Madras Murasu

ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் அமைதி முயற்சிகளுக்கு சவால்

ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் முடிவுக்கு வருவதற்கான ராஜதந்திர முயற்சிகள் ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் இரு நாடுகளும் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருவது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

நவம்பர் 26ஆம் தேதி அதிகாலை உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள வணிக வளாகம் உள்ளிட்ட கட்டடங்கள் தாக்குதலுக்கு உள்ளானதாக நகர மேயர் விட்டாலி கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலில் ஏழு பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் இருவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதுடன், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

இதற்கிடையில், ரஷ்யாவின் தெற்குப் பகுதியில் உள்ள தொழில்துறை மையம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாகவும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவின் ஸ்டாவ்ரோபோல் பகுதியில் உள்ள நெவின்னோமிஸ்க் தொழில்துறைப் பகுதியில் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ரஷ்யாவின் ராணுவ விமானப்படைத் தளம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் அதிபர் வொலோதிமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். தாக்குதலால் ஏற்பட்ட சேதங்கள் மதிப்பிடப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையே போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் குறித்த செய்திகள் வெளியாகும் அதே நேரத்தில், தொடர்ந்து நடைபெறும் தாக்குதல்கள் அமைதி முயற்சிகளுக்கு சவாலாக அமைந்துள்ளன.

Scroll to Top