’ஒரே நாட்டில் ஒரே மோடியா?’ என்று திமுக அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.
கடைசி நேரத்தில் அனைத்துத் தவறுகளையும் வரிசையாகச் செய்யத் தொடங்கி இருக்கிறார் பிரதமர் நரேந்திரமோடி!
இந்தியாவையே ‘பாரத்’ ஆக்க நினைப்பதும் – ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு குழு போட்டிருப்பதும் – -நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை போட்டு ஏதேதோ செய்யத் திட்டமிட்டு இருப்பதும் – – பதவிக்காலம் முடியும் நேரத்தில் அள்ளித்தெளிக்கும் அவசரக் கோலங்கள் ஆகும். எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று தெரியாமல் அனைத்து மாத்திரைகளையும் அள்ளிப் போடுவது ஆகும்.
ஒரே நாடு -– ஒரே தேர்தல் என்பது மோடி என்ற தனிமனிதர் நீங்கலாக அனைவருக்குமே ஆபத்தானது ஆகும். பின்னர் அவருக்கே ஆபத்தும் அதுதான். மோடியை இன்னொருவர் வீழ்த்துவதற்கும் வசதியான வாசல் ஆகும் அது. இந்த ஆபத்து தெரியாமல் தான் அதனைக் கையில் எடுத்துள்ளார்.
ஒரே நாடு -– ஒரே தேர்தல் வந்தால் தி.மு.க. ஆட்சி கலைக்கப்படுவதாகவும் -– தேர்தல் நடப்பதாகவும் –- அனைத்து பாரத அண்ணா தி.மு.க. வெற்றி பெற்றுவிட்டதாகவும் -– தான் முதலமைச்சர் ஆகிவிட்டதாகவும் கனவு கண்டு சிரிக்கிறார் பழனிசாமி. அவரிடம் இருக்கும் 60 தொகுதியும் பறி போய் மொத்த சட்டமன்றத்தையும் திராவிட முன்னேற்றக் கழகம் கைப்பற்றிவிடும் என்பதே
பகல் கனவு பழனிசாமிக்கு தெரியவில்லை. 60 எம்.எல்.ஏ.க்களுடன் தானும் ஒரு தலைவராக வலம் வரும் பழனிசாமி, சொந்த தொகுதியில் தோற்று –- தரையில் ஊர்ந்து கொண்டிருப்பார் என்பதே யதார்த்தம்.
பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் –- பா.ஜ.க. கொல்லைப் புறமாக ஆளும் மாநிலங்கள் -– எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் –- என இருக்கும் அனைத்து பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியும் பறி போய்விடும். இது எதையும் அறியும் சுய மூளை கூட இல்லாத ஒரு கூட்டம் தான், ஒரே நாடு – -ஒரே தேர்தல் என்பதைப் பார்த்து பல்லிளித்துக் கொண்டிருக்கிறது.
‘இனி எனக்கு பா.ஜ.க. என்ற கட்சியும் வேண்டாம் -– ஆர்.எஸ். எஸ்ஸும் வேண்டாம் –- வி.எச்.பி.யும் வேண்டாம் -– எவரும் வேண்டாம்’ என்பதை சொல்லாமல் சொல்லப் போகிறார் நரேந்திரமோடி. அதற்காக அவர் தயார் ஆகிக் கொண்டிருக்கிறார். அவர்கள் விரலால் அவர்களையே குத்தப் போகிறார். அதற்கு தயார் ஆவதற்கான நாடகங்களும் –- ஒத்திகைகளும் தான் இவை.
