Madras Murasu

மாரியம்மன் கரக ஆட்டம் முடிந்த மூன்றாம் நாள்..! பப்புவா நியூ கினியில்

புறக்கணிக்கப்பட்ட மரபு உணவுகளில் முக்கியமானது சில கிழங்குகளும் கீரைகளும் கூட. கீரைகள் கொஞ்சம் மீண்டு வந்து கொண்டிருக்கின்றன. “மண்பரவு கிழங்குகளில் கருணையின்றி பிற புசியோம்” என சித்த மருத்துவம் சொல்லிவிட்டதால், “கருணையில்தான் கொஞ்சம் ஃபைபர் இருக்கு; மத்ததெல்லாம் வெறும் மாவு, வாயு, வெறும் ஸ்டார்ச்”, என ஒதுக்கிவிட்டோம். ஆனால் கிழங்கை ஓரங்கட்டியதற்கு, சித்த அறிவியலுக்கு முன்னால், சமூக மரஅரசியல் உண்டு என்பது பின்னாளில் படிக்க படிக்கத் தெரியவந்ததும், கிழங்குகளில் கொஞ்சம் ஆர்வம் கூடியது. சென்னையில் ஒருமுறை கிழங்குத் திருவிழா ஒன்றை நண்பர் ஆனந்து இயற்கை விவசாயச்ச்ந்தை ஒன்றில் நடத்தியபோது, பார்த்த நம் நாட்டின் வேறு வேறு கிழங்குவகைகள் அந்த மரபு விவசாயிகள் கூடவே சொன்ன விபர்ங்கள் ஆச்சரியத்தை தந்தன.
பப்புவா நியூ கினியில் மிக முக்கிய உணவு கிழங்கும் புலாலும்தான். Taro என்றழைக்கப்படும் இங்குள்ள உள்ளூர் கிழங்கு இங்கே ஆக பிரசத்தி. Colacasia species. “சேனை சேம்பு கருணை ” இவற்றில் ஊருக்கு ஊர் நாட்டுக்கு நாடு பெயர்கத குழப்பங்களத உண்டு. தாரோ பப்பாவு மட்டுமல்லாமல் ஃபிஜி சாலமன் தீவு, என பாலினேஷியன் தீவுகளிலும் மிக மிக முக்கியமான உணவு. புலாலோடு சேர்த்து அனலில் வேக வைத்து “மோமோ” செய்து சாப்பிடுகிறார்கள். எல்லா கிழங்கும் உருளை போல படுவேகமாக சர்க்கரையை இரத்ததில் தள்ளும் கெட்ட குணம் கொண்டதல்ல. டாரோ மாதிரியான சில கிழங்குகளில் இயல்பாகவே ரெஸிஸ்டண்ட் ஸ்டார்ச் நிறையவே உண்டு( சிறுதானிய ஸ்டார்ச் மாதிரி) .
கருநீல நிறமுள்ள சர்க்கரைவள்ளி கிழங்கு ஜப்பானில் ஒகினோவா தீவின் முக்கிய உணவு. ஜப்பானியரின் ஆரோக்கியமான முதுமைக்கு அதுவும் காரணம் என “Secret of Deep blue zones ” எனும் டாக்குமெண்டரியில் 103 வயது ஜப்பானியப்பாட்டி சிரித்துக்கொண்டே சொல்வது நினைவிற்கு வந்தது. அந்த purple sweet potato பப்புவாவில் இந்த கருனீல சர்க்கரைவள்ளி திரும்பிய இடமெல்லாம் விளைகிறது. நம் ஊரில் ஒரிசாவில், அருணாச்சலப்பிரதேசத்தில், அஸ்ஸாமில் பழங்குடியனரிடையே இதே போல பல்வேறு வள்ளிக்கிழங்குகள் உள்ளன.
சமீபத்தில் குற்றாலத்தில் குளித்துவிட்டு பாவூர்சத்திர மார்க்கெட்டில் மட்டுமே அதிகம் கிடைக்கும் சிறுகிழங்கு (Chinese potato) வாங்கிவந்து சென்னையில் வீட்டில்வந்து சமைத்தோம். துணிப்பையினுள் சிறுகிழங்குகளை போட்டு கையால் நசுக்கியே அம்மா அதன் தோல் நீக்கும் காட்சி நினைவிற்கு வந்தது. சுவை மட்டுமல்ல, சிறுகிழங்கு உடல் ஆரோக்கியத்திற்கும் சிறப்பு என ஆய்ந்துவருகிறது திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய கிழங்கு ஆராய்ச்சி நிறுவனம். ஆராய்ச்சியெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். சிறுகிழங்கில் அம்மா நினைவிற்கு வந்ததும் ஆரோக்கியம்தானே. அதேசமயம் இந்த தாரோ முதலான பல கிழங்குகளில் பொட்டாசியம் கூடுதல் உண்டு. சிறுநீரக நோயர்கள் மருத்துவர் ஆலோசனையின்றி எடுக்கக் கூடாது. சித்த மருத்துவர்கள் வாதம் நாடியில் உடலில் மேலோங்கி இருப்பதாக அறிந்து சொன்னாலும் கிழங்குகள் வேண்டாம்.
