நாகர்கோவிலுக்கு சென்றிருந்த போது அதன் அடையாளங்களில் ஒன்றான கௌரி சங்கர் ஹோட்டலில் தோசையை ஆர்டர் பண்ணிவிட்டு முதலில் இட்லியின் சுவையை தனியாக அமர்ந்து ருசித்துக்கொண்டிருந்தேன். எப்படித்தான் இவ்வளவு டேஸ்ட்டா செய்யறாங்களோ, இவனுக மட்டும் சென்னையில் ஆரம்பிச்சுருந்தாங்கன்னா சென்னையிலுள்ள அத்தனை பவனும் இவனிடம்தான் கடன் வாங்கணும் அப்படி ஒரு சுவை. நாஞ்சில் மக்கள் மாதிரியே.
ஒரு அண்ணன் வயதிலுள்ள ஒருவன் பக்கத்துக்கு சீட்டில் வந்தமர்ந்தார். கொஞ்சம் தாடியும், காவி வேஷ்டியும் அவர் இந்த மண்தான் என உறுதி செய்தது. ஒன்னு மிஸ்ஸிங் சிறிய சந்தனம்.
அவரும் இரண்டு இட்லியை ஆர்டர் பண்ணி காத்திருந்தார். ஒரு மெல்லிய புன்னகையுடன் ஒரு கலந்துரையாடல் ஆரம்பமானது. நமக்கு யாராயிருந்தாலும் அவர்களோட வரலாற்றை தெரிந்து கொள்வதில் அப்படி ஒரு ஆவல்.
தம்பிக்கு எங்க? என்றார் நாஞ்சில் தமிழில்.
நாஞ்சி தமிழில் ஒருவித மயக்கமுண்டு அங்கு காணும் பெண்களை போல.
சொந்தவொரு வள்ளியூரு, இருக்கறது மெட்ராசுல என்றேன்.
எங்க ஊருல இப்பவும் பெரும்பாலோனோர் சென்னையை ஏத்துக்கிறதே இல்லங்க. அவங்களுக்கு இப்பவும் மெட்ராஸ்தான் நானும் அப்படித்தாங்க.
அங்க எங்க? என்றார்.
புரசைவாக்கத்தில இருக்கேன்.
சாப்ட்வேர்ல வேல பாக்கீங்களோ? என்றார்.
இல்லண்ணா, சமையல் பாத்திரங்கள் செய்யக்கூடிய கம்பெனில வேல பாக்கேன். நம்ம அந்தளவுல்லாம் படிக்கல என்றேன்.
நானும் சென்னையில தான் வேல செஞ்சேன். ஏழு வருஷம் சாப்ட்வேர் கம்பெனில வேல, நல்ல சம்பளம். நல்லாத்தான் போயிட்டுருந்தது. ஒருநாள் நைட் லேட்டா வீட்டுக்கு போகும்போது ஒரு வண்டிக்காரன் தட்டிட்டான். தலையில நல்ல அடி. அந்த அடியின் தழும்பினை காண்பித்துக்கொண்டே சொல்கிறார். ரொம்ப நேரம் யாரும் பார்க்கல. அப்புறம் ஒரு ஆட்டோ காரர் கொண்டு போய் ஹாஸ்ப்பிட்டலில் சேர்த்தார்.
அவர் சொல்லும்போதே நான் ஆர்டர் செய்த தோசையும் அவருக்கான இட்லியும் வந்து சேர்ந்தது. எனக்கு இப்போது அந்த தோசையில் இருந்த நாட்டமெல்லாம் அவரின் நிலையறிய நாட்டம் கொண்டது. அவருக்கு அவர் இட்லியில் நாட்டம் வந்தது போலும். பசியினால் சாப்பிடுவது போல இருந்தது.
அப்புறண்ணே உங்களுக்கு என்னாச்சு? என்றேன்.
தலையில கொஞ்சம் நல்ல அடின்னாலே ஒரு வருடம் ரெஸ்ட்ல தான் இருந்தேன். வேலைக்கும் போக முடியல. வீட்லயும் அவ்வளவு வசதி கிடையாது. செலவும் பல லட்சத்துக்கு மேல ஆயிட்டு. பிரண்ட்ஸ் தான் கொடுத்து ஹெல்ப் செஞ்சாங்க. இப்போ பரவாயில்லை ஆனா ஒரு வித பயவுணர்வு, எதைப்பார்த்தாலும் எரிச்சல், சில விஷயங்கள ஞாபகம் வச்சிக்க முடியல. மறுபடியும் அதே கம்பெனில வேலை கொடுக்கமாட்டேனுட்டானுவ. ஒரு வருஷம் ஆனதுன்னால எல்லாரும் யோசிக்கரானுவன்னு நினைக்கிறேன். என்று சொல்லி முடிக்கும் போது இட்லியை சாப்பிட்டு முடித்திருந்தார்.
என் தோசை அப்படியே இருந்தது. என்னை பார்த்து தம்பி நீங்க இன்னும் சாப்பிடலயா என்றார். எனக்கு சாப்பிடுவதற்கே யோசனையாக இருந்தது. நான் யோசித்துக்கொண்டிருக்கும் போது, தம்பி எனக்கொரு தோசை சொல்லிறீங்களா. உங்க கணக்குல சாப்பிட்டுகிட்டுமா என்று என் தோசையை பார்த்துக்கொண்டே கூறினார்.
அண்ணே நீங்க வேற, நல்ல சாப்பிடுங்கண்ணே. வேற எதாவது வேணுமின்னாலும் கேளுங்கண்ணே என்றேன்.
இல்லப்பா. இதுபோதும் வீட்ல காசு கேட்கவே ஒரு மாதிரி இருக்கு. எப்படியும் மீண்டும் சென்னைக்கு வருவேன் என்றும் உனக்கு நானும் சாப்பாடு வாங்கி தருவேன் என்றும் உறுதியளித்தார்.
சாப்பிட்டுவிட்டு கைகழுவும்போது குளுகுளுவென்ற அந்த நீர் மிகவும் சூடாக இருப்பதை உணர்ந்தேன்.
சசி ஐயப்பன் ( திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் , இக்கதை ஆசிரியர் சொந்த ஊர். பிரசுரிக்கப்பட்ட கதை எழுதிய சசி ஜயப்பன் அவர்களை மெட்ராஸ் முரசு ஆசிரியர் குழு பாராட்டுகிறது)