உலகக் கோப்பையும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளும் ஒரே சமயத்தில் நடைபெறுவதால் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு ருதுராஜ் கெயிக்வாட் தலைமையில் இரண்டாம் நிலை அணியை பிசிசிஐ அறிவித்தது. ரிங்கு சிங், ஷிவம் துபே, பிரப்சிம்ரன் சிங், திலக் வர்மா, ரவி பிஸ்னாய், ஷிவம் மவி உள்ளிட்டோர் இந்த அணியில் இடம்பிடித்துள்ளார்கள்.
யூட்யூப் விடியோவில் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளதாவது:
இந்த அணியைப் பார்க்கும்போது நல்ல அணியாகத் தோன்றும். இந்த அணியில் இந்தப் பெயர்கள்தான் இடம்பெறும். இதில் ஏதாவது பெயர் விடுபட்டிருக்கிறதா? வருண் சக்ரவர்த்தியின் பெயர் இடம்பெறாதது எனக்குப் பெரிதாகத் தெரிகிறது.
அவரை துபையில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் விளையாட வைத்தீர்கள். பிறகு, அணியிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டார். ஆனால், அவரது சமீபத்திய ஐபிஎல் செயல்பாடுகள் மிகச் சிறப்பாகவே உள்ளன. எனவே, ஆசிய விளையாட்டுப் போட்டியில் வருண் சக்ரவர்த்தியின் பெயர் இடம்பெறும் என எதிர்பார்த்தேன், இடம்பெறவில்லை.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சவால்கள் பெரிதளவில் இருக்காது. ரவி பிஸ்னாய் முறையான சுழற்பந்துவீச்சாளர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. வாஷிங்டன் சுந்தர் இருக்கிறார். உள்ளூர் கிரிக்கெட்டில் குறைவான ஓவர்களையே வீசியிருந்தாலும்கூட இவர் நிறைய ஓவர்களுக்கு உதவுவார். காயங்களுடன் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறார். மூன்றாவதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள சுழற்பந்துவீச்சாளர் ஷாபாஸ் அஹமத். இவர் இந்தியாவுக்காகவும் விளையாடியிருக்கிறார். இந்தக் கோணத்திலிருந்து பார்க்கும்போது சுழற்பந்துவீச்சாளர்களின் தேர்வு சரியாக இருக்கும். இருந்தாலும், வருண் சக்ரவர்த்திக்கும் இடமளித்திருக்கலாம் என்பது என்னுடைய பார்வை என்றார் ஆகாஷ் சோப்ரா.
நடந்து முடிந்த ஐபிஎல் பருவத்தில் வருண் சக்ரவர்த்தி 14 ஆட்டங்களில் 20 விக்கெட்டுகள் எடுத்தார். பந்துவீச்சு சராசரி 21.45. எகானமி 8.15.