ஜி.வசந்த பாலன் இயக்கத்தில் அர்பன் பாய்ஸ் நிறுவனத்தின் ‘அநீதி’ திரைப்படம் ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஜுலை 21 அன்று வெளியானது. இந்த படம் பற்றி நிறைய பேர் விமர்சனம் எழுதியுள்ளனர். அச்சு ஊடகம், டிஜிட்டல் என்று பல்வேறு தளங்களில் விமர்சனங்கள் வநதுவிட்டன. இந்த அனைவராலும் நன்கு அறியப்பெற்ற மருத்துவ கு.சிவராமன், தனது முகநூல் பக்கத்தில் ’அநிதி’ படம் குறித்து எழுதியுள்ளார். படியுங்கள். உங்கள் கருத்தையும் பதிவு செய்யுங்கள்.
‘’கைகளில் காதலைச் சொல்ல முடியும்
தோள்சாய்வதில் தொலைவதைச் சொல்லமுடியும்
கண்களில் வலியைச் சொல்ல முடியும்
கவியில் மலர்தலைச் சொல்ல முடியும்”
என பாலன் சக மனிதனின் வாழ்வைச் சொல்லியிருப்பது அநீதியில்!
மானுடத்தின் அநீதியில் இந்த மொத்த உலகமும் விக்கித்த நின்ற போது, சக மனிதனின் வாழ்வின் அநீதியை பாலன் சிந்தித்து படைத்துள்ளார். நடு இரவில், தன் முதுகில் எவருக்கானதோவான தூக்குச்சட்டியை சுமந்து செல்பவனின் பசியை அநீதி நமக்குப் பரிமாறுகிறது.
“எனக்குத் தெரியும் சுப்பு. அப்பவே தெரியும் சுப்பு.‘தூறலில் நனையாதே என்கிற குரலும் ; துவட்டிக்கொள்ள துண்டு கொடுக்கும் கைகளும்’ ஒருபோதும் முதலாளியுடையதாக இருக்கவே இருக்காது ” என்கிற அர்ஜுன்தாசின் கரகரத்த குரல் காட்சிப்படுகையில் அந்தப்பின்னிரவில் பிவீஆர் தியேட்டரின் தன் பகலெல்லாம் பணி செய்து தன் வலி நிறைந்த கைகளால், கைதட்டிக் கொண்டே என் பக்கத்து சீட்டு இளைஞன் கண்ணில் மட்டும் துளி கண்ணீர் ஒட்டி இருந்தது உண்மை.
கதவுக்கு அந்தப்பக்கம் “அவ்வளவுதானா?” என்ற ஒற்றைச் சொல்லில் வழிந்த காதலும் “ஏன் சுப்பு இப்டி பண்ணிட்டே?” ங்கிற இடத்தில் வழிந்த கண்ணீரும் அங்காடித் தெருவின் அழியாத ஞாபகங்கள்.
ஆம்! அநீதியின் அவலக் குரலில், மதயானைக் காட்டில், ஈசலின் இறக்கைக்கும் இருக்கைக்குமான இடத்தை வரைந்திருக்கின்றீர்கள் வசந்தபாலன் சார். வாழ்த்துக்கள்!
சாக்லேட்டின் நெகிழி உறையில் மட்டுமல்ல, படம்பார்த்து வெளிவரும் பலரின் மனசிலும் யாரோ எறிந்த மயோனைசும் கொஞ்சம் குருதியும் ஒட்டிக்கொண்டு இருந்தது.!