செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பங்கள், மேம்பட்ட பொருட்கள், உயிரித் தொழில்நுட்பம், ஒளியியல், புவிசார் தொழில்நுட்பங்கள், உயர் செயல்திறன் கணினி போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களால் உலகம் விரைவான மாற்றத்திற்கு உள்ளாகி வருகிறது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். இந்தத் தொழில்நுட்பங்கள் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை உருவாக்கும் அதே வேளையில், புத்தாக்கமானது அனைவருக்கும் கிடைக்கக்கூடியதாகவும், மலிவானதாகவும், நம்பகமானதாகவும், நீடித்ததாகவும் இருப்பதை உறுதிசெய்ய, வலுவான சர்வதேச ஒத்துழைப்பு அவசியமாகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

பரந்த மக்கள்தொகை, அறிவியல் திறமை, வளர்ந்து வரும் ஆராய்ச்சித் திறன்கள் ஆகியவற்றைக் கொண்ட பிரிக்ஸ் அமைப்பு, பொறுப்பான, எதிர்கால நோக்குடைய புத்தாக்கச் சூழலமைப்பை வளர்ப்பதற்கு உகந்த நிலையில் உள்ளது என்று அவர் கூறினார். உரையாடலை நடைமுறை ஒத்துழைப்பாகவும், உறுதியான விளைவுகளாகவும் மாற்றுவதில் பணிக்குழுக்களின் பங்களிப்பை டாக்டர் ஜிதேந்திர சிங் பாராட்டினார். பிரிக்ஸ் அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்க ஒத்துழைப்பானது, ஒரு வலிமையான தளமாக உருவெடுத்துள்ளது என்று அமைச்சர் கூறினார்.
அறிவியல், புத்தாக்கம் ஆகியவற்றில் ஒரு வெளிப்படையான, அனைவரையும் உள்ளடக்கிய, மனிதர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையை முன்னெடுப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தி, சமூகத்தின் திறனை வலுப்படுத்தி, நிலையான பொருளாதார மாற்றத்திற்கு ஆதரவளிக்கும் ஒரு அணுகுமுறையைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ள தேசிய குவாண்டம் இயக்கம், தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் இயக்கம், பயோஇ3 கொள்கை, தேசிய புவிசார் கொள்கை உள்ளிட்ட இந்தியாவின் முன்முயற்சிகளை அவர் குறிப்பிட்டார்.
சென்னையில் நடைபெற்ற இந்தக் கூட்டம், பிரிக்ஸ் நாடுகளிடையே அறவியல் துறையில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தி, புதுமையான, நிலையான உலகை உருவாக்குவதற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கும் என டாக்டர் ஜிதேந்திர சிங் நம்பிக்கை தெரிவித்தார்.
