பாசுமதி அரிசிக்கான பதிவு மற்றும் ஒதுக்கீடு சான்றிதழை அபெடா மூலம் வழங்குவதற்கான எஃப்ஓபி மதிப்பை மறுஆய்வு செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
அரிசியின் உள்நாட்டு விலைகளை கட்டுப்படுத்தவும், உள்நாட்டு நுகர்வோருக்கு போதுமான அளவு அரிசி கிடைப்பதை உறுதி செய்யவும் மத்திய அரசு தொடர்ச்சியான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. ஒரு மெட்ரிக் டன்னுக்கு 1200 அமெரிக்க டாலர் மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்புடைய பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கான ஒப்பந்தங்களை பதிவு மற்றும் ஒதுக்கீடு சான்றிதழ் (ஆர்.சி.ஏ.சி) வழங்குவதற்காக பதிவுசெய்யலாம். இது 25 ஆகஸ்ட் 2023 முதல் நடைமுறையில் உள்ளது.
பாசுமதி அல்லாத வெள்ளை அரிசியின் தவறான வகைப்படுத்தல் மற்றும் சட்டவிரோத ஏற்றுமதி தொடர்பாக அரசுக்கு நம்பகமான கள அறிக்கைகள் கிடைத்ததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அவற்றின் ஏற்றுமதி 20 ஜூலை 2023 முதல் தடை செய்யப்பட்டுள்ளது. பாசுமதி அல்லாத வெள்ளை அரிசி பாசுமதி அரிசியின் எச்எஸ் குறியீட்டின் கீழ் ஏற்றுமதி செய்யப்படுவதாக தகவல் வெளியானது.
தற்போது, பாசுமதியின் புதிய வரத்துகள் வரத் தொடங்கியுள்ளன. பொதுவாக வரத்துகள் அதிகரிக்கத் தொடங்கும் போது விலைகளில் சரிவு ஏற்படுகிறது. அதிக எஃப்ஓபி (Free on Board FOB) மதிப்பு நாட்டிலிருந்து பாசுமதி அரிசி ஏற்றுமதியை மோசமாக பாதிக்கிறது என்று அரிசி ஏற்றுமதியாளர் சங்கங்களிலிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர், பாசுமதி அரிசி ஏற்றுமதியாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட அம்சங்களின் அடிப்படையில் பாசுமதி அரிசி ஏற்றுமதிக்காக, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தால் (அபெடா – APEDA) ஆர்சிஏசி எனப்படும் பதிவு மற்றும் ஒதுக்கீடு சான்றிதழை வழங்குவதற்கான ஒப்பந்தத்தின் எஃப்ஓபி மதிப்பை மறுஆய்வு செய்வது குறித்து அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. அரசு உரிய முடிவு எடுக்கும் வரை தற்போதைய நிலை தொடரும்.
முன் செய்தி:
அரசியின் விலை 2023 ஆம் ஆண்டில் பெரிய அளவில் அதிகரித்துள்ளது, இது இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகளவில் இருக்கும் காரணத்தால் இந்திய மக்களின் முக்கிய உணவாக இருக்கும் அரிசியின் விலையை கட்டுக்குள் வைக்க மத்திய அரசு முக்கியமான முடிவை எடுத்துள்ளது. இந்த முடிவின் மூலம் உலகளவில் இருக்கும் இந்திய மக்களும், அரிசியை முக்கிய உணவாக கொண்டு இருக்கும் சீனா மற்றும் தென்கிழக்கு நாடுகள் பாதிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு பாசுமதி அரிசி அல்லாத வெள்ளை அரிசியின் ஏற்றுமதியை உடனடியாக தடை செய்து உத்தரவிட்டது.
மத்திய அரசின் இந்த முக்கிய அறிவிப்புக்கு காரணம், பருவமழை தாமதமாகத் தொடங்கிய பின்னரும், வட இந்தியாவில் அதிகப்படியான மழை ஆகியவற்றின் காரணமாகவும் அரிசியின் விளைச்சல் பாதிக்கப்பட்டு அரிசிக்கான பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. உலகளாவிய அரிசி வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு மிகவும் அதிகம், இந்த ஒரு அறிவிப்பின் மூலம் உலக நாடுகள் எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதையும், இந்தியாவின் முக்கியதுவத்தையும் தெரிந்துக்கொள்ளுங்கள்.
