தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் பொதுச்செயலாளர் பி.பெருமாள் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் ஆவின் கூட்டுறவு நிறுவனம் 1981 முதல் மூன்று அடுக்குமுறையில் செயல்பட்டு வருகிறது. ஆவின் கூட்டுறவு இணையத்தின் கீழ் 9673 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சொசைட்டிகள் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் சுமார் 2 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படும் நிலையில் தற்போது ஆவின் கூட்டுறவு சொசைட்டிகள் மூலம் சுமார் 26 லட்சம் லிட்டர் பால் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளாக கால்நடை தீவனம், பருத்திக்கொட்டை, புண்ணாக்கு உள்ளிட்ட உலர் தீவனங்கள் விலை பல மடங்கு உயர்ந்த சூழலில் பாலின் கொள்முதல் விலையை லிட்டருக்கு ஒன்றுக்கு ரூபாய் பத்து ரூபாய் உயர்த்த கோரியும், ஊக்கத்தொகை, மானிய விலையில் தீவனம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பால் உற்பத்தியாளர்கள் தமிழகம் முழுவதும் போராடிய சூழலில், அரசு லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் மூன்று மட்டுமே உயர்த்தியது. பால் உற்பத்தியாளர்களின் இதர கோரிக்கைகளை இதுவரை நிறைவேற்றவில்லை.
இதன் காரணமாக பால் உற்பத்தியாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், ஆவின் நிறுவனம் கொடுப்பதை விட தனியார் நிறுவனங்கள் லிட்டருக்கு ஒன்றுக்கு ரூபாய் பத்து உயர்த்தி கொடுக்கும் சூழலில், ஆவினுக்கு பால் கொடுப்பதை தவிர்த்து தனியார் நிறுவனங்களை நோக்கி பால் உற்பத்தியாளர்கள் சென்றுள்ளனர். மேலும் தமிழக அரசு ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு விற்பனை விலையை ரூபாய் மூன்று குறைத்தது. இதனால் ஆவின் நிறுவனத்திற்கு, ஆண்டு ஒன்றுக்கு ரூபாய் 300 கோடி நட்டம் ஏற்படுகிறது.
இதன் காரணமாக ஆவினுக்கு பால் கொடுத்த உற்பத்தியாளர்களுக்கு உரிய காலத்தில் பணம் பட்டுவாடா செய்வதில்லை. மேலும் கடந்த காலத்தில் 12 ஆயிரம் ஆரம்ப சொசைட்டிகள் செயல்பட்ட சூழலில், தற்போது சொசைட்டிகள் நலிவடைந்து மூடும் நிலை உருவாகி வருகிறது. மேலும் கடந்த காலத்தில் ஆவின் நிறுவனம் சுமார் 40 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்த சூழலில் தற்போது 26 லட்சம் லிட்டர் பால் மட்டுமே கொள்முதல் செய்கிறது.
ஆவின் நிறுவனத்தின் நிர்வாக சீர்கேட்டின் காரணமாக அதன் மார்க்கெட்டிங் பகுதி சுருங்கியுள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில் ஹரிட்டேஜ் போன்ற தனியார் நிறுவனங்கள் பல லட்சம் லிட்டர் பாலை விற்பனை செய்கின்றனர். தற்போது பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலை உள்ளிட்ட கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்வதன் மூலம் ஆவின் கூட்டுறவு நிறுவனத்திற்கு கூடுதலாக பால் கொள்முதல் செய்ய முடியும்.
ஆனால், தமிழக அரசு தற்போது ஆவினுக்கு பால் வராமல், தனியாருக்கு கூடுதலாக பால் கொள்முதல் செய்வதை பற்றி எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. தற்போது பால் உற்பத்தியாளர்களுக்கு ஆவின் நிறுவனம் கொள்முதல் விலையை உயர்த்திக் கொடுக்காததன் காரணமாகவும், தனியார் நிறுவனங்கள் கூடுதல் விலை கொடுப்தன் காரணமாகவும், ஆவினுக்கு பால் வரத்து குறைந்து ஹெரிட்டேஜ், திருமலா, ஹட்சன், ஆரோக்கியா, கெவின், எஸ்.என்.பி, சேவாமில்க், ராஜ்மில்க், கே.சி பால், அமிர்தா பால் போன்ற தனியார் நிறுவனங்களுக்கு பால் கொள்முதல் கூடியுள்ளது.
தற்போது அமுல் போன்ற கூட்டுறவு நிறுவனங்கள் தமிழகத்தில் பால் கொள்முதல் செய்வதால் ஆவின் நிறுவனத்திற்கு ஆபத்து என கூறுவது ஏற்புடையதல்ல. எனவே, ஆவின் நிறுவனம் பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்திக் கொடுத்தும், கொள்முதல் மற்றும் வினியோகத்திற்கான கட்டுமானத்தை பலப்படுத்துவதன் மூலமே ஆவின் நிறுவனம் வலுப்பெறும்.
எனவே, தமிழக அரசு பாலுக்கான கொள்முதல் விலை உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்று, ஆவின் நிர்வாகத்தில் உள்ளிட்ட குளறுபடிகளை சரி செய்து, ஆவினுக்கு கூடுதல் பால் கொள்முதல் செய்து ஆவின் நிறுவனத்தை பாதுகாத்து, பொது மக்களுக்கு தரமான பாலையும், பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாத்திட தமிழ்நாடு அரசிற்கு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் வேண்டுகோள் விடுகிறது.

