குழந்தைகளை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தவர்கள், அந்தக் குழந்தைகளுக்கு செய்யும் துரோகம்.
கடந்த இரண்டு நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்து எழுத இயலாமல் போனதால், இப்பொழுது எழுதுகிறேன். தற்போது நடைபெற்று வரும் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடரில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மானிய கோரிக்கை அறிவிப்பில் குழந்தைகளுக்கான அறிவிப்பு என்ன இருக்கிறது என்பதை எழுத வேண்டும் என்று முழுமையாக வாசித்தேன். மிகவும் வருத்தமாக இருக்கிறது, குழந்தைகளைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த இந்த அரசு, குழந்தைகளின் உரிமைக்கும், சிறந்த நலனுக்கும், மற்றும் பாதுகாப்பிற்கும் எதிராக உள்ளது என்பதைத்தான் இது வெளிக்காட்டுகிறது.
தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கிற வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது, அதிலும் குறிப்பாக குழந்தைகள் மீது நடக்கும் பாலியல் வன்முறை தொடர்ந்து அதிகரித்து வருவது என்பதை தேசியக் குற்றவியல் ஆய்வு அறிக்கை ( NCRB) தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது.
ஆனால் போக்சோ 2 (POCSO 2.0 Portal) என்ற இணையத்தை உருவாக்கினால் போதும் என்று அறிக்கை விட்டிருக்கிறார்கள் என்ன கொடுமை, போக்சோ சட்டத்திற்கான சிறப்பு நீதி மன்றங்கள் தமிழ்நாட்டில் 20க்கும் கீழ் தான் உள்ளன. எல்லா மாவட்டத்திற்கும் உருவாக்கப்படும் என்று கடந்த மாதம் அறிக்கை வெளியிட்டு இருந்தனர். ஆனால், அதற்கு எந்த நிதியும் இந்த நிதியாண்டில் ஒதுக்கப்படவில்லை.
அதைப்போலவே போக்சோ சட்டத்தை நடைமுறை படுத்துவதில் பாதிக்கப்பட்டோர்கான ஆதரவு நபர்களின் (Supportive Persons) பணி என்பது மிக முக்கியம், ஆனால் அவர்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. குழந்தைகளைப் பாதுகாக்கும் நான்கு முக்கிய சட்டங்களைக் (POCSO, JJ Act, RTE Act & CMPA) கண்காணிக்கிற தலைமை அமைப்பான மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு (SCPCR-TN) நிதி ஒதுக்கப்படவில்லை.
குழந்தைகளை பாதுகாப்பதற்கான முதன்மை அமைப்பான மாநில மற்றும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகுகளில் (SCPS & DCPU) பணியாற்றும் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை பற்றி எதுவும் பேசப்படவில்லை. குழந்தைகளுக்கான உதவி எண் 1098 (Child Help Line) யில் பணியாற்றும் பணியாளர்களுக்கு பணிப் பாதுகாப்பு, ஊதிய உயர்வு மற்றும் போக்குவரத்து படிகள் பற்றி எந்த அறிவிப்பும் இல்லை.
மாவட்டம் தோறும் உள்ள குழந்தை நலக் குழுக்கள் மற்றும் இளம் சிறார் நீதி குழுமத்திற்கு (Child Welfare Committees and Jouvinele Justice Boards) நிரந்தரமான குழந்தை நேய கட்டமைப்புகள் முழுமையாக இல்லை இந்த கட்டமைப்பை பற்றி எந்த விதமான கருத்தும் பகிரப்படவில்லை. மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்களில் (District Child Protection Officers) 16 மாவட்ட அலுவலர்களுக்கு மட்டுமே வாகனம் உள்ளது.
நான் எழுதியது குறைவு தான். இன்னும் நிறைய இருக்கிறது.
குழந்தைகள் என்போர் நாட்டின் நிகழ் காலமும் மற்றும் எதிர்காலமும் ஆவார். குழந்தைகளைப் புறக்கணிக்கும் எந்த நாடும் என்றும் வளராது.
வெறும் விசில் பயனில்லை.
குழந்தை உரிமைகளைப் பாதுகாக்கிற Whistle Blowers நிறையப் பேர் உருவாக வேண்டும். இது காலத்தின் தேவை.
விடுபட்ட கருத்துக்களை நண்பர்கள் பதிவிடவும். நன்றி.
மனித உரிமை & குழந்தைகள் நல ஆர்வலர்Devaneyan Arasu அவர்களின் facebook பதிவு.