ஏற்கனவே தக்காளி, இஞ்சி, பருப்பு வகைகள் விலை உயர்வால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் அரிசி விலை உயரும் நிலைக்கு தள்ளப்பட கூடாது என்பதற்காக மத்திய அரசு பாசுமதி அரிசி அல்லாத வெள்ளை அரிசியின் ஏற்றுமதியை உடனடியாக தடை செய்து உத்தரவிட்டது. உலகளாவிய அரிசி ஏற்றுமதியில் 40% க்கும் அதிகமான பங்கை இந்தியா கொண்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் சுமார் 55.4 மில்லியன் மெட்ரிக் டன்கள் அளவிலான அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.
இதில் இந்தியாவின் அரிசி ஏற்றுமதி பங்கு 2022 இல் 22.2 மில்லியன் டன்கள். இது இந்தியாவுக்கு அடுத்த இடங்களில் இருக்கும் நான்கு பெரிய தானிய ஏற்றுமதி நாடுகளான தாய்லாந்து, வியட்நாம், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றின் ஒட்டுமொத்த ஏற்றுமதியை விடவும் அதிகமாகும். இந்தியா தற்போது 140 நாடுகளுக்கு அரிசியை ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவில் இருந்து பாசுமதி அல்லாத அரிசியை வாங்கும் நாடுகளின் பட்டியலில் பெனின், பங்களாதேஷ், அங்கோலா, கேமரூன், ஜிபூட்டி, கினியா, ஐவரி கோஸ்ட், கென்யா மற்றும் நேபாளம் ஆகியவை உள்ளது.
இதேபோல் ஈரான், ஈராக் மற்றும் சவுதி அரேபியா ஆகியவை இந்தியாவில் இருந்து அதிகளவில் பிரீமியம் பாசுமதி அரிசியை வாங்குகின்றன. இந்தியா 2022 இல் சுமார் 17.86 மில்லியன் டன் பாஸ்மதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்துள்ளது.
இந்தியாவில் அரிசி விலையை கட்டுப்படுத்த செப்டம்பர் 2022 இல், உடைந்த அரிசி ஏற்றுமதியை இந்தியா தடை செய்தது மற்றும் பல்வேறு தர அரிசி ஏற்றுமதிக்கு 20% வரி விதித்தது. 2022 ஆம் ஆண்டில் 4.4 மில்லியன் டன் பாசுமதி அரிசி மற்றும் 7.4 மில்லியன் டன் புழுங்கல் அரிசி ஏற்றுமதி செய்துள்ளது. தற்போது மத்திய அரசு இவ்விரு அரிசி வகைகளுக்கும் எவ்விதமான கட்டுப்பாடும் விதிக்கவில்லை என்பதை மறந்துவிடக்கூடாது.
இந்திய விவசாயிகள் வருடத்திற்கு இரண்டு முறை நெல் பயிரிடுகிறார்கள், 2022 – 23 ஆண்டில் சுமார் 135.5 மில்லியன் டன்களாக இருந்த மொத்த அரிசி உற்பத்தியில் 80 சதவீத பங்கு ஜூன் மாதத்தில் தொடங்கும் கோடையில் பயிர் நடவு மூலம் கிடைக்கிறது. குளிர்காலத்தில் மத்திய மற்றும் தென் மாநிலங்களில் நெல் பயிரிடப்படுகிறது.
இந்தியாவில் மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், பஞ்சாப், ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் ஆகியவை அரிசி உற்பத்தியில் முன்னோடியாக இருக்கும் முக்கிய மாநிலங்கள். இந்தியாவில் நெல் சாகுபடி செய்யும் பரப்பளவை அதிகரிக்க திட்டமிட்டு மத்திய அரசு இந்தியா விவசாயிகளிடமிருந்து புதிய பருவத்துக்கான நெல் கொள்முதல் விலையை 7 சதவீதம் உயர்த்தி 100 கிலோவுக்கு 2,183 ரூபாயாக உயர்த்தியது.
ஆனால், 2023ல் பருவமழை பொய்த்துப் போனதால், நெல் சாகுபடி பரப்பு கணிசமாக குறையும் என கணிப்புகள் வெளியாகியுள்ளது. மத்திய அரசு பாசுமதி அரிசி அல்லாத வெள்ளை அரிசியின் ஏற்றுமதியை உடனடியாக தடை செய்து உத்தரவிட்ட நிலையில் வெளிநாடுகளில் இருக்கும் இந்திய மக்கள் அரிசிக்காக முட்டிமோதி கடைகளில் வாங்கினர். அந்த வகையில் அமெரிக்காவில் பிரபலான பட்டேல் பிரதர்ஸ் கடையில் இந்திய மக்கள் அரிசி விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு உருவாகுமோ என்ற அச்சத்தில் முட்டிமோதி இக்கடையில் அரிசி வாங்குவது பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது