’’திறமையான நிர்வாகத்தின் மூலம் வளர்ச்சிப் பணிகளை, நாள்தோறும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வருகிறார்’’ என்று 66 ஆம், காமன்வெல்த் பாராளுமன்ற சங்க மாநாட்டின் கருத்தரங்கில் தமிழ்நாடு கிளையின் பிரதிநிதியாக சபாநாயகர் மு.அப்பாவு பேசினார்.
கானா நாட்டின் தலைநகர் அக்ரா நகரத்தில் 4.10.2023 அன்று நடைபெற்ற 66 ஆம், காமன்வெல்த் பாராளுமன்ற சங்க மாநாட்டின் கருத்தரங்கில் தமிழ்நாடு கிளையின் பிரதிநிதியாக தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு கலந்துகொண்டு பேசியதாவது:
சட்டமன்றம், நீதிமன்றம் மற்றும் நிர்வாகம் ஆகியவற்றில் அதிகார பகிர்வுகள் மற்றும் ஊடுருவல்கள் குறித்து லாடிமர் ஹவுஸ் கோட்பாடுகள் 2003 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதிலிருந்து, பல காமன்வெல்த் நாடுகளில் அதிகாரப் பகிர்வுகளை உறுதிப்படுத்துவதிலும், நல்லாட்சியை மேம்படுத்துவதிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என நான் கருதுகிறேன்.
இருந்தபோதிலும், காமன்வெல்த் நாடுகள் பலவற்றிலும், இக்கோட்பாடுகளை கடைபிடிப்பதில், பல்வேறு சவால்கள் மற்றும் தடைகள் நீடிக்கின்றன. இந்த கோட்பாடுகள் காமன்வெல்த் நாடுகளில் ஜனநாயக வளர்ச்சி மற்றும் நிர்வாகத்தை தொடர்ந்து வழிநடத்துவதை உறுதி செய்ய தொடர் முயற்சிகள் தேவை.
ஒவ்வொரு உறுப்பு நாடுகளிலும் குறிப்பிட்ட வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் பரவலாக வேறுபடலாம். மேலும், 2023-ல் இந்த கோட்பாடுகளின் நிலை ஒவ்வொரு நாட்டின் தனிப்பட்ட சூழ்நிலைகளைப் பொறுத்தது என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம்.
தமிழ்நாட்டில் 5 முறை முதலமைச்சராக பொறுப்பேற்று, செம்மையாக ஆட்சி செய்து, தான் போட்டியிட்ட 13 சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றிபெற்ற டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை இப்போது கொண்டாடுகிறோம்.
இந்த நேரத்தில், திறமையான நிர்வாகத்தின் மூலம் வளர்ச்சிப் பணிகளை, நாள்தோறும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வருகிறார். அவரின் ஆட்சிக்காலத்தில், தமிழக சட்டமன்றப் பேரவை நடவடிக்கைகளில் லாட்டிமர் ஹவுஸ் கோட்பாடுகளை கடைபிடிக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறேன். சட்டமன்றம், நீதிமன்றம், நிர்வாகம் ஆகிய ஒவ்வொரு பிரிவும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்படும் என உறுதியாக நம்புகிறேன்.
இந்த மாநாட்டில் பங்கேற்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது குறித்து என்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்வதோடு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வணக்கம்!
இவ்வாறு சபாநாயகர் மு.அப்பாவு பேசினார்.
இந்நிலையில் தனது வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு அவர் இன்று சென்னை திரும்பினார்.