உருவகக் கதைகள் நம்மை உண்மையான உலகங்களுக்கு அழைத்துச் செல்லும் அற்புதச் சாவிகள். ‘Kathal’ எனும் இந்தித்திரைப்படம் காணாமல் போன எம்.எல்.ஏ.வின் Uncle Hong ரகப் பலாக்களைத் தேடும் தலித் பெண் ஆய்வாளர் பற்றிய கதை. இது உண்மையில் பலாக்காயை திருடியவரை கண்டுபிடிக்கும் பயணமில்லை.
முதல் காட்சியே அதகளம். இந்திய சினிமா காவல்துறையின் Chase காட்சிகள் எப்படியிருக்கும் என வழமையாக விதித்து வைத்திருக்கும் விதிகளை எல்லாம் விளையாட்டாக அத்தொடர் காட்சி குலைக்கிறது. இது பிற படங்களைப் பகடி செய்யும் முயற்சியல்ல. யதார்த்தத்திற்கு நெருக்கமான காட்சியனுபவத்தைத் தரும் முயற்சியாகவே திரையில் கதை வளர்கிறது.
அதிகாரம், அரசியல், சாதி, பாலினம், ஊடகம் எனப்பலவற்றின் மீதான நகைச்சுவையால் ஆன வெளிச்சம் இப்படம். இதில் காதைக் கிழிக்கும் சண்டைக்காட்சிகள், அதிரடிக்கும் பஞ்ச் வசனங்கள், ரத்தத்தை உறைய வைக்கும் வன்முறை அறவே இல்லை. தொலைந்து போன பெண்களை விட அரசியல் தலைவரின் பலாப்பழம் ஏன் முதன்மையானதாகத் தேடப்பட வேண்டிய ஒன்றாகிறது? பதவி உயர்வே வேண்டாமென்று ஒரே ஊரில் சமையல் வேலைகளுக்கான ஆளாக ஏன் பெண்களைக் குடும்ப அமைப்பு நடத்துகிறது?
உண்மையை உரக்கச் சொல்லும் சின்னஞ்சிறிய ஊடகவியலாளர் ஒருவர் இப்படத்தில் கைது செய்யப்படுகிறார். முழுக்க, முழுக்கச் சோகமயமனதாக மாற்ற சகல வாய்ப்புகளும் உள்ள காட்சி அது. அங்கே பிளந்து கொண்டு வெளிப்படும் பகடியும், இசையும், பத்திரிகையாளராகத் தோன்றுபவரின் நடிப்பும் சமகாலத்தின் மீதான நுண்மையான கேலியாக அமைகிறது. ‘நான் ரொம்பப் பிரபலமாகிட்டேன். இவங்க அடிச்ச அடியில என் பிருஷ்டம் மட்டும் இரண்டு இன்ச் வீங்கிருச்சு’ என அவர் இறுதியாகத் தோன்றும் காட்சியில் பேசுகையில் மிதமான கற்பனையுலகினில் உண்மையின் கூர்மையான வெளிப்பாடு சாத்தியப்பட்டிருக்கிறது.
தீவிரமான சண்டைக்காட்சியில் அடித்து நாயகிக்குக் கை வலிக்கிறது. கதவை உடைக்கப் போகும் நாயகன் அதற்கான திராணியின்றி நாயகியின் கைகளில் விழுகிறான். காணாமல் போன பலாப்பழத்திற்குப் பரிசு என்றவுடன் அதைப்போன்ற போலிப் பலாக்கள் பல வரிசையில் வந்து நிற்கின்றன. எம்.எல்.ஏ.வின் புகழ்பாடும் பேனர் பழைய பேப்பர் கடைக்குப் போவதற்காக நின்றபடியே பலாப்பழ திருட்டிற்கு உடந்தையாகிறது. இடையே மிக மென்மையான காதல் கதை ஒன்று மனதோடு உறவாடுகிறது.
இக்கதை தலித் காவல் ஆய்வாளர் உயர்சாதி காதலன் பதவி உயர்வுக்காக உழைக்கும் திரைப்படம் என்றும் அணுகப்படக்கூடும். ஆயினும், இப்படம் சாதிச்சுவரின் ஓரிரு செங்கல்களை நகைச்சுவை சுத்தியல் கொண்டு உடைக்கிறது. சாதிப்பெருமிதங்களை முன்னிறுத்தும் உலகினை கூர்வேல் கொண்டு எதிர்க்கவில்லை. அதற்கு மாறாகக் கிச்சு கிச்சு மூட்டுகிற பாவனையில் தலையில் ஒரு குட்டுக் கொட்டுகிறது. உலகை மாற்றும் வேகம் இக்கதையின் நாயகர்களிடம் இல்லை. படம் முடிகையில் தேடியது கிடைத்ததா என்பதைவிட ஏன் இதைப்போய்த் தேடினார்கள் என்கிற வினாவே கடத்தப்படுகிறது. மறக்காமல் பாருங்கள். காணாமல் போகும் எளியவர்களின் மீதான அக்கறைமிக்க நுண்மையான ஆக்கம் இத்திரைப்படம். இத்திரைப்படத்தை தமிழிலேயே நெட்பிளிக்ஸில் காணலாம்.