டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களை பார்வையிடச் சென்று காணாமல் போன 5 கோடீஸ்வரர்களும் உயிரிழந்தனர். லண்டன் டைட்டானிக் கப்பலை பார்வையிட சென்றபோது, 5 கோடீஸ்வரர்களுடன் அட்லாண்டிக் பெருங்கடலில் மாயமான நீர்மூழ்கியில் ஆக்ஸிஜன் இருப்புக்காக வரையறுக்கப்பட்டிருந்த 96 மணி நேரக்கெடு கடந்துவிட்டது.
நீர்மூழ்கியில் இங்கிலாந்து தொழிலதிபர் ஹமீஷ் ஹார்டிங், ஓஷன்கேட் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டாக்டன் ரஷ், நீர்மூழ்கி மாலுமியும் பிரான்ஸ் கடற்படையின் முன்னாள் கமாண்டோவுமான பால்-ஹென்றி நார்கியோலே, பாகிஸ்தான் தொழிலதிபர் ஷசாதா தாவூத், அவரது மகன் சுலைமான் தாவூத் ஆகிய 5 பேர் இருந்தனர்.
நீர்மூழ்கியின் அழுத்த அறை வெடித்தது
111 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலைக் காண்பதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்ற டைட்டன் நீர்மூழ்கி உள்ளுக்குள்ளேயே வெடித்து சிதறியதில் அதில் இருந்த 5 பேரும் உயிரிழந்து விட்டதாக அமெரிக்க கடலோரப்படை அறிவித்துள்ளது.
அமெரிக்கக் கடலோரப்படை, டைட்டானிக் தளத்தைச் சுற்றியுள்ள குப்பைகளுக்கு மத்தியில் டைட்டனின் ஐந்து பெரிய துண்டுகளை வியாழக்கிழமை மாலை கண்டுபிடித்ததாகக் கூறியது. இது நீர்மூழ்கியின் அழுத்த அறை வெடித்திருப்பதைக் காட்டுவதாகக் கூறியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள கடலோரப்படை, அவர்களின் உடல்கள் எப்போதாவது மீட்கப்படுமா என்பதை உறுதிப்படுத்த முடியாது என்று கூறியது. ரிமோட் மூலம் இயக்கப்படும் வாகனங்கள் (ROVs) தளத்தில் இருக்கும் என்றாலும், அடுத்த 24 மணிநேரத்தில் தேடுதல் பணி படிப்படியாக நிறுத்தப்படுகிறது.
அமெரிக்கக் கடலோரப்படையின் செய்தியாளர் சந்திப்பிற்கு முன்னதாக, டைட்டானை இயக்கும் ஓஷன்கேட் நிறுவனம் ஓர் அறிக்கையை வெளியிட்டது.
“எங்கள் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டாக்டன் ரஷ், ஷாஜதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலேமான் தாவூத், ஹமிஷ் ஹார்டிங் மற்றும் பால்-ஹென்றி நர்ஜோலெட் ஆகியோரை துரதிர்ஷ்டவசமாக இழந்துவிட்டோம் என்று நாங்கள் இப்போது நம்புகிறோம்.” என்று நீர்மூழ்கியை இயக்கும் ஓஷன்கேட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
“இந்த மனிதர்கள் உண்மையான ஆய்வாளர்கள், அவர்கள் தனித்துவமான சாகச உணர்வையும், உலகின் கடல்களை ஆராய்வதற்கும் பாதுகாப்பதற்கும் ஆழ்ந்த ஆர்வத்தையும் கொண்டவர்கள்.. இந்த துயரமான நேரத்தில் எங்கள் இதயங்கள் இந்த ஐந்து ஆன்மாக்களுடனும் அவர்களது குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருடனும் உள்ளன. அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.
மீட்புப் பணியில் மிகவும் கடினமாக உழைத்த சர்வதேச சமூகத்தின் பல அமைப்புகளைச் சேர்ந்த எண்ணற்ற ஆண்களுக்கும் பெண்களுக்கும் முழு OceanGate குடும்பமும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல் பயணத்தில் இடம் பெற்றவர்
காணாமல் போன நீர்மூழ்கியில் 3 சுற்றுலாப் பயணிகள், ஒரு பைலட், ஒரு சுற்றுலா வழிகாட்டி ஆகிய 5 பேர் இருந்தனர். ஹாமிஷ் ஹார்டிங் – 58 வயதான இவர் பிரிட்டனைச் சேர்ந்த பெரும் தொழிலதிபர். சாகசப் பிரியரான இவர் விண்வெளிப் பயணத்துடன், பல முறை புவியின் தென் முனைக்கும் சென்று திரும்பியுள்ளார்.
ஷாஸாதா தாவூத் – 48 வயதான இவர் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் கோடீஸ்வரர். சுலேமான் தாவூத் – ஷாஸாதா தாவூத்தின் மகன், 19 வயதேயான இவர் ஒரு மாணவர். பவுல் ஹென்றி நர்கோலெட் – 77 வயதான இவர் பிரெஞ்சு கடற்படையில் ‘டைவர்’ பணியில் இருந்தவர். டைட்டானிக் சிதைவுகளில் அதிக நேரம் ஆய்வு மேற்கொண்டவர், முதல் பயணத்தில் இடம் பெற்றவர் ஆகிய பெருமைகளைக் கொண்ட இவருக்கு மிஸ்டர் டைட்டானிக் என்ற பட்டப்பெயரும் உண்டு. ஸ்டாக்டன் ரஷ் – 61 வயதான இவர்தான் இந்த டைட்டானிக் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த ஓஷன் கேட் நிறுவனத்தின் நிறுவர் மற்றும், தலைமை செயல் அதிகாரி.
