Madras Murasu

சோத்துப்பாறையில் வெடித்த ரீல்ஸ் சர்ச்சை! தவெக நிர்வாகிகள் மீது காவல்துறையில் புகார்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையில் நடைபெற்றுள்ள சம்பவம், தமிழக அரசின் நிர்வாகக் கட்டுப்பாடு குறித்த புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

சுமார் 2,865 ஏக்கர் விவசாய நிலங்களுக்குப் பாசன வசதியும், பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்குக் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் சோத்துப்பாறை அணையின் நீர் மேலாண்மை விவகாரத்தில் தவெக நிர்வாகிகள் தலையிட்டதாக எழுந்துள்ள புகார் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

என்ன நடந்தது?

கடந்த நவம்பர் 17ஆம் தேதி, தவெக தேனி வடகிழக்கு மாவட்ட இணைச் செயலாளர் ஷேக் அலி தலைமையில் சில கட்சி நிர்வாகிகள் சோத்துப்பாறை அணையின் புதிய ஆயக்கட்டு வாய்க்கால் பகுதியில் உள்ள மதகைத் திறந்துள்ளனர்.

பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன் வழிகாட்டுதலின்படி, சுமார் 1,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்காகத் தண்ணீர் திறக்கப்பட்டதாகக் கூறி, மலர் தூவி நிகழ்ச்சியை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களிலும் வெளியிட்டுள்ளனர்.

ஆனால், இந்த நடவடிக்கைக்கு நீர்வளத்துறை அதிகாரிகளின் அனுமதி பெறப்படவில்லை என்றும், முறைப்படி பாசனத்துக்குத் தண்ணீர் திறப்பதற்கான அரசாணை வெளியிடப்படவில்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை என்ன?

இந்தச் சம்பவம் தொடர்பாக நீர்வளத்துறை உதவிப் பொறியாளர் மனோஜ்குமார் தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அரசுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்ப்பாசனக் கட்டமைப்பை உரிய அனுமதியின்றி இயக்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், அணையின் பிரதான மதகுகள் திறக்கப்படவில்லை என்றும், அணையிலிருந்து கீழ்ப்பகுதியில் உள்ள வாய்க்கால் மதகுதான் திறக்கப்பட்டது என்றும் அதிகாரிகள் விளக்கியுள்ளனர். இந்த விவகாரத்தில் வெளியான வீடியோக்கள் குறித்தும் பல்வேறு விளக்கங்கள் வெளியாகியுள்ளன.

அரசு நிர்வாகமா? கட்சி நிர்வாகமா?

இந்தச் சம்பவம் எழுப்பும் மிக முக்கியமான கேள்வி இதுதான்.

அணைகள், நீர்ப்பாசனக் கால்வாய்கள், குடிநீர் ஆதாரங்கள் போன்றவை அரசின் பொதுச் சொத்துகள். அவற்றை எப்போது திறக்க வேண்டும், எவ்வளவு தண்ணீர் திறக்க வேண்டும், எந்தப் பகுதிகளுக்குத் தண்ணீர் வழங்க வேண்டும் என்பதை முடிவு செய்வது சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளின் பொறுப்பு.

விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றுவது அவசியம்தான். ஆனால் அதற்காக அரசு நிர்வாக நடைமுறைகளைப் புறந்தள்ள முடியுமா?

ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக அரசுத் துறைகளின் அனுமதியின்றி பொதுக் கட்டமைப்புகளில் நடவடிக்கை எடுக்க முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது.

அரசு நிர்வாகம் என்பது கட்சி நிர்வாகத்தின் நீட்சி அல்ல. மக்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் அரசின் அதிகாரிகளுக்கும் இடையே பொறுப்புகளும் அதிகார வரம்புகளும் தெளிவாக இருக்க வேண்டும்.

முதலமைச்சர் விஜய் கவனிப்பாரா?

இந்தச் சம்பவத்தில் யார் தவறு செய்தார்கள் என்பதை காவல்துறையின் விசாரணையும், சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரப்பூர்வ விளக்கங்களும் முடிவு செய்யட்டும்.

ஆனால், ஆளுங்கட்சியினர் என்ற அடையாளம் அரசு நிர்வாக நடைமுறைகளை மீறுவதற்கான அனுமதியாக மாறிவிடக் கூடாது.

விவசாயிகளின் நலன் முக்கியம். அதே நேரத்தில் குடிநீர் பாதுகாப்பு, நீர் மேலாண்மை, பொதுமக்களின் பாதுகாப்பு ஆகியவையும் சம அளவில் முக்கியமானவை.

மக்களுக்கான ஆட்சியில் அரசு அதிகாரிகளின் முடிவுகள்தான் முதன்மையாக இருக்க வேண்டுமே தவிர, கட்சி நிர்வாகிகளின் சமூக வலைதள விளம்பரங்கள் அல்ல!

முதலமைச்சர் விஜய் இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்? அரசு நிர்வாகத்தின் அதிகாரத்தை நிலைநாட்டுவாரா?

Scroll to Top