’’அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே.. பாட்டாளி சொந்தங்களே.. பாட்டாளி சொந்தங்களே..!’’ என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:
ஒவ்வொரு முறையும் புத்தாண்டு பிறக்கும் போது பாட்டாளி சொந்தங்களுடன் இருக்க வேண்டும்; அவர்களுடன் பேசி மகிழ வேண்டும் என்பது தான் எனது விருப்பம்.
பாட்டாளி சொந்தங்களின் விருப்பமும் அதுவாகத் தானே இருக்க முடியும்.
அதனால் தான், நான் உள்ளிட்ட அனைத்து பாட்டாளிகளின் விருப்பங்களையும் நிறைவேற்றும் வகையில், ’’முடிந்த ஆண்டுக்கு விடை கொடுப்போம், வரும் ஆண்டை வரவேற்போம்” என்ற தலைப்பில் புத்தாண்டு கொண்டாட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தத் தொடங்கியது.
அதன்படி திசம்பர் 31-ஆம் நாள் இரவு தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் தைலாபுரத்தில் உள்ள அரசியல் பயிலரங்கத்தில் கூடுவார்கள். திறந்த வெளியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் நள்ளிரவு சரியாக 12.01 மணி ஆன பிறகு கேக் வெட்டப்படும். பாட்டாளி சொந்தங்கள் அனைவருக்கும் நான் வாழ்த்து தெரிவிப்பேன். பாட்டாளி சொந்தங்கள் அனைவரும் எனக்கு வாழ்த்து தெரிவிப்பார்கள். இந்த நிகழ்வு அதிகாலை வரை நீடிக்கும்.
பாட்டாளி மக்கள் கட்சியின் இந்த புத்தாண்டு கொண்டாட்டம் அரசியல் நிகழ்வாக இருக்காது; குடும்ப நிகழ்வு போன்றே இருக்கும். அனைவருக்கும் புல்லுணவும், புலால் உணவும் வழங்கப்படும். வாண வேடிக்கைகள் நிகழ்த்தப்படும். கொண்டாட்டங்கள் முடிந்து அதிகாலையில் அனைவரும் மகிழ்ச்சியுடன் கலைந்து செல்வார்கள். புத்தாண்டு கொண்டாட்டங்களால் ஏற்படும் புத்துணர்வு அடுத்த ஓராண்டுக்கு நீடிக்கும். என்னில் தொடங்கி கடைநிலை பாட்டாளி வரை அனைவரும் புத்துணர்வுடன் கட்சிப் பணிகளை மேற்கொள்வார்கள்.
பின்னர், அதில் சிறு மாற்றம் ஏற்பட்டது. பாட்டாளி சொந்தங்கள் அனைவரும் அவர்களின் சொந்தங்கள், நண்பர்கள் உள்ளிட்டோருடன் புத்தாண்டை கொண்டாடும் நோக்கத்துடன் திசம்பர் 31-ஆம் தேதி இரவு நிகழ்ச்சி நடத்த வேண்டாம்; அதற்கு முன்பாகவே நடத்தி விடலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. அதன்படி தான் திசம்பர் 30-ஆம் தேதி அல்லது 31-ஆம் தேதி வெளி அரங்குகளில் புத்தாண்டு பொதுக்குழு கூட்டலாம் என்று முடிவு எடுக்கப்பட்டு, செயல்படுத்த்தப்பட்டு வருகிறது.

