ஆடி மாதம் என்றாலே அம்மன் மாதம் எனலாம். இம்மாதத்தில் வருகின்ற ஆடி வெள்ளியானது சிறப்பு வாய்ந்ததாகும். இம்மாதத்தில் அம்மனை வழிபட்டால் நம் வீட்டில் நற்காரியங்கள் நடைபெறும் என்பது ஐதீகம். குறிப்பாக பெண்களுக்கு குறை தீர்க்கும் மாதமாக இருக்கிறது ஆடி மாதம்.
ஆடி வெள்ளியும் அதன் சிறப்பும் :
அம்மன் பராசக்தி உலகில் உள்ள அனைத்து உயிர்களை காப்பாற்ற பல வடிவங்களை இம்மாதத்தில் எடுத்துள்ளார். குறிப்பாக மகளிரின் குறைகளை போக்க வரம் பெற்ற மாதம் எனவும் இம்மாதத்தை கூறலாம். ஆடி வெள்ளி என்றாலே சிறப்பு தான் இந்நாட்களில் அம்மனை வழிபடுவது, பூஜைகளை செய்வது போன்றவற்றால் நம்மை சூழ்ந்துள்ள தீமைகள் நீங்கி வாழ்க்கை செழிப்பு அடையும்.
பெண்களுக்கு ஏதேனும் திருமண தடை, குழந்தை பாக்கியம், வேலைகளில் பிரச்சனை போன்ற தடைகள் நீங்கி நன்மை உண்டாகும்.
நிறைவேற்றும் ஆடிவெள்ளி :
அம்மனிடம் வேண்டிய வரங்களைப் பெற உகந்த மாதம் ஆடி மாதம் என்பதால், ஆடி வெள்ளியன்று வழிபாடு செய்தல் நல்லது. மேலும் அனைத்து ஆடி வெள்ளியும் செய்ய முடியாதவர்கள் ஒரு ஆடி வெள்ளியாவது வழிபடலாம். அம்மனுக்கு மாலை அணிவித்து பூஜை செய்யலாம். மேலும் ஆடி வெள்ளியன்று நம் குலதெய்வம், சப்த கன்னிகள், முப்பெரும் தேவியர்களையும் வழிபட வேண்டும்.
மக்களை காக்க அவதாரம் எடுத்த துர்கா தேவியை வணங்கலாம். நம் வாழ்வில் உள்ள பிரச்சனைகள், சிக்கல்கள், துன்பங்களை போக்க காளிதேவியை நாம் போற்ற வேண்டும்.
வீட்டிலிருந்தும் வழிபாடு செய்யலாம்..!
வேப்பிலை மற்றும் விரலி மஞ்சள் கிழங்கை கோர்த்து அம்மனுக்கு மாலையாக செய்து போடலாம். இதை செய்ய முடியாதவர்கள் வீட்டிலிருந்தும் வழிபாடு செய்யலாம். உடலில் எவ்விதமான நோய் இருந்தாலும் அம்மனிடம் ஆடி வெள்ளியன்று வேண்டினால் எல்லா விதமான நோய்களும் நீங்கிடும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.
இதன் மூலம் ஆடி வெள்ளி அன்று அம்மனை வழிபட்டால் அம்மன் மனம் குளிர்ந்து வேண்டிய வரங்களை அளித்து நம் வாழ்க்கையில் நன்மைகளை செய்வார் என்பது ஆன்மீகத்தில் கூறப்படுகிறது.
– தே . சுகன்யா