நம் நாட்டின் முதன்மை தொழில் என்றாலே அது விவசாயம் தான். நமக்கு முதல் அடிப்படை தேவையான உணவை அளிக்கும் விவசாயத்தில் இந்த ஆடி மாதம் முக்கிய பங்களிக்கிறது.
ஆடி மாதமும் விவசாயமும்:
நாம் அனைவரும் “ஆடி பட்டம் தேடி விதை” என்ற பொன்மொழியை கேள்விப்பட்டிருப்போம். ஆடி மாதத்தை பருவமழை காலம் என்பார்கள். இந்த மாதத்தில் ஏரிகள், ஆறுகள், குளங்கள் அனைத்தும் நிறைந்திருக்கும். விவசாயம் செய்வதற்கு போதுமான நீர்வளங்கள் இந்த மாதத்தில் காணப்படுவதால் தான் “ஆடி பட்டம் தேடி விதை” என்கிறார்கள்.
ஆடி மாதத்தில் “முளைப்பாரி” திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவில் ஒன்பது வகையான விதைகளை ஒரு பானையில் விதைப்பார்கள். 10 ஆம் நாள் மேளத் தாளங்களுடன் இந்த முளைப்பாரியை அம்மனை வழிபட்டு ஆற்றங்கரையில் கரைப்பார்கள்.
இந்த திருவிழாவிற்கு பின்னணியில் ஒரு காரணம் உள்ளது. இந்த முளைப்பாரியில் யாருடைய பயிர் வளமாக வளர்கிறதோ அந்த விதையை அனைவரும் விவசாயத்திற்கு பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
இந்த முளைப்பாரி திருவிழாவில் “கும்மி”, “கோலாட்டம்” போன்ற கலை நிகழ்ச்சிகளையும் நடத்தி மக்கள் ஆடி பாடி மகிழ்வார்கள்.
ஆடி மாதத்தின் பயிர்கள்:
ஆடி மாதத்தில் விதைக்கப்படும் பயிர்கள் வளமாக வளர்வதால், ஆடி மாதம் விவசாயத்திற்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் கேழ்வரகு, சோளம், கம்பு, மொச்ச பயரு, தட்ட பயரு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, துவரம் பருப்பு, பச்ச பயரு, கோதுமை, கடுகு, வெந்தயம், எள்ளு, கொள்ளு போன்ற பயிர்கள் அதிக அளவில் விதைப்பார்கள்.
ஆடி மாதம் அம்மனுக்கு மட்டும் உகந்த மாதம் அல்ல விவசாயத்திற்கும் ஏற்ற மாதமாகும்.
– கோ. தீபா புவனேஸ்வரி