Home செய்திகள் ’’ஆஸ்பத்திரி மாற்றம் விவகாரம்; உயர் நீதிமன்ற விசாரணையில் நடந்தது என்ன..?’’

’’ஆஸ்பத்திரி மாற்றம் விவகாரம்; உயர் நீதிமன்ற விசாரணையில் நடந்தது என்ன..?’’

0
’’ஆஸ்பத்திரி மாற்றம் விவகாரம்; உயர் நீதிமன்ற விசாரணையில் நடந்தது என்ன..?’’

அமைச்சர் செந்தில் பாலாஜியை, காவேரி மருத்துவமனைக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த விவகாரத்தில், அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்ட நீதிபதிகள், செந்தில் பாலாஜியின் மனைவி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு தொடர்பாக ஜூன் 22- ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறும் அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரான வி. செந்தில் பாலாஜியை, ஒன்றிய பாஜக அரசின் அமலாக்கத்துறையானது, சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் செவ்வாயன்று நள்ளிரவு 1.30 மணிக்கு கைது செய்தது. பின்னர் அவரை, நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

ஆனால், செந்தில் பாலாஜி விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டாரா, அல்லது கைது செய்யப் பட்டுள்ளாரா? என்று எந்தத் தகவலையும் குடும்பத்தினருக்கு அமலாக்கத்துறை தெரிவிக்கவில்லை. செந்தில் பாலாஜி மாநில அமைச்சர் என்ற வகையில், அவர் மீதான கைது நடவடிக்கையை, சட்டப்பேரவைச் செயலகம் மூலமாக சபாநாயருக்கு தெரிவிக்கவில்லை. இதுதொடர்பாக கேள்விகள் எழுந்த பின்னணியில், செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதற்கான ஆவணங்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியிடம் அமலாக்கத் துறையினர் தாக்கல் செய்தனர். மருத்துவர் சான்றிதழ்களையும் அளித்தனர். ஓமந்தூரார் மருத்துவமனைக்கு நீதிபதி எஸ். அல்லி நேரில் வந்து, செந்தில் பாலாஜியின் கைதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். அதன்படி புதன்கிழமையன்று பிற்பகல் 3.30 மணிக்கு மருத்துவமனைக்கு வந்த நீதிபதி எஸ். அல்லி, செந்தில் பாலாஜியை ஜூன் 28 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

முன்னதாக, தனது கணவரை அமலாக்கப் பிரிவினர் சட்டவிரோத காவலில் வைத்துள்ளதாகவும், அவரை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என செந்தில் பாலாஜி யின் மனைவி மேகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் புதனன்று காலை ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள் சுந்தர் மற்றும் சக்திவேல் அமர்வில் பிற்பகலில் விசாரணைக்கு வரவிருந்த நிலையில், நீதிபதி சக்திவேல் இந்த வழக்கு விசாரணையிலிருந்து விலகிக் கொண்டார். இதனால், புதனன்று விசாரணை நடைபெறவில்லை. வியாழனன்று பிற்பகலில், நீதிபதிகள் நிஷா பானு, பரதசக்ரவர்த்தி அமர்வில் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் பின்னணி, கைதுக்கான காரணம், கைது நேரம் உள்ளிட்டவை குறித்து நீதிபதிகள் விசாரித்தனர்.

செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞரும், திமுக எம்.பி.யுமான என்.ஆர். இளங்கோ, அமலாக்கத் துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் உள்ளிட்டோர் ஆஜராகி வாதங்களை வைத்தனர். என்.ஆர். இளங்கோ வாதிடுகை யில், “கைது சம்பந்தமாக எந்த தகவலும் தெரிவிக்காததால் செந்தில் பாலாஜியின் கைது சட்டவிரோதமானது. கைது செய்யப்படும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை” என்றார். “செந்தில் பாலாஜியை ஏற்கெனவே நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டு விட்டதால் ஆட்கொணர்வு மனு செல்லாது. அத்துடன், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டம், சிறப்புச் சட்டம் என்பதால், குற்ற விசாரணை முறைச் சட்டம் இதற்கு பொருந்தாது” என்று அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

அப்போது, “ரிமாண்ட் சட்டவிரோதமாக இருந்தால் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யலாம்” என ஏற்கெனவே உச்சநீதிமன்றம் கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டிய என்.ஆர். இளங்கோ, ஆட்கொணர்வு மனு செல்லத்தக்கதுதான் என்று பதிலடி கொடுத்தார். “மேலும், மருத்துவப் பரிசோதனையில் செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் 3 அடைப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. பைபாஸ் அறுவை சிகிச்சை உடனடியாக நடத்த மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதனால் தனிப்பட்ட மருத்துவர் சிகிச்சை வழங்க அனுமதிக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.

அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன், “நீதிமன்றக் காவலில் வைத்த உத்தரவு சரியா? இல்லையா? என உயர் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்ப முடியாது” என்று தெரிவித்ததோடு, “தமிழ்நாடு அரசின் மருத்துவக்குழு அளித்த அறிக்கையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை” என்றும் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை எய்ம்ஸ் மருத்துவர்களைக் கொண்டுதான் பரிசோதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அதற்கு, ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள இஎஸ்ஐ மருத்துவ அறிக்கையை அமலாக்கத்துறை ஏற்கவில்லை என்றால், தாராளமாக எய்ம்ஸ் மருத்துவர்களைக் கொண்டு சோதிக்கலாம். ஆனால், மதுரை எய்ம்ஸ் கிடையாது; டெல்லி எய்ம்ஸ்” என்று அரசியல் ரீதியாகவும் என்.ஆர். இளங்கோ பதிலடி கொடுத்தார்.

இதனை எதிர்பார்க்காத அமலாக்கத்துறை தரப்பினர், “செந்தில் பாலாஜிக்கு உடனடி சிகிச்சைக்கான தேவையே இல்லை” என்று அடுத்த விஷயத்திற்குத் தாவினர். “செந்தில் பாலாஜி உடல்நிலையை கண்காணிக்க சுதந்திரமான மருத்த வக் குழுவை அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். செந்தில் பாலாஜியை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றக் கூடாது, தனியாருக்கும் மாற்ற கூடாது” என்றனர். “செந்தில் பாலாஜி, முதல்நாள் வரை ஆரோக்கியமாக இருந்த நிலையில், திடீரென எப்படி உடல் நிலை மோசமாகும்?” என்றும் கேள்வி எழுப்பினர்.

இருதரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில், ஆட்கொணர்வு மனு மீதான உத்தரவை பிற்பகலுக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். பின்னர் நீதிமன்றம் மீண்டும் கூடியபோது, அமைச்சர் செந்தில் பாலாஜி ஜூன் 28 வரை நீதிமன்றக் காவலில் நீடிக்க வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள், அவரது மனைவி தரப்பு கோரிக்கையை ஏற்று செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளித்து உத்தரவிட்டனர். மேலும், மருத்துவர்களின் பரிந்துரையை சந்தேகிக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், சிகிச்சையை அமலாக்கத்துறை நியமிக்கும் மருத்துவர்கள் குழுவும் ஆராயலாம் என்று தெரிவித்து, ஆட்கொணர்வு மனு மீதான அடுத்தகட்ட விசாரணை யை ஜூன் 22-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here