Madras Murasu

சென்னை சர்வதேச விமான பயணியிடம் கஞ்சா

உளவுத் தகவல் அடிப்படையில், 13.09.2026 அன்று துபாயிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த இந்திய ஆண் பயணி ஒருவரை, சென்னை சுங்கத்துறையின் விமானப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர்.

சுங்கத்துறைக்கு எந்தத் தகவலும் தெரிவிக்காமல் பச்சை வழித்தடம் வழியாக வெளியேற அந்தப் பயணி முயன்றார். அவரது உடைமைகளை விரிவாகப் பரிசோதித்தபோது, ஹைட்ரோபோனிக் முறையில் பயிரிடப்பட்ட கஞ்சாவாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அப்பைகள், அவரது உடைமைகளுக்குள் மிகவும் தந்திரமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

கண்டெடுக்கப்பட்ட தடைசெய்யப்பட்ட பொருளின் எடை 2,794 கிராம் ஆகும். போதைப்பொருள் கண்டறியும் கருவியைப் பயன்படுத்திச் சோதித்ததில் அது கஞ்சா என்பது உறுதி செய்யப்பட்டது. போதைப்பொருள், மனநலப் பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்கள் சட்டம் 1985-ன் விதிகளின் கீழ் இப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சட்டவிரோதச் சந்தையில் இதன் மதிப்பு சுமார் ₹97 லட்சம் ஆகும். அப்பயணி கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இது குறித்த மேல்விசாரணை நடைபெற்று வருகிறது.

Scroll to Top