கேரளாவின் மூணாறில் மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை சார்பில் நடைபெற்ற இரண்டாவது சிந்தன் சிபிர் கூட்டத்தின் முடிவில் மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் பசுமைக் கப்பல் போக்குவரத்து மற்றும் துறைமுகங்களின் டிஜிட்டல் மயமாக்கலை மையமாகக் கொண்ட ஐந்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
பசுமைக் கப்பல் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு 30% நிதி உதவி வழங்குவது; பசுமை இழுவை மாற்றும் திட்டத்தின் கீழ் ஜவஹர்லால் நேரு துறைமுகம், வ.உ. சிதம்பரனார் துறைமுகம், பாரதீப் துறைமுகம் மற்றும் தீனதயாள் துறைமுகம், காண்ட்லா துறைமுகம் ஆகியவை தலா இரண்டு இழுவைக் கப்பல்களை வாங்கும்.
தீனதயாள் துறைமுகம், தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகம் ஆகியவை பசுமை ஹைட்ரஜன் மையமாக உருவாக்கப்படும்; ஆறு மற்றும் கடல் பயணங்களை எளிதாக்கவும் கண்காணிக்கவும் ஒற்றை சாளர தளத்தை உருவாக்குவது; ஜவஹர்லால் நேரு துறைமுகம் மற்றும் தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகங்களை அடுத்த ஆண்டுக்குள் ஸ்மார்ட் துறைமுகமாக மாற்றுவது ஆகிய 5 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் சோனோவால், பசுமையான கப்பல் போக்குவரத்தை மேம்படுத்தவும், துறைமுகத்தை டிஜிட்டல் மயமாக்குவதற்காகவும், இந்த ‘சிந்தன் சிபிர்’ நிகழ்ச்சியின் போது ஐந்து செயல் திட்டங்களை அறிவித்தது திருப்திகரமான தருணம் எனக் கூறினார். பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ், கடல்சார் துறையில் சர்வதேச தலைவராக மாற மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் கூறினார். இந்த அறிவிப்புகள் மேற்கூறிய நோக்கத்தை மேலும் வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், கடல்சார் துறையில் மேலும் நிலையான வளர்ச்சியைக் கொண்டுவர உதவும் எனவும் அவர் கூறினார்.
சிந்தன் சிபிர் நிகழ்வின் இரண்டாவது நாளில், முக்கிய துறைமுகங்களில் சரக்குகளை கையாளுதல் குறித்து விவாதிக்கப்பட்டது.