என் அப்பா போலீஸ் என்பதால் நான் அடிக்கடி அவருக்கு சாப்பாடு கொடுப்பதற்காக காவல் நிலையம் சென்று வருவேன். தொலைவிலுள்ள ஒரு கிராமத்திற்கு மாற்றுதலாகிச் சென்றிருந்தார். அவர் அடிக்கடி ஹோட்டலில் சாப்பிட்டு வந்ததால் அவருக்கு அல்சர் பிரச்சினை இருந்தது. அவர் ஹோட்டலில் சாப்பிடுவதை விரும்பமாட்டார்.
அவருக்கு சாப்பாடு கொடுப்பதற்க்காக என் அம்மா சமைத்த உணவை எடுத்துக்கொண்டு அவர் வேலை பார்க்கும் தொலைவிலுள்ள கிராமத்திற்கு சென்றேன். அவர் ஓரு கேஸ் விஷயமாக வெளியில் சென்றிருந்தார். சிறுது நேரம் அவரின் வருகைக்காக காத்துக்கொண்டிருந்தேன். அப்போது அங்கு ஒரு வயதான பெண்மணி பரபரப்புடன் ஓடி வந்து அங்கிருந்த போலீஸ் அதிகாரியிடம் “ஐயா அவன் என் முத்துவை அடிச்சுட்டான்யா, கல்லைத்தூக்கி மண்டையில போட்டுட்டான்யா, ரத்தமா வடியுதுய்யா, உயிரு இழுத்துக்கிட்டு கிடக்குய்யா, கொஞ்சம் சீக்கிரம் வாங்கய்யா” என்று சத்தமிட்டு கொண்டு அழுது புலம்புகிறாள். அவள் புலம்புவதை பார்த்து அந்தப் போலீஸ் ஸ்டேஷன் கவலையோடு உற்று நோக்குகிறது.
ஆனால், அந்த போலீஸ் அதிகாரியோ எந்த டென்ஷனும் இல்லாமல் “சரிம்மா அமைதியாயிரு..’’என்று அவளிடம் கத்தினார். எனக்கும் கோபம் வந்தது. என்னடா இப்படியும் மனிதர்களா என்று மனது வருத்தமடைந்தது. அப்போது என் அப்பா அவரின் வேலையை முடித்துவிட்டு வர தாமதமாகும் என்றும் நீங்கள் உங்கள் ஊருக்கு செல்லுங்கள் என்றும் அந்த போலீஸ் அதிகாரி கூறியதால் நான் அங்கிருந்து என் ஊருக்கு கிளம்பி வந்து விட்டேன். வரும்போது என் மனம் முழுவதும் அந்த போலீஸ் ஸ்டேஷனையும் அந்த முத்துவையுமே நினைத்து அலைபாய்ந்து கொண்டிருந்தது. எனக்கு ஊருக்கு வந்த சேர்ந்த பின்னும், முத்துக்கு என்னவாயிருக்கும் என்ற எண்ணமே எனக்கு மேலோங்கி இருந்தது. என் அப்பா வந்தவுடன் அவரிடம் கேட்க மிக ஆர்வமாக அவரின் வருகைக்காக காத்துக்கொண்டிருந்தேன்.
என் அப்பா எங்கள் வீட்டிற்கு அன்று இரவு வந்தவுடன் அவரிடம் நடந்த விவரத்தை சொல்லி வருத்தப்பட்டேன். அந்த போலீஸ் அதிகாரி நடந்த முறையையும் சொல்லி ஆதங்கப்பட்டேன். ஆனால் என் அப்பாவோ எந்த சலனமுமின்றி மிக சாதாரணமாக எடுத்துக்கொண்டார். ஆனால் அவரோ அந்த போலீஸ் அதிகாரி மிகவும் நல்லவர் என்றும் மிக நியாயமாக நடப்பவர் என்றும் என்னிடம் கூறினார்.
எனக்கு அந்த போலீஸ் அதிகாரியிடமிருந்த கோபம் என் அப்பாவின் மீது தாவியது. என் மனதிற்குள்ளேயே என்னடா எல்லா போலீசும் இப்படித்தானா கல் நெஞ்சம் கொண்டவர்களா இருப்பார்களோ என்று வருந்தினேன். அப்போது அவரிடம் “அப்பா முத்துவுக்கு எப்படி இருக்கு, அந்த கால்தூக்கி போட்ட ஆளை என்ன செய்தீர்கள் என கேட்டேன்”.
அதற்க்கு அவர் “முத்து இப்போ உயிரோட இல்லப்பா, பலமான அடி விழுந்ததால் ஒரே அடியில் உயிர் போயிடுச்சுப்பா” என்கிறார். எனக்கு வேதனை தாள வில்லை. நான் அவரிடம் “அந்த கல்லை தூக்கி போட்ட ஆளை என்ன செய்தீர்கள்” என கோபமாக கேட்டேன்.
’’அந்தக் கள்ளப்பயலுக்கு 500 ரூபாய் அபராதம் போட்டு அந்த அம்மாவிற்கு கொடுத்துட்டோம்’’ என்றார். நான் மிக கோபத்தின் உச்சிக்கே சென்று, ‘’வெறும் 500 ரூபாய் தானா அந்த முத்துவிற்கு” என்றேன்.
அதற்கு அவர் மிகவும் நிதானமாக “அந்த சேவலுக்கெல்லாம் அவ்வளவுதான் கொடுப்பார்கள்” என்னை பெரிதாக மதிக்காமல் அடுத்த வேலையை பார்க்கச் சென்று விட்டார்.
சசி ஐயப்பன்