54 உயிர்களைப் பலி கொண்டது மணிப்பூர் கலவரம், பதற்றம் நீடிப்பு; மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தியுள்ளது. அதன் விவரம்..
மணிப்பூரில் மிகப் பெரிய அளவில் நடைபெற்றுவரும் வன்முறை மற்றும் இனக் கலவரங்கள் மிகவும் ஆபத்தான அளவிற்குச் சென்றுள்ளன. வீடுகள் நாசமாக்கப்படுதல், சொத்துக்கள், தேவாலயங்கள், கோவில்கள் 5 மாவட்டங்களில் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டிருக்கின்றன.
மோதல்களில் எண்ணற்றவர்கள் இறந்திருக்கிறார்கள். மத்திய துணை ராணுவம் மற்றும் ராணுவம் வந்த பின்னர், நிலைமையில் சற்றே கட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது என்ற போதிலும், இன்னமும் சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
பலர் வெளிவர முடியாமல் தங்கள் வீடுகளுக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து இடம் பெயர்ந்திருக்கிறார்கள்.
இதுபோன்ற நிலைமை உருவாகும் என்பதை முன் உணர்ந்து துரிதமாக செயல்படுவதில் பாஜக மாநில அரசாங்கம் தோல்வி அடைந்துவிட்டது.
சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதற்குத் தலையிட முயற்சிப்பதைத் தாமதித்தது.
வனங்களைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் மலைப் பகுதிகளிலிருந்து பெரிய அளவில் மக்களை வெளியேற்ற அரசாங்கம் எடுத்த நடவடிக்கையும், ‘வெளியாட்களை’ வெளியேற்றுகிறோம் என்ற பெயரில் மக்களை வெளியேற்றப் போகிறோம் என்று கூறிவந்ததும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.
இது மலை மாவட்டங்களில் விரிவான அளவில் கிளர்ச்சிப் போராட்டங்களுக்கு இட்டுச் சென்றன. இவ்வாறு கூர்மையான முறையில் வன்முறை மோதல்கள் ஏற்பட இட்டுச்சென்ற பிரச்சனைகளை சமாளிப்பதற்கு முன்பு அங்கே அமைதியையும், இயல்பு நிலைமையையும் ஏற்படுத்துவது உடனடிக் கடமையாகும்.
மாநில அரசாங்கம், ஒன்றிய அரசாங்கத்தின் உதவியுடன், இடம் பெயர்ந்துள்ள மக்கள் அனைவருக்கும் மறுவாழ்வு அளித்திட அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திட வேண்டும். நிலைமையைச் சமாளித்திட ஓர் ஒன்றுபட்ட முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.