Madras Murasu

NCERT புதிய புத்தகம்..! ஆசிரியர்களுக்குப் பயிற்சி முகாம்

புதிய தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020-ன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட திருத்தப்பட்ட பாடப்புத்தகங்களை மாணவர்களுக்குச் சிறப்பாகக் கற்பிக்க ஆசிரியர்களின் திறனை மேம்படுத்தும் நோக்கில், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT) 100-க்கும் மேற்பட்ட முதன்மைப் பயிற்சியாளர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளது.

 

புதிய பாடப்புத்தகங்களில் இடம்பெற்றுள்ள பாடங்களை மாணவர்களுக்கு எளிமையாகவும் தெளிவாகவும் விளக்கும் வகையில் ஆசிரியர்களின் கல்விசார் திறன்களை மேம்படுத்துவதே இப்பயிற்சியின் முக்கிய நோக்கமாகும்.

NCERT பாடப்புத்தகங்கள் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை தேசிய கல்விக் கொள்கை 2020 மற்றும் தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்புக்கு (NCF) ஏற்ப மாற்றியமைக்கப்பட்டுள்ளன. 10-ஆம் வகுப்புக்கான புதிய பாடப்புத்தகங்கள் டிசம்பர் மாதத்திற்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐந்து நாள் சிறப்புப் பயிற்சி

டெல்லியில் உள்ள மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுடன் (SCERT) இணைந்து, நவம்பர் 2 முதல் 6-ஆம் தேதி வரை ஐந்து நாள் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

‘ரீஇமேஜின்டு நிஷ்டா’ (Reimagined NISHTHA) என்ற திட்டத்தின் கீழ் அடிப்படை, தொடக்கநிலை மற்றும் நடுநிலைக் கல்வி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் வகையில் இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.

பயிற்சியில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்:

  • தேசிய கல்விக் கொள்கை 2020 (NEP).

  • தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பு (NCF).

  • பள்ளிக் கலாசாரம் மற்றும் தலைமைத்துவம்.

  • டிஜிட்டல் கல்வி.

  • விளையாட்டு வழிக் கற்றல்.

  • மாயப் பெட்டி (Magic Box) வழிக் கற்றல்.

  • உள்ளடக்கிய கல்வி.

  • மாணவர் நலன்.

  • வகுப்பு நிலை மற்றும் பாடம் சார்ந்த கற்பித்தல் முறைகள்.

  • மாணவர் மதிப்பீட்டு நடைமுறைகள்.

  • முழுமையான முன்னேற்ற அறிக்கை அட்டை (Holistic Progress Card).

NCERT தலைவர் கருத்து

NCERT தலைவர் தினேஷ் பிரசாத் சக்லானி கூறுகையில், “NEP 2020 பரிந்துரைகளின்படி NCERT உருவாக்கியுள்ள புதிய பாடப்புத்தகங்களைச் சிறப்பாகச் செயல்படுத்த, திறமையும் முறையான பயிற்சியும் பெற்ற ஆசிரியர்கள் அவசியம். ஆசிரியர்களின் திறன்களை மேம்படுத்துவதிலும், பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்துவதிலும் நிஷ்டா திட்டம் முக்கியப் பங்காற்றும். இந்தப் பயிற்சியின் நேர்மறையான தாக்கம் ஒவ்வொரு பள்ளியையும், ஒவ்வொரு மாணவரையும் சென்றடைய வேண்டும்” என்றார்.

Scroll to Top