தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணியினால் ஏற்பட்ட பயன்பாட்டு அறிக்கை 2023 – 2024 வருமாறு:
காவிரி ஆறு காடு, மலை, பள்ளதாக்கு பகுதிகளில் நீண்டதூரம் கடந்து வருவதால், பாறை மற்றும் மண் திட்டுக்களில் ஏற்படும் அரிமானத்தின் காரணமாக காவிரி ஆற்று நீரில் மணல் மற்றும் சிறு துகள்கள் அதிகமாக அடித்துவரப்படுகின்றது. காவிரி ஆற்று நீரில் அதிகமான மணல் மற்றும் சேற்று படிவங்கள் கலந்து வரும்பொழுது வாய்க்கால்களின் தரைமட்ட சரிவு மிகவும் குறைவாக உள்ளதால் நீரின் வேகம் குறைந்து மண் திட்டுக்கள் ஏற்படுகிறது. நீர் வழித்தடங்களில் அதிகமான நீர்த்தாவரங்களும், செடி கொடிகளும் வளர்வதால் நீரில் கலந்து வரும் சேற்று படிவங்கள் தடைபட்டு மண்மேடுகள் உருவாகின்றன.
மண்மேடுகளை தூர்வாரும் பட்சத்தில் ஒவ்வொரு வாய்கால்களின் கடை மடை பகுதி வரை நீர் தங்கு தடையின்றி சென்றடையும். மழை காலங்களில் விவசாய பயிர்கள் நீரில் மூழ்காமல் விரைவில் வடிகால்களில் வடிவதினால் பயிர் சேதங்களை குறைக்க முடியும், இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் காவிரி வடிநிலப்பகுதியில் உள்ள ஆறுகள், வாய்கால்கள் மற்றும் கால்வாய்களில் கடைமடைவரை தண்ணீர் கொண்டு செல்ல அவற்றின் அவசியம் கருதி தூர்வாரப்பட வேண்டிய நிலை ஏற்படுகிறது.
மூன்றாண்டுகளுக்கு மேல் தூர்வாரப்படாத கால்வாய்கள், வாய்கால்கள், வடிகால்கள் மற்றும் ஏரிகள் ஆகியவற்றை நீர்வளத்துறையின் அலுவலர்கள் மூலமாக கண்டறிந்தும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவிலிருந்தும், மாண்புமிகு அமைச்சர்களிடமிருந்தும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திலிருந்தும், மக்கள் பிரதிநிதிகளான பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களிடம் இருந்தும் பெறப்படுகின்ற மனுக்கள் அனைத்தையும் நீர்வளத்துறை அலுவலர்கள் நேரடியாக தளஆய்வு செய்து பரிசீலனை செய்யப்படுவதன் அடிப்படையில் பணிகள் தேர்வு செய்யப்படுகிறது.
2023-24-ஆம் ஆண்டு காவிரி டெல்டா பாசன பகுதிகளை தூர்வார 17.04.2023 அன்று 691 பணிகள் 4773.13 கி.மீ நீளத்திற்கு ரூ.90.00 கோடி மதிப்பீட்டிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன்படி திருச்சி மண்டலத்திற்குட்பட்ட ஆறுகள், கால்வாய்கள், வாய்கால்கள், வழங்கு வாய்கால்கள் மற்றும் வடிகால்களை தூர்வார சேலம் மாவட்டத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 31 பணிகளும், நாமக்கல் மாவட்டத்தில் 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 5 பணிகளும், திருச்சி மாவட்டத்தில் 15.88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 100 பணிகளும், கரூர் மாவட்டத்தில் 6.48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 38 பணிகளும், அரியலூர் மாவட்டத்தில் 3.13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 13 பணிகளும், பெரம்பலூர் மாவட்டத்தில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 39 பணிகளும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 20.