தமிழுக்கும் தென்னக வரலாற்றிற்கும் ‘திராவிடம்’ எனும் சொல் எவ்விதத்தில் அடிப்படையாக அமைகிறது என்பது குறித்த எனது விரிவான பார்வை தமிழறிஞர் கால்டுவெல் நினைவு நாளான இன்று:
‘திராவிடம்’ – தமிழ்ச் சொல்லின் திரிபு.
வரலாற்று ரீதியாகவும் மொழியியல் ரீதியாகவும் பார்க்கும்போது ‘திராவிடம்’ என்பது தமிழுக்கு வேற்றுச் சொல் அல்ல; அது ‘தமிழ்’ என்ற சொல்லின் வடமொழித் திரிபே ஆகும். “தமிழ் -> தமீள -> தமிலா -> திராமிட -> திராவிட” என்று ‘தமிழ்’ என்ற சொல்லே வேற்று மொழியினரால் உச்சரிக்கப்பட்டுப் பின்னாளில் ‘திராவிடம்’ என மாறியது என்பதை மனோன்மணியம் சுந்தரனார் உள்ளிட்ட சான்றோர்களும் மொழியியல் வல்லுநர்களும் தெளிவுபடுத்தியுள்ளனர்.
புறத்தவர் அளித்த பொது அடையாளம்
ஒரு நிலப்பரப்பில் வாழும் மக்களைப் பிற நிலத்தவர் எவ்வாறு அழைத்தார்களோ, அதுவே காலப்போக்கில் பொது அடையாளமாக மாறுவது வரலாற்று இயல்பு.
ஜெர்மனி மக்கள் தங்கள்’டாய்ஷ்’ (Deutsch)என்றும் தாய்நாட்டை ‘டாய்ச்லாந்து’ (Deutschland) என்றும் அழைக்கின்றனர்; ஆனால் உலக மக்கள் அவர்களை ‘ஜெர்மன்’என்றே அழைக்கிறார்கள்.
* வடநாட்டினர் பேசிய பிராகிருதம், பாலி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளை நாம் ‘வடமொழி’ எனப் பொதுப்பெயரிட்டு அழைப்பது போல, தென்னகத்து மக்களை குறிப்பாகத் தமிழர்களை வடநாட்டினர் ‘திராவிடர்கள்’ என்று அழைத்து வந்தனர்.
கால்டுவெல் மொழியியல் பார்வை
1856-இல் அயர்லாந்து அறிஞர் இராபர்ட் கால்டுவெல் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ (A Comparative Grammar of the Dravidian Family of Languages) என்ற நூலை உருவாக்கியபோது, தென்னிந்தியா முழுவதும் பரவியிருந்த மொழிக் குடும்பத்திற்கு ஒரு பொதுப் பெயர் தேவைப்பட்டது. தமிழ் மொழியே இக்குடும்பத்தின் மூலமொழியாகவும் மூத்த மொழியாகவும் திகழ்ந்த போதிலும், அதன் பரந்த நிலப்பரப்பையும் அதிலிருந்து கிளைத்த பிற தென்னக மொழிகளையும் ஒருங்கிணைத்துக் குறிக்கவே அவர் ‘திராவிடம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தினார்.
தென்னக மொழிகளின் பிரிகை
ஒரு காலத்தில் தென்னிந்தியா முழுவதும் ஒரே தாய்மொழியான தமிழே செல்வாக்கு பெற்று விளங்கியது. பின்னாளில் அரசுகளின் புவியியல் ஆட்சி எல்லைகள், பார்ப்பினியத்தின் தாக்கம் மற்றும் பிற மொழிச் சேர்க்கைகளின் விளைவாகத் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகள் தனித்தனி வடிவங்களாகப் பரிணமித்தன. ஆட்சி மாற்றங்களுக்கு ஏற்ப தமிழின் முதன்மை நிலையும் சில பகுதிகளில் மாறுதலுக்கு உள்ளானது.
ஆகவே, ‘திராவிடம்’ எனும் சொல் தமிழின் தொன்மையையும், அதன் பரந்த வரலாற்றுப் புவியியல் எல்லையையும், தென்னக மொழிகளின் உறவையும் உலகிற்கு உணர்த்தப் பயன்பட்ட ஒரு விரிவான சொல்லாகும். அவ்வகையில் இச்சொல்லும் அதன் பின்னணியில் உள்ள வரலாறும் தமிழினத்தின் அடையாளப் பரப்பையே குறிக்கின்றன. இதன் அடிப்படையிலேயே, கால்டுவெல் திராவிடம் என்ற சொல்லைப் பயன்படுத்தினார்.
லூர்து பால் பெல்சன்
– வழக்கறிஞர்
