பாகிஸ்தானில் விளையாட இந்திய அணி மறுத்தால் உலகக் கோப்பைப் போட்டியைப் புறக்கணிப்போம் என பாகிஸ்தான் விளையாட்டுத் துறை அமைச்சர் எசான் மசாரி எச்சரித்துள்ளார்.
ஆசியக் கோப்பைப் போட்டியை பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 17 வரை இப்போட்டி நடைபெறவுள்ளது. அரசியல் சூழல் காரணமாக பாகிஸ்தானுக்குச் செல்ல இந்தியா மறுத்துள்ளதால், இந்திய அணி விளையாடும் ஆட்டங்கள் இலங்கையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் ஆசியக் கோப்பைப் போட்டியின் அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை.
இந்தியா விளையாடும் ஆட்டங்கள் அனைத்தும் இலங்கையில் நடத்தப்பட வேண்டும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் (ACC) பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளது. இதற்கு பாகிஸ்தான் விளையாட்டுத் துறை அமைச்சர் எசான் மசாரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்குப் பேட்டி அளித்துள்ள எசான் மசாரி, “ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தான் நடத்துகிறது. எனவே எல்லா ஆட்டங்களும் பாகிஸ்தானில் தான் நடைபெற வேண்டும். அதைத் தான் கிரிக்கெட் ரசிகர்களும் விரும்புகிறார்கள். இலங்கையில் தான் விளையாடுவோம் என்று இந்தியா கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.” என்றார்.
உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியின் இந்தியச் சுற்றுப்பயணம் குறித்து முடிவெடுக்க ஓர் உயர்மட்டக் குழுவை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் அமைத்துள்ளார். வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ தலைமையிலான இந்தக் குழுவில் விளையாட்டுத் துறை அமைச்சர் எசான் மசாரியும் இடம்பெற்றுள்ளார்.
டர்பனில் நடைபெறவுள்ள ஐசிசி கூட்டத்தில் பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா – பிசிபி தலைவர் ஜகா அஷ்ரஃப் சந்திப்பு நடைபெறவுள்ளது . அப்போது ஆசியக் கோப்பை, உலகக் கோப்பை போட்டிகள் குறித்து இருவரும் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிசிசிஐ தலைவரான ஜெய் ஷா தான் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கும் (ACC) தலைவராக உள்ளார்.
இந்தியா விளையாட்டில் அரசியலைக் கொண்டு வருகிறது என்று எசான் மசாரி விமர்சித்துள்ளார். “நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற அணிகள் சமீபத்தில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளன. அவர்களுக்கு உச்சபட்ச பாதுகாப்பை பாகிஸ்தான் அரசு வழங்கியது.” என்றார்.
மேலும் அவர் கூறியதாவது: இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டங்களுக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இந்தியா நல்ல முடிவைத் தெரிவிக்கும் என்று நம்புகிறோம். பாகிஸ்தானில் நடைபெறும் ஆசியக் கோப்பை போட்டியில் இந்தியா கலந்துகொண்டு விளையாட வேண்டும். இல்லாவிட்டால் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பைப் போட்டியை பாகிஸ்தான் அணி புறக்கணிக்கும் என்றார்.