இந்திய செவிலியர்களுக்கு இங்கிலாந்து மாதிரியான ஐரோப்பிய நாடுகள் – தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் மிகப்பெரிய அளவில் வரவேற்பு உள்ளது. ஐக்கிய அரபு நாடுகளில் அதிக வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. உங்கள், வெளிநாட்டுப்பணி கனவு வெல்லட்டும். அதற்கு தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் துணை நிற்கும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வெளிநாட்டு வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து, சவுதி அரேபிய அமைச்சகத்தின் செவிலியர் பணிக்கு தேர்ச்சி பெற்ற செவிலியர்களுக்கு சவுதி அரேபியா செல்வதற்காக பயணக் கோப்புகளை வழங்கினார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 16.10.2023 அன்று சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மற்றும் செவிலியர், தாதியர் குழுமம் இணைந்து நடத்திய வெளிநாட்டு வேலைவாய்ப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியினைத் தொடங்கி வைத்தார். (https://www.omcmanpower.tn.gov.in/ தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்)
இந்நிகழ்ச்சியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சவுதி அரேபிய அமைச்சகத்தின் செவிலியர் பணிக்கான நேர்காணலில் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலமாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற செவிலியர்களுக்கு, சவுதி அரேபியா செல்வதற்கு பயணக் கோப்புகள் வழங்கப்பட்டது. மேலும், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் பணிக்காலியிடங்கள் குறித்தும், வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியம் குறித்தும், பாதுகாப்பு மற்றும் சட்டப்பூர்வ இடப்பெயர்வு குறித்தும், செவிலியர்களுக்கான உலகளாவிய வேலைவாய்ப்பு குறித்தும், IELTS/OET பயிற்சியளிக்கும் பயிற்சி நிறுவனங்கள் மூலம் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு செவிலியர் பணிக்கு செல்வதற்கான சிறப்பு மொழித் தேர்வினை பற்றிய விவரங்கள் குறித்தும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுமார் 960க்கும் மேற்பட்ட இறுதியாண்டு பயிலும் செவிலிய மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
தமிழ்நாடு அரசின் Overseas Manpower Corporation (OMC) மற்றும் Tamil Nadu Nurses and Midwives Council சார்பில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பற்றிய இந்த ஒருநாள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நிகழ்ச்சி மிக மிக அவசியமான நிகழ்ச்சி. குறிப்பாக Nursing படிக்கின்ற மாணவிகளுக்கும், செவிலியர்களுக்கும் பயனுள்ள வகையில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ள சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அண்ணன் செஞ்சி மஸ்தான் -க்கு என் வாழ்த்துகள்.
எவ்வளவோ பணிகள் இருந்தாலும், மருத்துவத்துறை பணி என்பது சமூகத்துக்கு செய்கின்ற சேவையாகும். அதிலும், குறிப்பாக செவிலியர் பணி என்பது இன்னும் மேன்மையானது. நான் பல இடங்களுக்கு அரசு நிகழ்ச்சிகளுக்காக செல்கிற போது, அரசு மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அதிகாரிகளுடன் இரவு 11 மணிக்கு சென்றாலும், 12 மணிக்கு சென்றாலும், அங்கு செவிலியர்களான நீங்கள் தான் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பீர்கள்.
ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் என்றால், மருத்துவர்கள் என்ன நோய் என்று கண்டுபிடிப்பார்கள், மருந்து – மாத்திரை கொடுப்பார்கள். ஆனால், செவிலியர்கள் தான் ஒரு நோயாளி discharge ஆகிற வரை உடன் இருந்து அந்த நோயாளியை குணப்படுத்துவதற்கு தேவையான அத்தனை மருத்துவப்பணிகளையும் செய்வார்கள்.