பப்புவாவில் கொஞ்சம் பதறவைக்கும் இன்னொரு விஷயம் இங்கே ஒவ்வொரு பப்புவா மரபினரும், சகட்டுமேனிக்கு பாக்கு மெல்கின்றனர். அதுவும் பச்சைப்பாக்கு. மரத்திலிருந்து பறித்த பாக்கு பழத்தினை நோண்டி, உள்ளே ஈரமாக இருக்கும் கொட்டையை உறித்து சவைக்கின்றனர். அதனால் அத்தனை பப்புவாக்கரர் வாயும் சிகப்பாகவே உள்ளது. இங்கு வணிகம் செய்யும் ஆஸ்திரேலியர் கோக்கு பாட்டிலையும் கணிசமாக இந்த மக்களுக்குப் பழக்கி விட்டிருப்பதால் “பாக்கும் கோக்குமாக” அனேகம்பேர் வாழ்கின்றனர். “இங்கே சுகர் எப்படி? கொழுப்பு எப்படி ?” என நான் அங்கு சென்ற மருத்துவமனையில் பேசிய போது, அங்குள்ள மருத்துவர் “கணிசமாக இருக்கே ” என்றார். “நிறைய புற்றும் இருக்கிறது” என்றார். புள்ளிவிவரங்களும் அப்படியே பயமுறுத்துகின்றனர்.
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள் தனக்கு குருவெனச் சொல்வது மசானா புகாகா எனும் ஜப்பானிய அறிஞரை . அந்த அறிஞர் சொன்ன Sow and Reap என்கிற இயற்கை வேளாண் தத்துவம் ஒரு நாடெல்லாம் இருக்கிறதென்றால் அது புப்புவாவில்தான். இன்னமும் யூரியா வகையறா உரங்களோ, பூச்சிக்கொல்லிகளோ நிலத்தில் துளி படாதது மட்டுமல்ல, அந்தந்த வீட்டின் புழக்கடையில் வளர்க்கப்படும் தாவரங்களை தானியங்களையும், கிழங்குகளையும், உண்பதும் விற்பதும்தான் இங்குள்ள வேளாண் பண்பாடாய் இருக்கிறது. புலாலில் பன்றிக்கறி இங்கு அதிகம். தென்னை, வாழை, எண்ணெய்ப்பனை, கோகோ தோட்டங்களைத்தவிர வேறு எந்த சந்தை விவசாயமே அங்கிருப்பதாகத் தெரியவில்லை.
திரும்பிய இடமெல்லாம் நம் ஊர் மேற்கு தொடர்ச்சியின் மலைவளம் போல மூலிகைகள் இங்கு குவிந்திருக்க, இந்த மரபுக்குடி பயன்படுத்தும் மூலிகை மரபு மருத்துவம் குறித்த ஆவணங்கள் ஆய்வுகள் பெரிதாக ஏதும் இல்லை. இங்குள்ள கனிமச்சுரங்கங்கள், தங்கச்சுரங்கங்கள், பாமாயில் சுற்றிதான் இங்கு உலக வணிகம் நடக்கிறது. இவ்விடம் தங்கமண் கனிசமான விலையில் வாங்கப்படும் என அந்த ஊர் சந்தையில் அட்டை வைத்திருக்கின்றனர். மரபுக்குடியினர் தங்கச்சுரங்கம் உள்ள ஆற்றோரம் அங்கிருந்த ஜொலிக்கும் மண்ணை எடுத்துவந்து இங்கு விற்பார்கள் போலும். மலையின் அடர்ந்த காட்டுக்குள் எல்லாம் தாதுவெட்டியெடுக்கும் சுரங்கங்கள், கனிம நிறுவனங்கள்தாம். இப்போதைக்கு அத்தனையும் சீனர், ஆஸ்திரேலியர், மலேசியரின் கையில்.
நான் பங்கேற்ற தமிழ்ச்சமூக விழாவிற்கு, அந்த நாட்டின் இந்திய ஹை கமிஷனரும் , அந்த நாட்டின் கவர்னராக இருக்கும் சிவகாசித் தமிழரான திரு சசீதரன் அவர்களும், முக்கிய விருந்தினராய்ப் பங்கேற்றனர். நம் உணவை சித்த மருத்துவத்தைப் பற்றிய பேச்சென்பதால், பப்புவா நாடு இந்தியாவுடன் தமிழகத்துடன் சித்த மருத்துவ ஆய்வுத்துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, கூட்டு ஆய்வுகளை எடுக்கலாமே எனத் தெரிவித்தேன். அவர்கள் ஆமோதித்தனர். மாலையில் அங்குள்ள ஒரு பூங்காவில் நடந்த போது, ஆங்காங்கே நெடிந்துயர்ந்து வளர்ந்துருந்த நாகலிங்க மரங்களும், அதனடியில் களையென ஏராளமாய் வளர்ந்து நின்ற பூனைமீசைச் செடிகளும் புலிப்பாணிச் சித்தருக்காகவும் கருவூராருக்காகவும் காத்திருப்பதுபோல் எனக்குப் பட்டது. முயற்சிக்கலாம்!
