Madras Murasu

இந்தியப் பொருட்களுக்கு 25% வரி விதிக்க அமெரிக்கா திட்டம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ள புதிய இறக்குமதி வரி விதிப்புத் திட்டம் உலகப் பொருளாதாரத்தில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட 14 முக்கிய வர்த்தகக் கூட்டாளி நாடுகளின் பொருட்களுக்கு புதிய வரிகளை விதிக்க அமெரிக்கா முன்மொழிந்துள்ளது.

அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் (USTR) மேற்கொண்ட எட்டு மாத கால விசாரணைக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரை கூடுதல் இறக்குமதி வரி விதிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால் இந்த வரி 17 சதவீதமாகக் குறைக்கப்படலாம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி அதிகரிப்பு, சந்தை அணுகல் கட்டுப்பாடுகள் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு தொடர்பான குறைபாடுகளை அமெரிக்கா தனது வரி விதிப்புக்கான காரணங்களாக முன்வைத்துள்ளது.

இதற்கு இந்திய வர்த்தக அமைச்சகம், அமெரிக்காவின் அறிவிப்பை ஆய்வு செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின் தாக்கம் சர்வதேசப் பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்துள்ளது. அமெரிக்காவின் நாஸ்டாக், எஸ் அண்ட் பி 500 உள்ளிட்ட முக்கியப் பங்குச்சந்தைக் குறியீடுகள் சரிவைச் சந்தித்தன.

தொழில்நுட்ப நிறுவனப் பங்குகளிலும் விற்பனை அழுத்தம் அதிகரித்தது. முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளை நோக்கித் திரும்பியதால் அரசுப் பத்திரங்களுக்கான தேவையும் அதிகரித்தது.

புதிய வரிகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு பொதுமக்களின் கருத்துகள் கேட்கப்பட்டு விசாரணை நடத்தப்பட உள்ளது. இதற்கான நடைமுறை முடிவுகள் அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியாக வாய்ப்புள்ளது.

அமெரிக்காவின் இந்த வர்த்தகக் கொள்கை உலக நாடுகளின் ஏற்றுமதி, முதலீடு மற்றும் பொருளாதார வளர்ச்சியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது சர்வதேச அளவில் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது.

 

Scroll to Top