பேரழிவு வெடிப்பு
அமெரிக்க கடலோரப்படையின் ரியர் அட்மிரல் ஜான் மௌகரின் கூற்றுப்படி, அவர்கள் கண்டறிந்தது ஒரு “பேரழிவு வெடிப்பு” நடந்திருப்பதைக் காட்டுகிறது. ஏனென்றால், இரண்டு பாகங்களை அவர்கள் கண்டுபிடித்தனர். ஒன்று டைட்டனின் வால் கூம்பு மற்றும் மற்றொன்று அதன் தரையிறங்கும் சட்டகம் ஆகியவற்றைக் கொண்டிருந்தது. இவற்றை வைத்துப் பார்க்கும்போது கப்பல் சிதறியதாகக் தெரிய வருகிறது.
இது ஏன் நடந்தது என்பதைக் கண்டுபிடிப்பதற்கு இதுவரை கிடைத்திருக்கும் பாகங்களைக் கொண்டு ஆய்வு செய்யப்படும் என்று மீட்புக் குழு நிபுணர்கள் கூறுகிறார்கள். “கருப்புப் பெட்டி எதுவும் இல்லை, எனவே கப்பலின் கடைசி நகர்வுகளை உங்களால் கண்காணிக்க முடியாது,” என்று அவர்கள் கூறுகிறார்கள். அதனால் விசாரணையின் செயல்முறை விமான விபத்து போன்றதாக இருக்காது.
புலனாய்வாளர்கள் கிடைத்திருக்கும் துண்டுகளை மேற்பரப்பிற்கு கொண்டு வந்ததும், அந்த கடைசி தருணங்களில் என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்ளும் வகையில் அதை ஆய்வு செய்வார்கள். நீர்மூழ்கியின் பாகங்கள் நுண்ணோக்கின் கீழ் கவனமாக ஆராயப்படும். எந்த இடத்தில் வெடிப்பு ஏற்பட்டது, பிளவு எங்கே தொடங்கியது என்பது அதன் மூலம் கண்டுபிடிப்பார்கள்.
தாவூத் தனது மனைவி கிறிஸ்டின்
நீர்மூழ்கியில் சென்று உயிரிழந்தவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த தந்தையும் மகனும் அடங்குவார்கள். பிரிட்டிஷ் தொழிலதிபர் ஷாஜதா தாவூத் பாகிஸ்தானின் பணக்கார குடும்பங்களில் ஒன்றைச் சேர்ந்தவர். இவர் தனது மகன் சுலைமானுடன் நீர்மூழ்கியில் பயணம் செய்தார். தாவூத் தனது மனைவி கிறிஸ்டின் மற்றும் மகள் அலினாவுடன் தென்மேற்கு லண்டனில் உள்ள சர்பிட்டனில் வசித்து வந்தார். நீர்மூழ்கியில் செல்வதற்கு முன்பு இவர்கள் குடும்பம் கனடாவில் ஒரு மாத காலம் தங்கியிருந்தது.
ஷாஜதா ஒரு பெரிய உர நிறுவனமான என்க்ரோ கார்ப்பரேஷன் என்ற பாகிஸ்தானின் கூட்டு நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்தார். அவர் தனது குடும்பத்தின் தாவூத் அறக்கட்டளை மற்றும் கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட SETI இன்ஸ்டிடியூட் உடன் பணிபுரிந்தார். இது ஏலியன்கள் பற்றி ஆராய்ச்சி செய்யும் நிறுவனம்.
தந்தையின் மகிழ்ச்சிக்காக சென்றார்
ஷாஜதா மூன்றாம் சார்லஸ் அரசால் நிறுவப்பட்ட இரண்டு தொண்டு நிறுவனங்களுக்கு நிதி உதவி செய்பவராகவும் இருந்தார். அரண்மனையில் இருந்து அவருக்கு மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஷாஜதாவின் குடும்பத்தினர், அவர் “வெவ்வேறு இயற்கை வாழ்விடங்களை” ஆராய்வதில் ஆர்வமாக இருந்ததாகவும், இதற்கு முன்பு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஆக்ஸ்போர்டு யூனியன் ஆகிய இரண்டிலும் பேசியதாகவும் கூறினார்.
அவர் அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியாவிலும், இங்கிலாந்தில் உள்ள பக்கிங்ஹாம் பல்கலைக்கழகத்திலும் படித்தார். அவரது மகன் சுலேமான் கிளாஸ்கோவில் உள்ள ஸ்ட்ராத்க்லைட் பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்தார், அங்கு அவர் பல்கலைக்கழகத்தின் வணிகப் பள்ளியில் தனது முதல் ஆண்டை முடித்திருந்தார். நீர்மூழ்கிப் பயணம் குறித்து பயங்கரமானதாக உணர்ந்ததாகவும், எனினும் தனது தந்தையின் மகிழ்ச்சிக்காக அவருடன் சென்றதாகவும் சுலேமானின் அத்தை தெரிவித்திருந்தார்.