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 189 பணிகளும், திருவாரூர் மாவட்டத்தில் 12.83 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 111 பணிகளும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 3.98 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 28 பணிகளும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 8.06 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 51 பணிகளும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 2.69 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 31 பணிகளும் மற்றும் சென்னை மண்டலத்திற்குட்பட்ட கடலூர் மாவட்டத்தில் 55 பணிகள் 768.30 கி.மீ நீளத்திற்கு ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் எடுத்துகொள்ளப்பட்டன. இதனால் காவிரி கடைமடை பகுதிகள் அனைத்து இடங்களுக்கும் தண்ணீர் தடை இல்லாமல் சென்றுக்கொண்டுள்ளது.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் 27.04.2023 அன்று தூர்வாரும் பணிகளை துவக்கி வைத்தார்கள். தூர்வாரும் பணிகள் நடைபெறும் இடங்களில் பணியின் பெயர், பணியின் மதிப்பு, ஒப்பந்தக்காரர் பெயர், உதவிப்பொறியாளர் / உதவிசெயற்பொறியாளர் / ஒருங்கிணைப்பு அலுவலர் பெயர். பணி துவங்கிய நாள் மற்றும் பணி முடிக்க உத்தேசிக்கப்பட்ட நாள் ஆகிய விவரங்கள் அடங்கிய விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
தூர்வாரும் பணிகளை கண்காணிக்க மாவட்டத்திற்கு ஒரு இந்திய குடிமையியல் பணியை சார்ந்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அவர்களது மேற்பார்வையில் பணிகள் நடைபெற்றன. ஆறுகள்/கால்வாய்கள்/ வாய்கால்கள்/ வடிகால்கள்/ ஏரிகள் பாசன பரப்பிலுள்ள விவசாயிகள், பஞ்சாயத்து அலுவலர், நீர்வளத்துறை பிரிவு அலுவலர் உள்ளடக்கிய உழவர்குழு, உதவி வேளாண் அலுவலர்கள் தலைமையின் கீழ் அமைக்கப்பட்டு தூர்வாரும் பணிகள் கண்காணிக்கப்பட்டன. தூர்வாரும் பணிகளில் ஒரு நாளில் அதிகபட்சமாக 836 இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டு பணிகள் நடைபெற்றன. தூர்வாரும் பணிகளின் தினசரி முன்னேற்றத்தைப் பதிவேற்ற களப்பொறியாளர்களுக்கான மொபைல் செயலி உருவாக்கப்பட்டு பணிகள் கண்காணிக்கப்பட்டன.
மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெற்ற தூர்வாரும் பணிகளை 09/06/2023 அன்று பார்வையிட்டார். தூர்வாரும் பணிகளை தினந்தோறும் ஆய்வு மேற்கொண்டு தினசரி முன்னேற்ற அறிக்கைகளை அன்றைய தினமே கூடுதல் தலைமை செயலாளர் நீர்வளத்துறை அவர்களுக்கு மின்னஞ்சல் வழியாக அனுப்பிவைக்கப்பட்டது.
உரிய காலத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டதாலும் தூர்வாரும் பணிகள் குறித்த காலத்தில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டதாலும் தண்ணீர் கடைமடை வரை விரைந்து சென்றடைவதாலும் விவசாயிகள் விவசாய பணிகளை துரிதமாக மேற்கொள்ள இயலும். பருவமழை காலத்தில் வடிகால்களில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டதால் வெள்ள நீர் விரைவாக வடிந்து பயிர்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படாமல் பாதுகாக்கப்படும்.
இதனால், காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுப்படிக்கான முன்னேற்பாடுகளும் முன்கூட்டியே துவக்கப்படுவதால் வடகிழக்கு பருவமழை காலத்தில் சம்பா பயிர்கள் வெள்ள நீரில் மூழ்காமல் பாதுகாக்கப்படும். மேலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதால், கோடை பயிர் வகைகளையும் அதிக அளவில் சாகுபடி செய்வதற்கான வாய்ப்பும் ஏற்படும். இன்றைய தேதியில் ஒரு இலட்சத்து 56 ஆயிரத்து 352 ஏக்கர் அளவில் குறுவை சாகுபடியில் நெல் பயிரிடப்பட்டு வருகிறது.