கொரோனா நேரத்தில் செவிலியர்கள் ஆற்றிய பங்களிப்பு என்பது போற்றுதலுக்குரியது. குடும்பத்தை விட்டு – PPE Kits -ஐ அணிந்து கொண்டு நாள் முழுவதும் மக்களை காக்க உயிரை பணயம் வைத்து சேவையாற்றியவர்கள் நீங்கள். அதனால், தான் கழக அரசு செவிலியர்களுக்கு கொரோனா நேரத்தில் ரூ.20 ஆயிரத்தை சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கியது.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மேற்கொண்ட கல்வி சீர்திருத்தங்களால், இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் ஏராளமான செவிலியர் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அந்தக் கல்லூரி களில்எல்லாம் ஆயிரக்கணக்கான மாணவிகள், ஏன் மாணவர்களும் செவிலியர் படிப்பை படித்து வருகின்றார்கள். மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள ஒரு குடும்பத்தில் பிறக்கிற பெண், அந்தக் குடும்பத்தை காக்கின்ற வகையில் உடனே பணிக்கு செல்ல வேண்டுமென்றால், 10ஆம் வகுப்பு முடித்துவிட்டு, டிப்ளமோ செவிலியர் படிப்பு முடித்தால், உடனே பணிக்கு சேர முடியும். குடும்பத்தை காப்பாற்ற முடியும். ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், படித்தால் நிச்சயம் வேலை உறுதி என்கிற படிப்புகளில் Nursing-ம் ஒன்று. அப்படிப்பட்ட செவிலியர் படிப்பை படிக்கின்ற நீங்கள், அதிக ஊதியத்துடன் பணிபுரிய வேண்டும்.
வெளிநாட்டில் உள்ள உயர்சிறப்பு மருத்துவமனைகளில் பணிக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் கழக அரசு செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகத் தான் இன்றைக்கு, இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. Overseas Manpower Corporation (OMC) மற்றும் Tamil Nadu Nursing and Midwives Council நடத்துகிற இந்த ஒரு நாள் விழிப்புணர்வு முகாமில், செவிலியர்கள் எப்படி அயல்நாட்டு பணிகளுக்கு செல்வது என்பது குறித்து பல்வேறு ஆக்கப்பூர்வமான அறிவுரைகள் வழங்கப்படவுள்ளன.
குறிப்பாக, விசா பெறுவது, வெளிநாட்டில் உள்ள பாதுகாப்பு, சட்டப்பூர்வ இடப்பெயர்வு, உலக அளவில் செவிலியர்களுக்கு உள்ள வேலைவாய்ப்புகள், வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியத்தின் செயல்பாடுகள் குறித்தெல்லாம் இங்கே உங்களிடம் அந்தந்த துறைகளை சேர்ந்த வல்லுநர்கள் உரையாற்றவுள்ளார்கள்.
செவிலியர் படிப்பை முடித்ததும் நீங்கள் பல்வேறு வெளிநாடுகளுக்கு செல்லலாம். குறிப்பாக ஐக்கிய அரபு நாடுகளில் அதிக வேலைவாய்ப்புகள் இருக்கின்றன.
இந்தியாவில் பயின்ற செவிலியர்களுக்கு இங்கிலாந்து மாதிரியான ஐரோப்பிய நாடுகள் – தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் மிகப்பெரிய அளவில் வரவேற்பு உள்ளது. இப்படி ஒவ்வொரு நாட்டுக்கும் விண்ணப்பிக்கும் போது, திறன் ரீதியாக வெவ்வேறு மாதிரியான தேவைகளை அந்தந்த நாடுகள் எதிர்பார்க்கின்றன. உதாரணத்துக்கு இங்கிலாந்து செல்கிறீர்கள் என்றால் Occupational English Test எனப்படும் OET தேர்வை நீங்கள் எழுத வேண்டும். இது போன்ற பயனுள்ள விஷயங்கள் எல்லாம் இந்த நிகழ்ச்சியில் உங்களுக்கு எடுத்துக் கூறப்படவுள்ளன.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் – அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்துடன் இணைந்து OET Coaching Classes-ஐ நடத்தி வருகிறது. அதையெல்லாம் நீங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அடிக்கடி, OMC-ன் இணையதளத்துக்கு சென்று அங்கு பதியப்படும் வேலைவாய்ப்பு தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள். செவிலியர் பணி என்றாலே பெரும்பாலும் – பெண்கள் தான் இருப்பார்கள். எனவே, நீங்கள் வெளிநாடு சென்று நல்ல மருத்துவமனையில் பணியாற்றுகிற போது, உங்கள் குடும்ப பொருளாதாரமும் உயரும். பெண்கள் பொருளாதார சுதந்திரத்தை அடைய முடியும்.
