Madras Murasu

GATE தேர்வு: அரசு வேலை பெறுவது எப்படி?

பொறியியல் பட்டதாரிகள் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பொறியாளர் பணிகளைப் பெறுவதற்கும், ஐஐடி, என்ஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலைப் படிப்பில் சேர்வதற்கும் உதவும் முக்கியமான தேசியத் தேர்வு GATE (Graduate Aptitude Test in Engineering) ஆகும். 2027ஆம் ஆண்டுக்கான தேர்வை சென்னை ஐஐடி ஒருங்கிணைத்து நடத்துகிறது. GATE தேர்வில் தகுதி பெறுவோர் உயர் கல்வி பயிலவும் வாய்ப்புகள் கிடைக்கிறது.

யார் விண்ணப்பிக்கலாம்?
  • பி.இ., பி.டெக்., பி.பார்ம். படிப்புகளில் மூன்றாம் ஆண்டு அல்லது அதற்கு மேல் படிப்பவர்கள்.

  • பொறியியல், தொழில்நுட்பம், கட்டடக்கலை, அறிவியல், வணிகவியல், கலை மற்றும் மனிதநேயத் துறைகளில் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பை முடித்தவர்கள்.

  • பி.எஸ்சி., எம்.எஸ்சி., எம்.ஏ., எம்.சி.ஏ. உள்ளிட்ட தகுதியுடைய படிப்புகளைப் பயிலும் மாணவர்களும் பட்டதாரிகளும்.

  • பொதுவாக, GATE தேர்வுக்கு வயது உச்சவரம்பு இல்லை; தேர்வெழுதும் முயற்சிகளுக்கும் வரம்பு இல்லை.
எந்தப் பொதுத்துறை நிறுவனங்களில் வேலை கிடைக்கலாம்?
1. BHEL — மின் உற்பத்தி மற்றும் கனரகப் பொறியியல்.

2. NTPC — மின் உற்பத்தி மற்றும் தொழில்நுட்பப் பணிகள்.

3. POWERGRID — மின்சாரப் பரிமாற்றம் மற்றும் பொறியாளர் பணிகள்.

4. ONGC — எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் தொழில்நுட்பப் பணிகள்.

5. IOCL — சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் பொறியியல் பணிகள்.

மேலும், GAIL, SAIL, Coal India, NPCIL, HAL, NLC India, Engineers India Limited உள்ளிட்ட நிறுவனங்களும் GATE மதிப்பெண்ணைப் பயன்படுத்தி குறிப்பிட்ட ஆண்டுகளில் ஆட்சேர்ப்பு நடத்தப்படும். இந்த வேலைவாய்ப்பு குறித்து மத்திய அரசு வெளியிடும் Employment News வாரா வாரம் பார்த்து வர வேண்டும்.

முக்கியம்: எல்லா நிறுவனங்களும் ஒவ்வோர் ஆண்டும் GATE மதிப்பெண் அடிப்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பதில்லை. ஒவ்வொரு நிறுவனத்தின் அறிவிப்பிலும் கேட்கப்பட்டுள்ள பொறியியல் பிரிவு, GATE தாள், மதிப்பெண் மற்றும் பிற தகுதிகளைச் சரிபார்க்க வேண்டும்.

GATE 2027 தேர்வு அட்டவணை

தேர்வு நடைபெறும் தேதிகள்

6, 7, 13, 14, 20, 21 பிப்ரவரி 2027

GATE 2027 விண்ணப்பப் பதிவு முடிவடைந்துவிட்டது. புதிய விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் காலம் 16 அக்டோபர் 2026 அன்று நிறைவடைந்தது.

முடிவுகள் வெளியாகும் நாள் 19 மார்ச் 2027 என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை
  • கணினி வழித் தேர்வு (CBT).

  • மொத்தம் 30 தேர்வுத் தாள்கள் உள்ளன.

  • பொதுவாகத் தேர்வில் 100 மதிப்பெண்கள்; பொது திறனறிவு, பொறியியல் கணிதம் மற்றும் தேர்ந்தெடுத்த பாடத்தின் தொழில்நுட்பக் கேள்விகள் இடம்பெறும். பாடப்பிரிவைப் பொறுத்து மதிப்பெண் பகிர்வு மாறலாம்.

  • அனுமதிக்கப்பட்ட சேர்க்கைகளில் ஒரு தாள் அல்லது இரண்டு தாள்களைத் தேர்வு செய்யலாம்.

  • GATE மதிப்பெண் முடிவு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் செல்லுபடியாகும்.
அதிகாரப்பூர்வ இணையதளங்கள்
  • GATE 2027:  www.gate2027.iitm.ac.in

  • POWERGRID வேலைவாய்ப்புகள்: www.powergrid.in

முடிவுரை: பொதுத்துறை நிறுவனங்களில் பொறியாளர் பணியை இலக்காகக் கொண்ட மாணவர்கள் தங்களது பொறியியல் பிரிவுக்குரிய GATE பாடத்திட்டத்தைப் படித்து, முந்தைய ஆண்டு வினாத்தாள்களைப் பயிற்சி செய்து, நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு அறிவிப்புகளைக் கண்காணிக்க வேண்டும்.

Scroll to Top