800 விதமான மொழி பேசும் பழங்குடி மக்கள் இப்போது பள்ளிக்கு வரத்துவங்கியுள்ளனர். வெகுசிலர் கல்லூரிக்கும் வருவதாக தெரிகிறது. பல்கலைக்கழகங்கள் உள்ளன. அவற்றை நடத்துவது, ஆசிரியர்களாக இருப்பதில் கணிசமானோர் நம் தமிழர்கள். நம் ஊர் போல் இவர்கள் படித்துயர இன்னும் பல வருடங்கள் ஆகும். ஆனால் அதன் முயற்சி துவங்கியுள்ளது. இங்கே என்னை மிகவும் கவர்ந்த விஷயம் இந்த மரபுக்குடியின் நடனம். அத்தனை அலாதியானது. முகமெல்லாம் வண்ண வண்ணப் பூச்சுகளைப் பூசிக்கொண்டு, வெட்டிவேர் போன்ற நார்களால் ஆன ஆடைகளை அணிந்து தலையெல்லாம் பஞ்சவர்ணகிளி முதலான பல வகை பறவைகளின் இறகுகளை கிரீடமாக அணிந்து கொண்டு அவர்கள் பாடி ஆடுவது அத்தனை அழகு. இந்தோனேஷியாவின் அங்குலுங் இசைக்கருவி போல, இவர்களும் பப்புவாவின் மூங்கில்களை வரிசையாக வைத்து ரப்பர்துண்டை அதன் வாயில் அடித்து ஒரு இசை வாசிக்கின்றனர். உடுக்கை போன்ற மேளம் தொல்குடியின் முக்கிய இசைக்கருவி. அதன் வாயை முதலையின் தோலால் மூடி ஒலி எழுப்புகின்றனர். (இங்கு ஏலி பூனை மாதிரி முதலை எல்லா ஆற்றோரத்திலும் உண்டு!)அந்த மரபு இசையும், உடன்சேர்ந்து ஒய்யாரமாய் ஒலிக்கும் அவர்கள் பாடலும், அவர்களின் உடையழகும், நம்மை மாசுபடாத அவதார்பட உலகிற்கு அழைத்துச்செல்கின்றன.
எல் நினோ காரணமாக, மூன்று மாதங்களாக மழையில்லாமல் வறண்டு இருந்தன பப்புவாவின் மலையும் மரங்களும். இங்குள்ள தமிழ்ச்சங்கம் மகிழ்ந்து நடத்திய நாட்டார் மரபு நடனமான மாரியம்மன் கரக ஆட்டம் முடிந்த மூன்றாம் நாள், பப்புவா முழுக்க மழை கொட்டு கொட்டென கொட்டியது. நம் ஊரில் மழை வேண்டி நடத்தும் அத்தொல்மரபு இசையில், பப்புவாவின் வானமும் குளிர்ந்ததில், அங்குள்ள தமிழ்ச்சமூகத்திற்கு பேரானந்தம். மறுநாள் அதிகாலை மழையின் ஈரமான மலைச்சாலை வழிப்பயணித்து, போர்ட் மார்ப்ஸியில் இருந்து விமானம் ஏறினேன். நானும் நியூகினி விமானமும் இறக்கை அசையாது உயரப்பறக்கையில், சன்னல் வழியே பசிபிக் பெருங்கடல் பச்சைப்பசேல் என இருந்தது. கூடவே என் மனமும்!
(பப்புவா நியூ கினி இவ்வுலகின் பசிபிக் கடலோர அழகிய தீவு. அங்குள்ள தமிழ்ச்சங்கத்தில், அங்குள்ள பி என் ஜி பல்கலைக்கழகத்தில் மட்டும் உரையாடவில்லை. இங்குள்ள சொர்க்கத்துப்பறவையாமட bird of paradise உடன் காதல் கொண்டேன். பூத்துக்கிடக்கும் ஆர்கிட் மலர்களோடு ஆடித்தீர்த்தேன். அடர்வனத்தில் தவம் கொண்டேன். நீள்கடல் காற்றில் புது சுவாசம் கொண்டேன். மொத்தத்தில் இளமையானேன். 800 மொழி கொண்ட இத்தீவில் என் மூளையில் எண்டார்ஃபின்களின் மொழி மட்டும் இப்போது)
Scroll to Top