Madras Murasu

சிஎஸ்ஐஆர் 85 வது நிறுவன தினம் அறிவியல் ஆய்வகங்களை இலவசமாக பார்வையிட அழைப்பு

மத்திய அரசின் கீழ் செயல்படும் ஒரு முன்னணி அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனமான அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றம் (CSIR), தனது 85-வது நிறுவன தினத்தை 26 செப்டம்பர் 2026 அன்று கொண்டாடுகிறது. இதையொட்டி சென்னை தரமணியில் உள்ள சிஎஸ்ஐஆர் வளாகத்தில் அமைந்துள்ள கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் 28 செப்டம்பர் 2026 அன்று பார்வையாளர் தினத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.

 

அன்றைய தினம் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆய்வகங்களைப் பார்வையிடவும், அங்குள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப செயல்பாடுகளை நேரில் கண்டு அறிந்துகொள்ளவும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும். பார்வையாளர்கள் வளாகத்தில் உள்ள ஆராய்ச்சி வசதிகள், தற்போதைய பயன்பாடு சார்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் தொழில்நுட்ப திட்டங்கள் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பைப் பெறுவர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநரும், சிஎஸ்ஐஆர் சென்னை வளாகத்தின் ஒருங்கிணைப்பு இயக்குநருமான டாக்டர் என். ஆனந்தவள்ளி, வளாகத்தில் உள்ள சிஎஸ்ஐஆர் ஆய்வகங்களால் மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செயல்பாடுகளை எடுத்துரைத்தார். பொதுமக்கள், உத்திசார்ந்த தேவைகள், தொழில்துறை மற்றும் சமூகத் தேவைகளை நிவர்த்தி செய்யும் முக்கிய ஆராய்ச்சி வசதிகள் மற்றும் தற்போதைய திட்டங்கள் குறித்து அவர் விளக்கினார்.

 

28 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சென்னையில் உள்ள சிஎஸ்ஐஆர் ஆய்வகங்களை பார்வையிடலாம் என்றும் டாக்டர் ஆனந்தவல்லி தெரிவித்துள்ளார்.

Scroll to Top