Madras Murasu

HPV-DNA பரிசோதனை : மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த கோரிக்கை

தமிழகத்தில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை (Cervical Cancer) முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கும் நோக்கில், ஐந்து மாவட்டங்களில் HPV-DNA பரிசோதனைத் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

 

தருமபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் முதல்கட்டமாக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதற்காக 1,24,215 பெண்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

பெண்களுக்கு பரிசோதனை

தமிழக தேசிய சுகாதார இயக்கத்தின் (NHM) முன்மொழிவைத் தொடர்ந்து, கர்ப்பப்பை வாய் புற்றுநோயைக் கண்டறியும் HPV-DNA பரிசோதனைத் திட்டத்தைச் செயல்படுத்த மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) பரிந்துரைப்படி, HPV-DNA பரிசோதனை அதிக துல்லியத்துடன் புற்றுநோய்க்கு முந்தைய பாதிப்புகளைக் கண்டறிய உதவும்.

தமிழ்நாடு புற்றுநோய் பதிவேட்டின் 2023ஆம் ஆண்டு அறிக்கையின்படி, தமிழகத்தில் 87,156 புதிய புற்றுநோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதில் ஆண்கள் 37,931 பேர், பெண்கள் 49,225 பேர்.

2026ஆம் ஆண்டில் புதிதாகப் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவோரின் எண்ணிக்கை சுமார் 94,098 ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பெண்களிடையே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் முக்கியமான உயிரிழப்புக் காரணங்களில் ஒன்றாகத் தொடர்கிறது.

ஒரு பரிசோதனைக்கு ரூ.700 செலவு

இந்தத் திட்டத்திற்காக மத்திய அரசு, 2026–2027ஆம் ஆண்டுக்கான தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் ரூ.8.69 கோடி நிதிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

ஒரு பரிசோதனைக்கு சுமார் ரூ.700 செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்தமாக ரூ.8,69,50,500 செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் 2012ஆம் ஆண்டு முதல் அரசு மருத்துவமனைகள் மூலம் மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மற்றும் வாய்ப் புற்றுநோய்க்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுவரை பெரும்பாலும் பார்வை ஆய்வு முறையில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், HPV-DNA பரிசோதனை அறிமுகப்படுத்தப்படுவது நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

டாக்டர் சிவா சுப்பிரமணியம்  – உயிரித் தொழில்நுட்பத் துறையில் முனைவர் பட்டம் (PhD)

”தமிழகத்தில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்காக ஐந்து மாவட்டங்களில் HPV-DNA பரிசோதனைத் திட்டம் செயல்படுத்தப்படுவது வரவேற்கத்தக்கது.

இதுபோன்ற பரிசோதனைத் திட்டங்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மட்டுமின்றி, வாய்ப் புற்றுநோயையும் தடுப்பதற்கும் உதவக்கூடிய வகையில் விரிவுபடுத்தப்பட வேண்டும்.

இதுதொடர்பாக ஆறு ஆண்டுகளுக்கு முன்பே மாநிலம் முழுவதும் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான திட்ட முன்மொழிவை அரசிடம் சமர்ப்பித்தோம். ஆனால், போதிய நிதி ஆதாரங்கள் இல்லை என்று கூறி அப்போது அதிகாரிகள் அதைச் செயல்படுத்தவில்லை.

தற்போது படிப்படியாக இத்திட்டம் நடைமுறைக்கு வந்து, ஐந்து மாவட்டங்கள் பயன்பெறுவது மகிழ்ச்சியளிக்கிறது.

HPV வைரஸ் கர்ப்பப்பை வாய் புற்றுநோயுடன் மட்டுமின்றி, சில வகையான வாய்ப் புற்றுநோய்களுடனும் தொடர்புடையது. குறிப்பாக வெற்றிலைப் பாக்கு, புகையிலை மற்றும் சிகரெட் உள்ளிட்ட பழக்கங்களுக்கு அடிமையானவர்களுக்கு புற்றுநோய் அபாயம் அதிகமாக உள்ளது.

ஆண்கள், பெண்கள் என இருபாலரும் இத்தகைய பழக்கங்களைக் கொண்டுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் மத்தியில் இந்தப் பரிசோதனையை அறிமுகப்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

HPV வைரஸின் வெவ்வேறு வகைகளை (Subtypes) கண்டறியும் டிஎன்ஏ பரிசோதனைகளை ஒருங்கிணைத்து, ஒரே பரிசோதனை மூலம் கர்ப்பப்பை வாய் மற்றும் வாய்ப் புற்றுநோய் அபாயத்தைக் கண்டறியும் வகையில் இரண்டு நிலைகளில் பரிசோதனை மேற்கொள்ளலாம் என்று ஏற்கெனவே பரிந்துரைத்திருந்தோம்.

இதன் மூலம் நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உரிய மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்து புற்றுநோய் உருவாகும் அபாயத்தைக் குறைக்க முடியும்.

தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களுடன் இத்திட்டத்தை நிறுத்திவிடாமல், மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டும்.

HPV தொடர்பான பரிசோதனைகளைப் பயன்படுத்தி கர்ப்பப்பை வாய் மற்றும் வாய்ப் புற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.

வரும்முன் காப்போம்..!

Scroll to Top