்னை அசோக் நகர் பெண்கள் அரசு மேல் நிலைப் பள்ளியின் 62 வது ஆண்டு முப்பெரும் விழா கலர் புல்லாக நடந்து முடிந்தது.