பத்து ஆண்டுகளாக தான் ஒருவரே என்ற கோதாவில் செயல்பட்டு வந்தார் பிரதமர் மோடி. வெளிநாடு செல்வார். வெளியுறவுத் துறை அமைச்சரை அழைத்துச் செல்ல மாட்டார். ஒப்பந்தங்களில் கையெழுத்துப் போடுவார். நிதி அமைச்சர் இருக்க மாட்டார். நாடாளுமன்றத்துக்கு வரமாட்டார். வந்தாலும் பேச மாட்டார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட மாட்டார். சொந்தக் கட்சி ஆலோசனைக் கூட்டத்திலேயே அவர் பேச்சை மற்றவர்கள் கேட்பார்கள். மற்றவர் பேச்சை அவர் கேட்க மாட்டார். அத்வானியும் ஜோஷியும் அடக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் தன்னை நோக்கி பிரதமர் வரும் போது மூத்த அமைச்சரான நிதின் கட்கரி முகத்தை திருப்பிக் கொண்டார்.
உலகம் முழுக்கப் போனார் பிரதமர். ஆனால் அவரை உலக நாடுகள் மத்தியில் தலைகுனிய வைத்தது அதானி விவகாரமும் மணிப்பூர் விஷமத்தனங்களும்!
இந்த ஆட்சிக்கு மிகப்பெரிய தலைகுனிவு அதானி விவகாரத்தில் வந்தது. பிரதமரின் நண்பர் என்பதால் அனைவருமே அமைதியாக இருந்தார்கள். மணிப்பூர் பற்றி எரியும் போது பிரதமர் ஏன் போகவில்லை என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும் போது பா.ஜ.க. உறுப்பினர்களே தலைகவிழ்ந்து உட்கார்ந்து இருந்தார்கள். அவர்களால் என்ன செய்ய முடியும்? ‘பிரதமரே செல்லுங்கள்’ என்று சொல்ல முடியுமா?
‘நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவைக்கு வரவில்லை என்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன்’ என்று பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் பேசினார். அவரே வராமல் போனதை அக்கட்சி உறுப்பினர்களால் எப்படி கேட்க முடியும்?
20 ஆயிரம் கோடி போட்டு புதிய நாடாளுமன்றக் கட்டடம் எதற்காக கட்டப்பட்டது? அப்படி கட்டப்பட்ட கட்டடத்தில் எதற்காக கூட்டம் நடத்த முடியவில்லை? என்பதை எதிர்க்கட்சிகளைப் போலவே, பா.ஜ.க.
எம்.பி.கள் சிந்திக்க மாட்டார்களா?
தலைமைத் தேர்தல் ஆணையர் தேர்ந்தெடுக்கும் குழுவில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை நீக்குவதும் –- அமலாக்கத்துறை இயக்குநர் பதவியில் குறிப்பிட்ட நபர் தான் இருக்க வேண்டும் என்று அரசு சொல்வதை உச்சநீதிமன்றம் நிராகரிப்பதுமான நடத்தைகள் குழப்பமான நாட்டில் தான் நடக்கும். சீரான நிர்வாகம் நடக்கும் நாட்டில் நடைபெறவே நடைபெறாது.
தேர்தல் ஆணையத்தை அரசியல் கட்சி அலுவலகமாக மாற்றுவதும் – உச்சநீதிமன்றத்தின் மாண்பைக் குலைப்பதும் இந்தியாவின் அரசிய லமைப்பு சட்டத்துக்கு ஏற்படுத்தப்பட்ட கரும்புள்ளிகள் ஆகும்.
‘ஒற்றை மனிதரால் எல்லாம் மாறிவிடும் என்று நினைப்பது தவறு’ என்று திரும்பத் திரும்ப ஆர்.எஸ்.எஸ். சொல்வது யாரை நோக்கிய அம்பு?
இவை அனைத்தும் பிரதமர் நரேந்திரமோடியை சிக்கலுக்கு மேல் சிக்கலுக்கு உள்ளாக்கி குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன.
இதில் இருந்து மீள நினைத்தும் -– திசை திருப்பவும் -– புதிய வியூகம் என நினைத்து அவர் உருவாக்கும் சக்கரத்தில் அவரே சிக்கிக் கொள்ளப் போகிறார். இப்போதைக்கு இந்த படுகுழி பா.ஜ.க.வுக்குப் பிரகாசமாகத் தெரிகிறது.