கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ள காங்கிரஸ் அரசு ஆட்சி பொறுப்பில் அமர்ந்தவுடன் தேர்தல் வாக்குறுதிகளை சொன்னபடியே நிறைவேற்றுவதாக அறிவித்தது. அதன்பிறகு முந்தைய பாஜக கொண்டு வந்த சில சட்டங்களை உடனே நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தது. இப்போது அதில் தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில், முந்தைய பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட மத மாற்ற தடைச் சட்டத்தை ரத்து செய்வ தென சித்தராமையா தலைமையிலான கர்நாடக காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது. அதேபோல அரசியல் சாசன முகவுரையை பள்ளி, கல்லூரிகளில் கட்டாயமாக்கவும், வி.டி. சாவர்க்கர், கே.பி. ஹெட்கேவார் பற்றிய பாடங்களை நீக்கவும் அதிரடியாக முடிவெடுத்துள்ளது. முதல்வர் சித்தராமையா தலைமையில் வியாழனன்று கர்நாடக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில், இதுதொடர்பான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கர்நாடக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் எச்.கே. பாட்டீல் செய்தியாளர்கள் மத்தியில் அறிவித்தார்.
‘விருப்பம்’, ‘வற்புறுத்தல்’, ‘பல வந்தம்’, ‘மோசடி வழிமுறைகள்’ மற்றும் ‘வெகுஜன மதமாற்றம்’ மூலம் மதமாற்றம் செய்வதைத் தடுக்கிறோம் என்ற பெயரில், முந்தைய பாஜக அரசு 2021 டிசம்பரில், மதமாற்றத் தடைச் சட்டத்தை கொண்டு வந்தது. இந்த அவசரச் சட்டத்திற்கு கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட் 2022 மே 17 அன்று ஒப்புதல் அளித்தார். பின்னர், நடைமுறையில் இருந்த அவசரச் சட்டத்திற்குப் பதிலாக, செப்ட ம்பர் மாதம் மசோதா தாக்கல் செய்யப் பட்டு, அது சட்டப் பேரவை நிறை வேற்றம் மூலம் நிரந்தர சட்டமாகவும் ஆக்கப்பட்டது.
‘கட்டாய மத உரிமை சட்ட மசோதா 2021’ என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்தை மீறி, மதமாற்றத்தில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதற்கு அப்போதே எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. பாஜக அரசின் சட்டமானது, இந்திய அரசியலமைப்புச் சட்டம் 25 மற்றும் 26-ஆவது பிரிவுகளுக்கு எதிரானது என்று கண்டனங்கள் எழுந்தன. எனினும், இந்தச் சட்டத்தை, தனது இந்துத்துவா அரசியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்படை யில், கர்நாடகத்தில் அமல்படுத்தியது.
இந்நிலையில்தான், அண்மையில் பாஜக-வைத் தோற்கடித்து, கர்நாட கத்தில் ஆட்சிக்கு வந்துள்ள காங்கிரஸ் அரசு, முந்தைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மதமாற்றத் தடைச் சட்டத்தை ரத்து செய்வதென அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்துள்ளது. அதேபோல, பாஜகவின் சித்தாந்த வழிகாட்டியான ஆர்எஸ்எஸ் நிறு வனர்களில் ஒருவரான வி.டி. சாவர்க்கர் மற்றும் கே.பி. ஹெட்கேவார் பற்றிய அத்தியாயங்களையும் பள்ளி வர லாற்றுப் புத்தகங்களில் இருந்து நீக்க தீர்மானித்துள்ளது.
மேலும், பாஜக ஆட்சியில் இருந்த போது இயற்றப்பட்ட வேளாண் சந்தைகள் (APMC) தொடர்பான சட்டத்தை நீக்கிவிட்டு, புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தவும் முடிவு செய்துள்ள சித்தராமையா அமைச்சரவை, கர்நாடகாவிலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியார் பள்ளி – கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிலும் அரசியல் சாசன முகவுரை இடம்பெறுவதையும், அதனை வாசிப்பதையும் கட்டாயமாக்கும் மற்றொரு சிறப்பான முடிவையும் எடுத்துள்ளது“பாடப்புத்தகத்தில் ஹெட்கேவர் குறித்து இடம் பெற்றுள்ள பாடம் நீக்கப்படுகிறது. பாடப் புத்தகங்களில் முந்தைய பாஜக அரசு என்னவெல்லாம் மாற்றங்களை செய்திருந்ததோ அவை அனைத்துமே நீக்கப்படும்” என்று கர்நாடகா கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா கூறியுள்ளார்.
அரசியல் சாசன முகவுரை, கல்வி நிலையங்களில் இடம்பெறும் உத்தரவு குறித்து பேசியிருக்கும் சமூக நலத்துறை அமைச்சர் எச்.சி. மகாதேவப்பா, “இது தேசத்தைக் கட்டி யெழுப்புவதற்கும், அனைத்து சமூகத் தினரிடையே சகோதரத்துவத்தை மேம்படுத்துவதற்கும் இளைஞர்களை ஊக்குவிக்கும்” என்று கூறியுள்ளார். “இவ்வளவு சிறந்த அரசியலமைப்பைக் கொண்டுள்ள நமது இளைஞர்கள் ஒவ்வொரு நாளும் அதன் முகவுரை யைக் கட்டாயம் படிக்க வேண்டும்,” என்றும் தெரிவித்தார். அரசு அலுவலகங்களிலும் அரசியல் சாசன முக வுரை இடம்பெற வேண்டும் என்றார்.
கர்நாடக காங்கிரஸ் அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. “காங்கிரஸுக்கு முஸ்லிம்கள் வாக்குகள் தேவை. சித்தராமையா அரசாங்கம் இந்துக்களுக்கு எதிரானது. ஹிஜாப் பை கூட மீண்டும் சித்தராமையா அரசு அனுமதிக்கக் கூடும். சிறுபான்மையினர் வாக்குகளைப் பெறுவதற்காக அனைத்தையும் அரசியலாக்குகிறது சித்தராமையா அரசு” என்று கர்நாடகா மாநில முன்னாள் கல்வித்துறை அமைச்சர் பி.சி. நாகேஷ் கடுமையாக கண்டித்துள்ளார்.