இந்த அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை பொறுத்தவரை, 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வெளிநாட்டு வேலைகளை இதுவரை பெற்றுக் கொடுத்துள்ளது. இடைத்தரகர்கள் – ஏஜண்டுகளிடம் மாட்டிக்கொண்டு பணத்தை இழக்காதீர்கள். அப்படியே ஏஜண்டுகள் மூலம் வெளிநாட்டுக்கு வேலை செல்கிறீர்கள் என்றாலும், உங்களை பணிக்கு சேர்த்தவுடன் நகர்ந்து விடுவார்கள். ஆனால், தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அப்படியல்ல. ஏஜண்டுகளிடம் நீங்கள் பல இலட்சம் பணம் கொடுத்து தான் வெளிநாடு செல்ல முடியும். ஆனால், இது அரசு நிறுவனம் என்பதால், 2 இலட்சம் ரூபாய் ஊதியத்தில் பணிக்கு சேர வேண்டும் என்றால் கூட, அதிகபட்சம் 35 ஆயிரம் வரை செலுத்தினால் மட்டும் போதும்.
மேலும், வெளிநாட்டு வேலைக்கு செல்ல விண்ணப்பிப்பதில் ஆரம்பித்து, அங்கு தங்குவது, பணிக்கு சேருவது – திரும்பி வருவது என அத்தனை நடைமுறையிலும் தமிழ்நாடு அரசு உங்களுக்கு துணையாக நிற்கும். இங்கு வந்துள்ள நீங்கள் ஒவ்வொருவரும், நிச்சயம் வெளிநாட்டு வேலைக்கு செல்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இதற்கான உதவிகளை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் நிச்சயம் உங்களுக்கு செய்யும். இன்றைய நிகழ்ச்சியும் அதற்கு உங்களுக்கு பயனுள்ள வகையில் அமையும்.
இந்த நேரத்தில் நான் ஒரேயொரு வேண்டுகோளை வைக்க விரும்புகிறேன். நீங்கள் வெளிநாடு செல்லுங்கள். கைநிறைய ஊதியம் பெற்றுக் கொள்ளுங்கள். ஆனால், ஒரு கட்டத்துக்கு பிறகு, நீங்கள் தமிழ்நாட்டுக்கு வந்து இங்கு மருத்துவ சேவையாற்ற வேண்டும். Overseas Manpower Corporation-க்கும் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். OMC-ஐ நாடி வருகிறவர்களுக்கு நம்பிக்கையாக பதில் அளியுங்கள். விளக்கங்களை கூறுங்கள். வழக்கமான அரசு அலுவலகம் போல தான் இதுவும் என்று யாரும் எண்ணிவிடக்கூடாத அளவுக்கு நீங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த விழிப்புணர்வு பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ள உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். அரசுடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை சிறப்புடன் நடத்துகிற தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் கவுன்சிலுக்கு என் பாராட்டுகள். இங்கு வந்துள்ள செவிலியர்கள் – செவிலியர் மாணவிகள், உங்கள் அனைவரின் வெளிநாட்டுப்பணி கனவு வெல்லட்டும்.
நீங்கள் உங்கள் வாழ்வில் வெற்றிபெற முதலமைச்சர், உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். நம் திராவிட மாடல் அரசு உங்களுக்கு பக்கபலமாக இருக்கும்.
இவ்வாறு அமைச்சர் உதயநிதி பேசினார்.
தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமம்- முனைவர் ஆனி கிரேஸ்
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ் குமார், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குநர் முனைவர் சி.நா.மகேஷ்வரன், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை ஆணையாளர் ஜெசிந்தா லாசரஸ், குடிப்பெயர்வோர் பாதுகாப்பு அலுவலர் மு.ராஜ்குமார், தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமத்தின் பதிவாளர் முனைவர் ஆனி கிரேஸ் கலைமதி, சென்னை மருத்துவக் கல்லூரி அரசு செவிலியர் கல்லூரி முதல்வர் முனைவர் இரா.சங்கர் சண்முகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.