மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தோல் ஏற்றுமதிக் கழகம் மற்றும் அதன் ஊழியர்கள் அறக்கட்டளை இணைந்து 2026 செப்டம்பர் 20 அன்று சென்னை தீவுத்திடலில் “சோல்ஸ் ஃபார் சோல்ஸ்” என்ற மாரத்தான் ஒட்டப்பந்தயத்தை மூன்றாவது ஆண்டாக நடத்துகின்றன. இதுகுறித்து சென்னையில் 02 செப்டம்பர் 2026, நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய தோல் ஏற்றுமதிக் கழகத்தின் (தென் மண்டலத் தலைவர் அப்துல் வஹாப், இதன் முதன்மை நோக்கம் போதைப்பொருள் இல்லாத சமுதாயம் குறித்த விழிப்புணர்வை இளைஞர்களிடையே ஏற்படுத்துவதும் இந்திய காலணித் துறையின் வளர்ச்சியை ஊக்குவிப்பதும் ஆகும் என்றார்.
தோல் ஏற்றுமதிக் கழகம் என்பது இந்தியாவின் வளர்ந்து வரும் காலணி, தோல், தோல் பொருட்கள் துறையின் மிகப்பெரிய வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பாகும். தமிழ்நாடு மாநிலத் தொழில் மேம்பாட்டுக் கழகமான சிப்காட், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், பெருநகரச் சென்னை காவல்துறை, பல்வேறு கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் ஆதரவுடன் இந்த மாரத்தான் ஓட்டப் பந்தயத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுஎன்று அவர் தெரிவித்தார்.
தோல் ஏற்றுமதி கழகம், சென்னையில் செப்டம்பர் 2024 மற்றும் செப்டம்பர் 2025-ல் ‘சோல்ஸ் ஃபார் சோல்ஸ்’ (Soles for Souls) மாரத்தான் போட்டிகளை நடத்தியது. 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் 4500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 2025-ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வில் 8,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
போதைப்பொருள் பயன்பாடு, அதனால் சமூகத்தின் மீது ஏற்படும் தீய விளைவுகள் ஆகியவை குறித்துப் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மாரத்தான் போட்டியின் கடந்த இரண்டு பதிப்புகளும் வெற்றிகரமாக நடத்தப்பட்டன என்றார்.

முந்தைய இரண்டு மாரத்தான் போட்டிகளின் அபார வெற்றியைத் தொடர்ந்து, 3-வது பதிப்பான ‘போதைப்பொருள் இல்லாத சமூகத்திற்கான ஓட்டம்’ (Run for Drug-Free Society) நிகழ்ச்சியை, 2026-ம் ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை தீவுத்திடலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவித்தல் மற்றும் உடற்பயிற்சி செயல்பாடுகளை ஊக்கப்படுத்துதல்
தொடர் ஓட்டப்பந்தய நிகழ்ச்சி விவரங்கள்:
தேதி: ஞாயிறு, 20 செப்டம்பர் 2026
இடம்: தீவுத்திடல், சென்னை
பிரிவுகள்: 3 கி.மீ ஓட்டம், 5 கி.மீ ஓட்டம், 10 கி.மீ ஓட்டம்
பதிவு: https://solesforsouls.in/ என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என்றும் இந்த ஆண்டு சுமார் பத்தாயிரம் பேர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.
மராத்தான் போட்டியில் பங்கேற்பாளர்களுக்கு டி-ஷர்ட்கள், பை, காலை உணவு, போட்டியை நிறைவு செய்ததற்கான பதக்கம் ஆகியவை வழங்கப்படும் என்று தெரிவித்த அவர், போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்கும் உன்னத நோக்கத்திற்காக, தோல் ஏற்றுமதி கவுன்சில் முன்னெடுத்துள்ள இந்தச் சிறப்பான முயற்சியில் பெரிய அளவில் மக்கள் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தென்னிந்தியாவின், குறிப்பாகத் தமிழ்நாட்டின் காலணி, தோல் தொழில்துறையின் சார்பில், இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு இத்துறையின் முழுமையான ஆதரவு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும், இந்தியத் தோல் மற்றும் காலணித் துறை அதிக அளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ஒரு துறையாகும் என்று தெரிவித்த அவர், 44.2 லட்சம் பேருக்கு (இவர்களில் 40% பேர் பெண்கள்) வேலைவாய்ப்பை அளிப்பதன் மூலம், இத்துறை சமூகத்தின் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பிரிவினரை மேம்படுத்துகிறது என்றார்.
தமிழ்நாட்டின் தோல் மற்றும் காலணித் தொழில் ஒரு முக்கியமான உற்பத்தித் துறையாக உருவெடுத்துள்ளதுஎன்றும் இதன் மூலம் பெண்கள் உட்பட லட்சக்கணக்கான மக்களுக்குப் பெருமளவிலான வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன என்றார். இத்துறையின் தற்போதைய (2025-26) ஏற்றுமதி மதிப்பு ரூ.14,862 கோடியாக உள்ளது; இது இந்தியாவின் மொத்த ஏற்றுமதி மதிப்பான ரூ.41,901 கோடியில் சுமார் 35.5 சதவீதப் பங்களிப்பாகும் என்று அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் தோல் ஏற்றுமதிக் கழகத்தின் துணை இயக்குநர் கோகுலகிருஷ்ணன் உடனிருந்தார்.
