அமெரிக்காவில் இன்று நடைபெறும் 2026 இடைக்காலத் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பலர் முக்கியப் பதவிகளுக்குப் போட்டியிடுகின்றனர். அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை, செனட், மாநில ஆளுநர் உள்ளிட்ட பதவிகளுக்கான இந்தத் தேர்தல், அந்நாட்டின் அரசியல் அதிகாரச் சமநிலையைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
முக்கிய வேட்பாளர்கள்
ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ரோ கண்ணா, பிரமிளா ஜெயபால், அமி பேரா, சுஹாஸ் சுப்ரமணியம் ஆகியோர் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்குப் போட்டியிடுகின்றனர்.
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த விவேக் ராமசாமி, ஓஹியோ மாநில ஆளுநர் பதவிக்குப் போட்டியிடுகிறார். கட்சியின் முதன்மைத் தேர்தலில் வெற்றி பெற்ற அவருக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார்.
நியூயார்க் மாநில தலைமைச் சட்ட அதிகாரி பதவிக்கு குடியரசுக் கட்சியின் சாரிதா கொமடிரெட்டி போட்டியிடுகிறார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் பதவிக்கு நித்யா ராமன் போட்டியிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெக்சாஸ் மாநிலத்தில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பூஜா சேத்தி, சந்தீப் ஸ்ரீவஸ்தவா ஆகியோர் மாநிலப் பிரதிநிதிகள் சபைத் தொகுதிகளில் களமிறங்கியுள்ளனர். புளோரிடாவின் 22-வது நாடாளுமன்றத் தொகுதியில் பியா தண்டியா போட்டியிடுகிறார். அரிசோனாவின் முதல் நாடாளுமன்றத் தொகுதியில் மருத்துவரும் முன்னாள் மாநிலச் சட்டமன்ற உறுப்பினருமான அமிஷ் ஷா களத்தில் உள்ளார்.
அதிகாரச் சமநிலையைத் தீர்மானிக்கும் தேர்தல்
கலிபோர்னியா, வாஷிங்டன், வர்ஜீனியா, ஓஹியோ, நியூயார்க், டெக்சாஸ், புளோரிடா, அரிசோனா உள்ளிட்ட பல மாநிலங்களில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் 435 இடங்களுக்கும், செனட்டின் 35 இடங்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. ஓஹியோ, புளோரிடா மாநிலங்களில் செனட் பதவிகளுக்கான சிறப்புத் தேர்தல்களும் இடம்பெறுகின்றன.
இந்தத் தேர்தல் முடிவுகள், அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியின் பலத்தைத் தீர்மானிக்கும் என்பதால் உலக நாடுகளின் கவனமும் இந்தத் தேர்தல் மீது திரும்பியுள்ளது.
