அரசு தொடக்கப்பள்ளிகளில் போட்டித்தேர்வு மூலம் நியமனம் செய்யப்பட இருந்த இடைநிலை ஆசிரியர்களின் எண்ணிக்கை 2768 ஆக அதிகரித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், வருகிற 21 ஆம் தேதி தேர்வெழுத இருக்கும் SGT ஆசிரியர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
2023-2024 ஆம் ஆண்டிற்காக 1768 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலமாக நிரப்புவதற்கு அறிக்கை 09.02.2024 அன்று வெளியிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து மேற்படி பதவிக்கான 1000 கூடுதல் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான சேர்க்கை அறிவிக்கை 16.07.2024 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையத்தளத்தில் (website: http:// www.trb.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.
எழுத்து தேர்வு
’’ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கையின் படி, 23.06.2024 அன்று நடைபெற இருந்த இடைநிலை ஆசிரியர் (SGT) தேர்வு நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்படுகிறது. மேற்கண்ட தேர்வானது வருகின்ற 21.07.2024 அன்று (ஞாயிற்றுக்கிழமை ) அன்று நடைபெறும் என்று விண்ணப்பத்தாரர்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்படுகிறது’’ என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.gov.in என்ற இணையத்தளத்திற்கு சென்று தேர்வெழுதும் ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.