‘தமிழ் அகராதியியலின் தந்தை’ என்று போற்றப்படும் வீரமாமுனிவரின் தமிழ்த் தொண்டைப் போற்றும் வகையில், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் மூலம் ஆண்டுதோறும் நவம்பர் 8-ஆம் நாள் ‘தமிழ் அகராதியியல் நாளாகக்’ கொண்டாடப்படுவதோடு, நவம்பர் 08- ஆம் நாளில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்தப்பட்டுவருகிறது.
நடப்பு 2023-2024-ஆம் ஆண்டிற்கான பன்னா ட்டுக் கருத்தரங்கத்தில் பங்கேற்க ஆர்வமுள்ள தமிழார்வலர்கள், தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் உட்பட அனைவரும் பின்வரும் பொருண்மைகளில் 5 பக்க அளவில் ஆய்வுக் கட்டுரைகளை இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
பன்னாட்டுக் கருத்தரங்கத்திற்கு வழங்கப்படும் ஆய்வுக் கட்டுரைகளில் தேர்வுக்குழுவால் தெரிவுசெய்யப்படும் கட்டுரைகள் மட்டுமே ‘தமிழ் அகராதியியல் நாள்’ சிறப்பு ஆய்வு மலரில் இடம் பெறும்.
12 தலைப்புகள்:
1. மின்னகராதி காலத்தின் தேவை 2. கலைச்சொல்லாக்கமும் ஊடகத்துறையும் 3. குமுக வலைத்தளங்களில் கலைச்சொல் பயன்பாடு 4. கலைச்சொல்லாக்கமும் மொழிவளர்ச்சியும் 5. கணினித் தமிழ்வளர்ச்சியில் சிக்கல்களும் தீர்வுகளும் 6. தமிழ்ப் பத்தி இலக்கியங்களில் காணப்படும் கலைச்சொற்கள் 7. ஓலைச்சுவடிகளில் காணப்படும் அருந்தமிழ்ச்சொற்கள் 8. கலைச்சொல்லாக்கமும் திரைத்துறையும் 9. தமிழில் மொழிக் கலப்பைக் கலைதல் 10. வட்டார வழக்கில் சொல்லாக்கம் 11. தமிழ் அகராதியியலின் தோற்றமும் வளர்ச்சியும் 12. அகராதி வளர்ச்சியில் மேலைநாட்டினரின் பங்கு உள்ளிட்ட தலைப்புகளில் கட்டுரைகளை ஏ4 அளவில் ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் மருதம் ஒருங்குறி (யுனிகோடு) எழுத்துருவில், எழுத்தளவு 11 புள்ளி, வரி இடைவெளி 1.5-இல், சொற்செயலிக்கோப்பாக (Word Document file) agarathimalar2020@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், “இயக்குநர், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், நகர் நிருவாக அலுவலக வளாகம், முதல் தளம், எண். 75, சாந்தோம் நெடுஞ்சாலை, மே.ரா.செ. நகர், சென்னை – 600 028” என்ற இயக்கக முகவரிக்கும் 15.09.2023-ஆம் நாள் மாலை 5.00 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பிவைக்க வேண்டும்.
கட்டுரையாளர்கள் கட்டுரையுடன் முகவரி, கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, கடவுச்சீட்டு அளவிலான (Passport size Photo) ஒளிப்படம், ஒரு பக்க அளவில் தன்விளக்கக் குறிப்பு ஆகியவற்றையும் கட்டாயம் இணைத்து அனுப்ப வேண்டும். மேலும், அனுப்பப்படும் ஆய்வுக் கட்டுரை இதற்கு முன் வேறு எந்த இதழ்களுக்கும் வழங்கப்பெறவில்லை என்ற உறுதிமொழியையும் தன்னொப்பமிட்டு (self attested) அனுப்ப வேண்டும். கட்டுரைகள் அடிக்குறிப்புகள் மற்றும் துணைநூற்பட்டியலுடன் அமைதல் வேண்டும் என்று செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் இயக்குநர் தெரிவித்துள்ளார்.